/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
தாமரை இலை தண்ணீராக பொறுப்பு அமைச்சர்!
/
தாமரை இலை தண்ணீராக பொறுப்பு அமைச்சர்!
PUBLISHED ON : ஆக 14, 2024 12:00 AM

''சீனியர் மேல ஜூனியர் கடும் கோபத்துல இருக்காரு வே...'' என்ற பரபரப்பான தகவலுடன், பெஞ்சுக்கு வந்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''முதல்வருக்கு அடுத்த இடத்துல இருக்கிற சீனியர் அமைச்சர் சமீபத்துல, ஒரு இணையதளத்துக்கு பேட்டி தந்தாரு... அதுல, கருணாநிதியுடன் தனது மலரும் நினைவுகளை பகிர்ந்துகிட்டாரு வே...
''அப்ப, கருணாநிதி முன்னிலையில், தன் சுய மரியாதைக்கு இழுக்கு ஏற்படுத்தியவரை தான் கடுமையா தாக்கியதாகவும், ஆபாச வார்த்தைகளால் திட்டி தீர்த்துட்டதாகவும் சொன்னாரு... அவர் சொன்ன சம்பவம் நடந்து, 40 வருஷமாயிட்டு வே...
''சீனியர் தாக்கியதா சொல்றவரும் காலமாகிட்டாரு... அவரது மகன், இந்த ஆட்சியில முக்கிய பொறுப்புல இருக்காரு... தன் தந்தையை அவமானப்படுத்தியதா கொடுத்த பேட்டியை பார்த்துட்டு, சீனியர் மேல மகன் கடும் கோபத்துல இருக்காரு வே...'' என்றார், அண்ணாச்சி.
''எதுவா இருந்தாலும், அவரை பார்த்துடுங்கன்னு தள்ளி விடுறாங்க பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
''கோவை மாவட்டம், காரமடை நகராட்சியில் ஆளுங்கட்சியை சேர்ந்த பெண்மணி தான் தலைமை பொறுப்புல இருக்காங்க... இவங்க கணவர் நகர தி.மு.க.,வுல முக்கிய புள்ளியா இருக்காரு பா...
''இதனால, நகராட்சி நிர்வாகத்துல அவரது தலையீடு அதிகமா இருக்குது... வார்டு தேவைகள் சம்பந்தமா, அதிகாரிகளிடம் கவுன்சிலர்கள் கோரிக்கை வச்சாலும், 'முக்கிய புள்ளியை பார்த்து கேளுங்க'ன்னு சொல்லிடுறாங்க பா...
''இதனால, நிறைய வார்டுகள்ல வளர்ச்சி பணிகள் முடங்கி கிடக்குது... 'அடுத்து வர்ற உள்ளாட்சி தேர்தல்ல, எப்படி மக்களிடம் போய் ஓட்டு கேட்கிறது'ன்னு கவுன்சிலர்கள் புலம்பிட்டு இருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''தாமரை இலை தண்ணீர் மாதிரி இருக்கார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''பற்றற்ற அந்த துறவி யாரு வே...'' என கேட்டார், அண்ணாச்சி.
''கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சரா இருந்த காந்தியின் செயல்பாடுகள் சரியில்லன்னு, அவரை மாத்திட்டு, உணவு துறை அமைச்சர் சக்கரபாணியை நியமிச்சு ஒரு வருஷம் ஓடிடுத்து... ஆனா, 'இவருக்கு அவரே தேவல போல'ன்னு தி.மு.க.,வினர் புலம்பறா ஓய்...
''காந்தியாவது, தான் தங்கியிருக்கும் அறைக்கே கட்சியினரை வரவழைச்சு குறைகளை கேட்பார்... ஆனா, சக்கரபாணி, தன் அறை பக்கமே கட்சியினர் யாரையும் சேர்க்கறது இல்ல ஓய்...
''பக்கத்துல கூட கட்சி நிர்வாகிகளை உட்கார விடறது இல்ல... கட்சியினரிடம் பிரச்னைகள் எதையும் கேட்கிறதும் இல்ல... ஓசூர் மாநகராட்சி தி.மு.க., கவுன்சிலர்கள், தங்கள் பிரச்னைகளை மாவட்ட பொறுப்பு அமைச்சரான சக்கரபாணியிடம் சொல்ல முயற்சி பண்ணியும் முடியல ஓய்...
''இதனால, வெறுத்து போனவா, மேயருக்கு எதிரா போட்டி கூட்டம் நடத்தியிருக்கா... அப்பறமா, அமைச்சர் நேரு தலையிட்டு, கவுன்சிலர்களை சமாதானப்படுத்தியிருக்கார்... இப்படி, பாராமுகமா சக்கரபாணி இருக்கறதால, அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு போகவே தி.மு.க., நிர்வாகிகள் விரும்ப மாட்டேங்கறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
பெஞ்சில் மேலும் சிலர் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.