/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
விஜய் கட்சியில் சேர தயாராகும் மாஜி அமைச்சர்!
/
விஜய் கட்சியில் சேர தயாராகும் மாஜி அமைச்சர்!
PUBLISHED ON : செப் 11, 2024 12:00 AM

''எழுத்தாளருக்கு எதிரா பதிவுகள் போட்டுட்டு இருக்காங்க...'' என்றபடியே, இஞ்சி டீயை உறிஞ்சினார் அந்தோணிசாமி.
''யாருப்பா அது...'' என கேட்டார், அன்வர்பாய்.
''துாத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மன்... சமீபத்துல வெளியாகி பரபரப்பா பேசப்பட்ட, வாழை படம் குறித்து, 'பேஸ்புக்'ல ஒரு பதிவு போட்டிருந்தாருங்க...
''அதுல, '10 வருஷத்துக்கு முன்னாடி, நான் எழுதிய வாழையடி சிறுகதையில் இடம்பெற்ற சம்பவங்கள், வாழை படத்தில் அப்படியே இருக்கு...
''ஆனா, என் கதையில் டீச்சர், கர்சீப், காலாவதி பொருட்கள், கம்னியூஸ்ட் கட்சி சின்னம், கிளைமாக்ஸ் விபத்து எதுவும் இருக்காது'ன்னு குறிப்பிட்டிருந்தாருங்க...
''இதனால, கம்யூ., தோழர்கள் கடுப்பாகிட்டாங்க... 'வாழை தொழிலாளர்களுக்காக போராடிய கம்யூனிஸ்ட்கட்சி குறித்து எப்படி தர்மன் விமர்சிக்கலாம்'னு'பேஸ்புக்'ல அவருக்குஎதிரா பதிவுகள் போட்டிருக்காங்க...
''அதை பார்த்த தர்மனோ, 'அட, நானே ஒரு தொழிற்சங்கவாதிதான்... அப்புறமா தான் எழுத்தாளர்... இதுக்கு எல்லாம்பதில் சொல்லிட்டிருக்க முடியாது'ன்னு விலகி போயிட்டாருங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''பயங்கர குழப்பத்துல இருக்காரு பா...'' என, அடுத்த தகவலுக்குமாறினார், அன்வர்பாய்.
''யாரை சொல்லுதீரு வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''சென்னை ஏர்போர்ட் பக்கத்துல இருக்கிற, சுங்கத்துறை அலுவலக உயர் அதிகாரியை தான் சொல்றேன்... ஏர்போர்ட்ல கிலோ கணக்குல தங்கம் கடத்தல் சம்பவம் வெளியே வந்ததும், அதிகாரிக்கு மேலிடத்துல இருந்து செமத்தியா, 'டோஸ்' விழுந்திருக்குது பா...
''இதனால, கடந்த ரெண்டு மாசமா அதிகாரி, யாரையும் சந்திக்கவே மாட்டேங்கிறாரு... ஆபீஸ்லயே இருந்தாலும், அவரை தேடி வர்றவங்களிடம், 'ஐயா, டில்லி போயிருக்காரு... வர, நாலு நாள் ஆகும்'னு சொல்லிடுறாங்க பா...
''அட, தன் துறை சம்பந்தமா விவாதிக்க வர்ற அதிகாரிளை கூட பார்க்க மாட்டேங்கிறாரு... தனக்கு கீழே இருக்கிற அதிகாரிகள், ஊழியர்களிடமும், 'ஏர்போர்ட்ல நடக்குற எந்த விஷயத்தை பத்தியும், யாரும் மூச்சு கூட விடக் கூடாது'ன்னு சொல்லி வச்சிருக்காரு பா...'' என்றார், அன்வர்பாய்.
''விஜய் கட்சியில யார் யார் சேருவான்னு பட்டிமன்றமே நடக்கறது ஓய்...'' என, கடைசி தகவலுக்கு தடம் மாறினார் குப்பண்ணா.
''உங்களுக்கு தெரிஞ்சதை சொல்லுங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''தென் மாவட்டத்தைசேர்ந்த அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்ஒருத்தர், விஜய் கட்சியில சேர தயாராயிட்டார்னு சொல்றா... ஜெ., காலத்துல ஆட்சியிலும், கட்சியிலும் முக்கிய பதவிகள்ல இருந்தவருக்கு, இப்ப, 'டம்மி' பதவி தான் தந்திருக்கா ஓய்...
''அது போக, குடும்பத்துல ஏற்பட்ட குழப்பங்களாலும், கட்சியில தாமரை இலை தண்ணீர் மாதிரி தான் இருக்கார்... இந்த சூழல்ல, விஜய் கட்சியில, முதல் ஆளா சேர முடிவு பண்ணியிருக்கார் ஓய்...
''அப்ப தான், தன்னை, 'செல்லமா' வச்சுப்பான்னும் நினைக்கறார்... இதுக்காக, தன் ஆதரவாளர்களையும் திரட்டிண்டு இருக்கார்னு தென்மாட்டங்கள்ல பரபரப்பா பேசிக்கறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
பெஞ்சில் மேலும் சிலர் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.