/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
வெளிநாட்டு மதுபானங்களை அள்ளி செல்லும் அதிகாரி!
/
வெளிநாட்டு மதுபானங்களை அள்ளி செல்லும் அதிகாரி!
PUBLISHED ON : மே 26, 2024 12:00 AM

''போட்டா போட்டி போடறா ஓய்...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் குப்பண்ணா.
''எதுக்கு வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''சென்னை கொரட்டூர் ஏரியாவுல, தனியார் விடுதிகள், மனமகிழ் மன்றங்கள் மற்றும், 'ஸ்பா'க்கள்ல மாமூல் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்... இதனால, இந்த ஏரியா போலீஸ் அதிகாரியா வர கடும் போட்டி நடக்கும் ஓய்...
''இப்ப, லோக்சபா தேர்தல் பணிக்காக இங்க மாற்றலாகி வந்தவங்க, தேர்தல் விதிகள் வாபஸ் ஆனதும், மீண்டும் பழைய இடத்துக்கு போகணுமேன்னு பழைய போலீசார் எல்லாம் கவலையில இருக்கா... அதே நேரம், சிலர் கொரட்டூர் ஸ்டேஷன்ல வாய்ப்பு கிடைக்குமான்னு காத்துண்டு இருக்கா ஓய்...
''ஏன்னா, காக்காபள்ளம் இடுகாடு மற்றும் பாடி, குபேர கணபதி தெருவில் உள்ள வாடகை வீடுகள்ல, 'ஒரு நம்பர்' லாட்டரி விற்பனை களை கட்டறது... ஆட்டோ டிரைவர்கள், தொழிற்சாலை ஊழியர்கள்னு பலரும், இந்த லாட்டரி சீட்டுகள்ல தங்களது மொத்த வருவாயையும் இழந்துடறா ஓய்...
''இதுல, போலீசாருக்கு மாமூல் மழை கொட்டும்... அதனால, இந்த ஸ்டேஷன்ல பணிபுரிய சிட்டி போலீசார் மத்தியில கடும் போட்டி நிலவறது ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''பத்திரிகையாளர் சந்திப்பை திடீர்னு ரத்து பண்ணிட்டாங்க...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் அந்தோணிசாமி.
''விளக்கமா சொல்லுங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''மதுரையில், 215 கோடி ரூபாயில் கட்டப்பட்ட கலைஞர் நுாற்றாண்டு நுாலகத்தை கடந்தாண்டு ஜூலை 15ல் திறந்தாங்கல்லா... சமீபத்துல பெய்த கனமழையால, நுாலகத்தின் தரைதளத்துல தண்ணீர் புகுந்துட்டு வே...
''அடுத்த இரண்டு மணி நேரத்துல, தண்ணீரை வெளியேத்திட்டாலும், கட்டுமான பணிகள் குறித்து சர்ச்சை எழுந்துச்சு... 'மழைநீர் வடிகாலில் குப்பை அடைத்ததால் மழைநீர் புகுந்தது'ன்னு பொதுப்பணி துறை அதிகாரிகள் சமாளிச்சாவ வே...
''இது சம்பந்தமா, 'பிரஸ் மீட்' நடத்தி விளக்கம் அளிக்கவும் பொதுப்பணி துறை அதிகாரிகள் தயாரானாவ... தகவல் கிடைச்சு பத்திரிகையாளர்களும் நுாலகத்துக்கு போனாவ வே...
''ஆனா, திடீர்னு வந்த ஒரு மொபைல் போன் அழைப்பை தொடர்ந்து, 'எங்க விளக்கத்தை அறிக்கையா தந்துடுதோம்... பிரஸ் மீட் வேண்டாம்'னு சொல்லிட்டு நழுவிட்டாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''கோவை போலீஸ் அதிகாரியின் அடாவடியை கேளுங்க பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
''கோவையில இருக்கிற ஒரு போலீஸ் அதிகாரி, போலீசாருடன் நட்சத்திர பார்கள்ல அதிரடி ரெய்டுகளை நடத்துறாரு... அங்க இருக்கிற வெளிநாட்டு மதுபான பாட்டில்கள், பீர் வகைகளை பறிமுதல் செய்து பாரை பூட்டிட்டு போயிடுறாரு பா...
''அதுவும் இல்லாம, 'சிசிடிவி' காட்சிகளை பதிவு செய்யும் டிஸ்கை யும் எடுத்துட்டு போயிடுறாரு... பார் சாவியை கேட்டு, அந்த ஏரியா போலீஸ் ஸ்டேஷனுக்கு போனா, பல மணி நேரம் காத்திருக்க வச்சுட்டு, திருப்பி அனுப்பிடுறாங்க...
''இதனால, 'அனுமதிக்கப்பட்ட நேரத்துல இயங்குற பார்ல வந்து இப்படி அடாவடி செஞ்சா என்ன அர்த்தம்'னு பார் உரிமையாளர்கள் எல்லாம் புலம்பிட்டு இருக்காங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்.
''போலீஸ் துறையை கையில வச்சிருக்கிற முதல்வர் ஸ்டாலின் தான், இதுல நடவடிக்கை எடுக்கணும் ஓய்...'' என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.