/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ஓ.பி.எஸ்.,க்கு ஓட்டளிக்க வீடியோவில் 'பாடம்!'
/
ஓ.பி.எஸ்.,க்கு ஓட்டளிக்க வீடியோவில் 'பாடம்!'
PUBLISHED ON : ஏப் 09, 2024 12:00 AM

''கூட்டம் நடத்தி, 'கட்டிங்' கேட்டிருக்காங்க...'' என, இஞ்சி டீயை பருகியபடியே விவாதத்தை ஆரம்பித்தார், அந்தோணிசாமி.
''எந்த துறையில பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''திண்டுக்கல் மாவட்ட வேளாண்மை துறையில, 13 வட்டாரங்கள் இருக்கு... சமீபத்துல, இந்த 13 வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களை அழைச்சு, பெண் உயர் அதிகாரி ஆய்வு கூட்டம் நடத்துனாங்க...
''அப்ப, 'ஏப்ரல் மாத செலவுக்காக ஒவ்வொரு உதவி இயக்குனரும் தலா, 15,000 தரணும்'னு தடாலடியா கேட்டிருக்காங்க... இதைக் கேட்டு எல்லாரும் அதிர்ச்சி ஆகிட்டாங்க...
''ஏற்கனவே, மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 50க்கும் மேற்பட்ட, 'ரோட்டாவேட்டர்' உழவு கருவிகளை வழங்கிய தனியார் நிறுவனத்திடம், மாவட்ட அளவுல ரெண்டாவது இடத்துல இருக்கிற பெண் அதிகாரி தலா 3,000 ரூபாய் வீதம் வசூல் பண்ணியிருக்காங்க...
''தொடர்ந்து, மூன்றரை வருஷமா இதே பதவியில நீடிக்கிறவங்க, தேர்தல் நேரத்துல கூட இடமாறுதல் இல்லாம, உயர் அதிகாரிகள் ஆசியோட பணிபுரியுறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''தேர்தல் பணிக்கு யாரும் போகல ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''லோக்சபா தேர்தல் பணிக்கு, அரசின் பல துறைகள்ல இருந்தும் அதிகாரிகள், ஊழியர்கள் போயிருக்கா... வழக்கமா, சி.எம்.டி.ஏ.,வுல இருந்து, 250க்கும் மேற்பட்டோர் தேர்தல் பணிக்கு போறது வழக்கம் ஓய்...
''ஆனா, இந்த முறை யாரும் தேர்தல் பணிக்கு போகல... இது சம்பந்தமா விசாரிச்சப்ப, தங்களது ஊழியர்களை தேர்தல் பணிக்கு அனுப்ப, துறையின் உயர் அதிகாரிகள், 'பர்மிஷன்' தரல ஓய்...
''கிளாம்பாக்கம் புது பஸ் நிலைய பராமரிப்பு பணிகளால, தேர்தல் பணிக்கு வர முடியாதுன்னு சாக்கு போக்கு சொல்லியிருக்கா... ஆனா, கிளாம்பாக்க பஸ் நிலைய பராமரிப்பு பணிகளை தனியாரிடம் ஒப்படைச்சுருக்கா ஓய்...
''அங்க, சி.எம்.டி.ஏ., அதிகாரிகளுக்கோ, ஊழியர்களுக்கோ எந்த வேலையும் இல்ல... 'அப்படி இருந்தும் தேர்தல் பணிகளை எதுக்காக அவாய்ட் பண்ணான்'னு சி.எம்.டி.ஏ., வட்டாரத்துல பரபரப்பா பேசிக்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''முன்னாள் முதல்வரை ஜெயிக்க வைக்க, வாக்காளர்கள் எப்படி ஓட்டு போடணும்னு, படம் வரைஞ்சு பாகம் குறிக்காத குறையா விளக்கியிருக்காரு வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.
''விளக்கமா சொல்லுங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''ராமநாதபுரம் தொகுதியில பா.ஜ., அணியில, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுதாரே... சுயேச்சை கணக்குல இவர் போட்டியிடுறதால, பலாப்பழம் சின்னத்தை ஒதுக்கியிருக்காவ வே...
''பன்னீர்செல்வம் அணியின் காஞ்சிபுரம்மாவட்ட செயலர் ரஞ்சன்குமார், ஒரு வீடியோவை வெளியிட்டிருக்காரு... அதுல, 'ராமநாதபுரம் தொகுதி வாக்காளர்கள், ஓட்டுப்பதிவு இயந்திரத்துல, இரண்டாவது மிஷின்ல, 22வது பட்டனை அழுத்தணும்... அங்க தான் நமது பன்னீர்செல்வத்தின் பலாப்பழம் சின்னம் இருக்கும்'னு வீடியோ காட்சியா விளக்கியிருக்காரு வே...
''இதை, அவரது அணியினர் ராமநாதபுரம் தொகுதி முழுக்க சமூக வலைதளங்கள்ல பரப்பிட்டு இருக்காவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
அரட்டை முடிவுக்கு வர, பெஞ்ச் கலைந்தது.

