/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
கோவில்கள் பக்கத்தில் மது கூடம் தேவையா?
/
கோவில்கள் பக்கத்தில் மது கூடம் தேவையா?
PUBLISHED ON : ஏப் 10, 2024 12:00 AM

''வாயில்லா ஜீவன்கள் நிதியிலயும் கை வச்சுட்டாவ வே...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''யாருங்க அது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''திருப்பூர் மாவட்டம், உடுமலை வனச்சரகத்துல, வனவிலங்குகள் தாகம் தீர்க்க, சிறப்பு திட்டத்தின் கீழ், தடுப்பணைகள், குடிநீர் தொட்டிகள் கட்டியிருக்காவ... இதை, மலைவாழ் மக்களை வச்சு பெயரளவுக்கு கட்டிட்டு, தாங்களே கட்டியதா கணக்கு காட்டி, வனத்துறை அதிகாரிகள் பல லட்சம் ரூபாயை சுருட்டிட்டாவ வே...
''ஏற்கனவே, யானை தந்தம் கடத்தல், சிறுத்தை பல், நகம் திருட்டுன்னு இந்த வனச்சரகத்துல ஏகப்பட்ட முறைகேடுகள் நடக்கு... இப்ப, குடிநீர் தொட்டிகள்லயும் கும்மி அடிச்சுட்டாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''சிவகுமார், இப்படி உட்காருங்க...'' என, நண்பருக்கு இடம் தந்த அன்வர்பாயே, ''நிதி பிரச்னையால, சத்தமில்லாம ஒதுங்கிட்டாங்க பா...'' என்றார்.
''தேர்தல் தகவலா ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''ஆமா... பா.ஜ., கூட்டணியில், திருச்சி லோக்சபா தொகுதியை தினகரனின் அ.ம.மு.க.,வுக்கு ஒதுக்கியிருக்காங்களே... இங்க, திருச்சி முன்னாள் மேயரும், புதுக்கோட்டை அரச குடும்பத்தின் மருமகளு மான சாருபாலா போட்டியிடுவாங்கன்னு எதிர்பார்த்தாங்க பா...
''இவங்க ஏற்கனவே 2009, 2014, 2019ன்னு வரிசையா மூணு லோக்சபா தேர்தல்ல, திருச்சியில போட்டியிட்டு தோற்று போயிட்டாங்க... அதனால, இம்முறையும் அவங்க தான் நிற்பாங்கன்னு பலரும் எதிர்பார்த்தாங்க பா...
''ஆனா, கடைசி நேரத்துல, மாநகராட்சி கவுன்சிலர் செந்தில்நாதனை வேட்பாளரா தினகரன் அறிவிச்சிட்டாரு... கடந்த மூணு தேர்தல் செலவுக்கு வாங்கிய கடனையே இன்னும் கட்டி முடிக்காத சூழல்ல, நாலாவது முறையாகவும் நிற்க சாருபாலா விரும்பலை... அதனால தான், இந்த முறை தனக்கு சீட் வேண்டாம்னு ஒதுங்கிட்டாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''மது கூடத்துக்கான உரிமத்தை புதுப்பிக்க எதிர்ப்பு தெரிவிக்கறா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''சென்னை, ஈஞ்சம்பாக்கம் அக்கரை பகுதியில, ஸ்ரீரடி சாய்மந்திர் கோவில் மற்றும் கேரளாவின் புகழ் பெற்ற முத்தப்பன் கோவில் இருக்கு... இந்த கோவில்கள் பக்கத்துல, 'தமிழ்நாடு டூரிசம் சொசைட்டி அடையாறு' என்ற பெயர்ல ஒரு மது கூடம் இயங்கறது ஓய்...
''இந்த வருஷம் இதுக்கான உரிமத்தை புதுப்பிக்க விண்ணப்பிச்சிருக்கா... இந்த மது கூடத்துல நடக்கற ஆடல், பாடல் கூத்துகளால, சாய்பாபா கோவில்ல பக்தர்கள் நிம்மதியா சாமி கும்பிட முடியல... கோவில்களுக்கு வர்ற பெண்பக்தர்களுக்கும் பாதுகாப்பு இல்ல ஓய்...
''அதனால, 'இந்த மது கூடத்தின் உரிமத்தை இந்த வருஷம் புதுப்பிக்கக் கூடாது'ன்னு மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை செயலர் அமுதா, கமிஷனர் ஜெயகாந்தன், டி.ஜி.பி., சென்னை மாநகராட்சி கமிஷனர், கலெக்டர், தாசில்தார்னு அனைத்து துறை அதிகாரிகளுக்கும் பக்தர்கள் சார்புல புகார் அனுப்பியிருக்கா... பக்தர்கள் கோரிக்கைக்கு அரசு இயந்திரம் செவி சாய்க்குதான்னு பார்க்கலாம் ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
பெஞ்சில் மேலும் சிலர் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.

