/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
அஸ்ரா கார்க் அதிரடியால் அலறும் மாமூல் போலீசார்!
/
அஸ்ரா கார்க் அதிரடியால் அலறும் மாமூல் போலீசார்!
PUBLISHED ON : மே 10, 2024 12:00 AM

''நிர்வாக இயக்குனரை காப்பாற்ற அமைச்சர் அலுவலக அதிகாரி, தீவிரமா முயற்சி பண்றாரு பா...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார், அன்வர்பாய்.
''எந்த துறையில வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''போன வருஷம், அக்டோபர் மாசம், விழுப்புரம் போக்குவரத்து கழக பஸ்சில் ஒரு போதை பயணி துாங்கியது தெரியாம டிரைவரும், கண்டக்டரும் பஸ்சை டிப்போவுல விட்டுட்டு போயிட்டாங்க...
''நள்ளிரவு தட்டு தடுமாறி எழுந்த பயணி கீழே இறங்கியபோது, டிப்போவுக்கு வந்த வேற ஒரு பஸ் மோதி, அங்கயே இறந்து போயிட்டாரு பா...
''இது சம்பந்தமா போலீசாரின் எப்.ஐ.ஆரிலும், தொழிற்சாலை ஆய்வாளர் துணை இயக்குனர் அறிக்கையிலும், போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனரையும் இணைத்து, அவர் மீதும் கவன குறைவுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தியிருக்காங்க...
''நிர்வாக இயக்குனரோ, 'என் கட்டுப்பாட்டின் கீழ் ஏழு மண்டலங்களை நிர்வகிப்பதால், எனக்கு இதுல நேரடி சம்பந்தமில்லை'ன்னு விளக்கம் தந்திருக்காரு பா...
''இந்த வழக்குல இருந்து நிர்வாக இயக்குனரை தப்பிக்க வைக்க, துறை அமைச்சர் அலுவலகத்துல பணிபுரியும் அதிகாரி ஒருத்தர் முயற்சி பண்றாரு...
''நிர்வாக இயக்குனர் சீக்கிரமே ஓய்வு பெற இருக்கிறதால, அவர் மேல எந்த புகாரும் இல்லாம அனுப்பணும்னு அந்த அதிகாரி பகீரத பிரயத்தனம் பண்ணிட்டு இருக்காரு பா...'' என்றார், அன்வர்பாய்.
''மூடிய குவாரிகளை திறந்து, பாறைகளை உடைக்கிறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''எந்த ஊருல பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''சேலம் மாவட்டத்தில், 90 கல் குவாரிகள் இருக்கு... இதுல, குத்தகை காலம் முடிந்த குவாரிகள், சுற்றுச்சுழல் அனுமதி பெறாததுன்னு 60க்கும் மேற்பட்ட குவாரிகள், மூணு மாசத்துக்கும் மேலா மூடி கிடக்குதுங்க...
''மல்லுார் பகுதியில், அனுமதி பெறாமல் இயங்கிய கல் குவாரிகளை மூடும்படி, கனிமவள துறை அதிகாரிகள், போன மாசம் நேர்ல போய் எச்சரிக்கை விடுத்தாங்க... ஆனா, காலையில 6:00 மணியில இருந்து 8:00 மணிக்குள்ள பாறைகளை உடைச்சு எடுத்துட்டு, குவாரியை மூடிட்டு போயிடுறாங்க...
''அதிகாரிகளுக்கு இது தெரிஞ்சாலும், குவாரிகள் தரப்பு அரசியல் பலத்துடன் செயல்படுறதால, கண்டும் காணாம இருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''மாமூல் வாங்க முடியாம தவிக்கறா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் அஸ்ரா கார்க்... 2004ல், ஐ.பி.எஸ்., அதிகாரியாகி, திருப்பத்துார் உதவி எஸ்.பி.,யா பணியை துவங்கினார்... அப்பறமா திருநெல்வேலி, மதுரை எஸ்.பி., உட்பட பல முக்கிய பதவிகள்ல இருந்தார் ஓய்...
''ஜாதி பிரச்னை, கந்துவட்டி, ரவுடிகளுக்கு சிம்மசொப்பனமா இருக்கும் அஸ்ரா கார்க், அதிரடி நடவடிக்கைக்கு சொந்தக்காரர்... இப்ப, சென்னை வடக்கு மண்டல கூடுதல் கமிஷனரா இருக்கார் ஓய்...
''உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசாரை விரட்டி வேலை வாங்கறதுடன், மாமூல், ஒருசார்பா செயல்படற போலீசார் மீது மெமோ, சஸ்பெண்ட்னு அதிரடி நடவடிக்கை எடுக்கறார்...
''இதனால, உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், 'கல்லா' கட்ட முடியாம தவிக்கறா... 'இவருக்கு டிரான்ஸ்பர் வந்தா தான், நாம நாலு காசு பார்க்க முடியும்'னு புலம்பறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
அரட்டை முடிவுக்கு வர, அனைவரும் கிளம்பினர்.