/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
அலைக்கழிக்கப்படும் பட்ட மேற்படிப்பு டாக்டர்கள்!
/
அலைக்கழிக்கப்படும் பட்ட மேற்படிப்பு டாக்டர்கள்!
PUBLISHED ON : மே 31, 2024 12:00 AM

கருப்பட்டி காபியை பருகியபடியே, ''பணத்தை சுருட்டி, பாக்கெட்டுல போட்டுக்கிடுதாங்கல்லா...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.
''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''தமிழகம் முழுக்க அரசு பள்ளிகள்ல மராமத்து மற்றும் புனரமைப்பு பணிகளுக்கு, அரசு வருஷா வருஷம் நிதி வழங்கும்... மாணவ - மாணவியரின் எண்ணிக்கையை பொறுத்து, ஒரு பள்ளிக்கு தலா 20,000 முதல் 1 லட்சம் ரூபாய் வரைக்கும் ஒதுக்குவாவ வே...
''பள்ளி மேலாண்மை குழு வழியா தான் இந்த பணத்தை செலவு செய்யணும்... ஆனா, கோவை மாவட்டத்தில் ஒரு சில தலைமை ஆசிரியர்கள், அந்த பணத்தை தங்களது பாக்கெட்டுல போட்டுக்கிடுதாவ வே...
''இதுக்கு போலி பில்களையும் வச்சுடுதாவ... பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள், இந்த விஷயத்துல நடவடிக்கை எடுக்கணும்னு, நேர்மையான ஆசிரியர்கள் புலம்புதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''பதவிக்காக சிண்டிகேட் போட்ட கதையை கேளுங்கோ ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''எந்த கட்சியில பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''மதுரையில், சமீபத்துல தி.மு.க., முக்கிய புள்ளி ஒருத்தரின் பிறந்த நாள் விழா, பிரமாண்டமா நடந்துது... இதுல, தற்போதைய மாநகர மாவட்ட செயலர் தளபதிக்கு எதிரா இருக்கற நிர்வாகிகள் ஒட்டுமொத்தமா கலந்துண்டா ஓய்...
''அப்ப, அவாளுக்குள்ள ஒரு சிண்டிகேட் மாதிரி அமைச்சிருக்கா... அதாவது, இரண்டு சட்டசபை தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலர் திட்டத்தை அமல்படுத்த உதயநிதி பிளான் போட்டிருக்காரோன்னோ...
''அப்ப, 'நம்ம யாருக்கும் மாவட்ட செயலர் பதவி கிடைச்சா, மத்தவா குறுக்கே புகுந்து தடுக்கப்டாது... அதே நேரம், தளபதி தரப்புக்கு மாவட்ட செயலர் பதவிகள் போயிடாம பார்த்துக்கணும்'னு பேசி முடிவு பண்ணி யிருக்கா... இதை கேள்விப்பட்டு, தளபதி வட்டாரம் அதிர்ச்சியில இருக்கு ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''அரசு டாக்டர்களை அலைக்கழிக்கிறாங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''திருவாரூர் அரசு மருத்துவ கல்லுாரி முதல்வர் சமீபத்துல வெளியிட்டுள்ள உத்தரவில், 'பொது மருத்துவம் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மருத்துவபட்டமேற்படிப்பு மாணவர்கள் மூணு பேர், நாகை கல்லுாரியில் கடந்த 24ம் தேதி முதல் அடுத்த மாதம் 7ம் தேதி வரை பணி செய்யணும்'னு அறிவுறுத்தியிருக்காருங்க...
''இது சர்ச்சையை கிளப்பியிருக்குதுங்க... 'ஏற்கனவே, திருவாரூர் மருத்துவமனை புற நோயாளிகள் பிரிவில், வேலைப்பளு அதிகமாக இருக்கிற சூழல்ல, இங்குள்ள டாக்டர்களைவேறு மருத்துவமனைக்கு அனுப்புவது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும்... இன்னொரு புறம், இருக்கிற டாக்டர்களின் பணிச்சுமை மேலும் அதிகரிக்கும்... அதுமட்டுமின்றி, படிக்கிறதுக்காக வந்த பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவர்களின் கல்வியிலும் இடையூறை ஏற்படுத்தும்...
''அதுவும் இல்லாம, நாகை மருத்துவ கல்லுாரியில் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை பிரிவு, மகப்பேறு துறை உட்பட அனைத்து துறைகளிலும் போதிய டாக்டர்கள் இல்லை...
''அவற்றை நிரப்ப நடவடிக்கை எடுக்கணும்'னு முதல்வர் ஸ்டாலினுக்கு அரசு டாக்டர்கள் தரப்பு கடிதம் அனுப்பியிருக்குதுங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
அரட்டை கச்சேரி முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.