PUBLISHED ON : ஏப் 24, 2024 12:00 AM

தமிழக அரசும், தொழிலாளர் நல ஆணையமும், சிறு கடைகள் முதல் வணிக நிறுவனங்கள் வரை, அனைத்தின் பெயர் பலகைகளும் தமிழில் இருக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கும் வகையில், அரசாணைகள் பிறப்பித்தன.
ஆனால், நாட்டிலே மற்ற மாநிலங்களை காட்டிலும், தமிழகத்தில் தான் மாநில மொழிகளில் பெயர் பலகை வைப்பது குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக, தலைநகரான சென்னையில் பெயர் பலகையில் தங்கிலீஷ் இடம் பெற்ற காலம் போய், தற்போது சினிமாவுக்கு பெயர் வைக்கும் பாணியில், கடைகளுக்கு பெயர் வைப்பது 'டிரெண்ட்' ஆகி வருகிறது. படத்தலைப்புக்கு சினிமாக்காரர்கள் தடுமாறி வரும் நிலையில், அவர்களுக்கே 'டப்' கொடுக்கும் வகையில், கடைக்காரர்கள் பெயர் வைத்து வருகின்றனர்.
இது குறித்து துணிக்கடை வியாபாரி ஒருவர் கூறுகையில், காலத்திற்கு ஏற்றார் போல நாமும் மாற வேண்டும்; இன்றைய தலைமுறையை கவருவதற்காகவே, வித்தியாசமாக இருக்க பெயர் வைத்தோம். அது எளிதில் மக்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டது. 'சொல்லமாட்டே' துணிக்கடை தற்போது மூன்று கடைகளுடன் இயங்கி வருகிறது,'' என்றார்.
-- நமது நிருபர்- -

