/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
கோவில் ஊழியர்களை அலைக்கழிக்கும் அதிகாரிகள்!
/
கோவில் ஊழியர்களை அலைக்கழிக்கும் அதிகாரிகள்!
PUBLISHED ON : ஆக 31, 2024 12:00 AM

நாளிதழை மடித்தபடி, ''இப்பவே தேர்தல் பரபரப்பு உருவாகிடுச்சுங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''எந்த தொகுதியில வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''லோக்சபா தேர்தல்ல,திருவள்ளூர் தொகுதிக்கு உட்பட்ட மாதவரம் சட்டசபை தொகுதியில்,பா.ஜ., இரண்டாவது இடத்தை பிடிச்சுதுங்க...இதனால, 'வர்ற சட்டசபை தேர்தல்ல இந்த தொகுதியை கைப்பற்றியே ஆகணும்'னு, அந்த கட்சி நிர்வாகிகள் முடிவு பண்ணியிருக்காங்க...
''இந்த தொகுதியில, திராவிட கட்சிகளின் ரெண்டு முக்கிய புள்ளிகள் தான், 15 வருஷத்துக்கு மேலா கோலோச்சுறாங்க... ரெண்டு பேரும் ஒரே சமுதாயம் என்பதால, ரகசிய கூட்டணி வச்சுக்கிட்டு, தொகுதியில தங்களை தவிர வேற யாரும் வளராம பார்த்துக்கிட்டாங்க...
''இப்ப, இவங்களுக்கு போட்டியா, செங்குன்றத்தை சேர்ந்த பா.ஜ.,வின் ஓ.பி.சி., அணி மாநில செயலர் வெங்கடேசன் வளர்ந்துட்டு வர்றாருங்க... இப்பவே, தொகுதி முழுக்க சுத்தி வர ஆரம்பிச்சிட்டாரு...இதனால, திராவிட கட்சிகளின் முக்கிய புள்ளிகள் அதிர்ச்சியில இருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''மாமூல் குடுத்தே ஆகணும் ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''சேலம் மாவட்டத்தில், 191 'டாஸ்மாக்' கடைகள் இருக்கு... சந்தியூர் மற்றும் சேலம் மேற்கு குடோன்கள்ல இருந்து தான், இந்த கடைகளுக்கு சரக்கு சப்ளை பண்றா ஓய்...
''கடைகளுக்கு தேவையான சரக்கு களுக்கான, 'இன்டென்ட்' பட்டியலை, வாரம் ரெண்டு முறை சூப்பர்வைசர்கள் தருவா... ஆனா, ஒரு இன்டென்டுக்கு, குடோன் ஊழியர்களுக்கு, 2,000 ரூபாய் மாமூல் தரணும் ஓய்...
''தராம விட்டா இன்டென்ட்ல குறிப்பிடாத, அதிகம் விற்பனையாகாத சரக்குகளை கடைகளுக்கு அனுப்பிடுவா... அதுவும் சும்மா அனுப்பறது இல்ல ஓய்...
''அதிகம் விற்பனை ஆகாத சரக்குகளை கடைகளுக்கு அனுப்பும்படி, அந்த கம்பெனிகளின் விற்பனை பிரதிநிதிகள், குடோன் ஊழியர்களுக்கு, 'கட்டிங்' வெட்டறா... இந்த சரக்குகளை குடுத்தா, கடை ஊழியர்களிடம்,'குடி'மகன்கள் சண்டைக்கு வரா...
''இது சம்பந்தமா, உயர் அதிகாரிகளுக்கு நிறைய புகார்கள் போயிருக்கு ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''ஊழியர்களை அலைக்கழிக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''எந்த துறையில பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''திருவள்ளூர் மாவட்டத்தின் பிரபல முருகன் கோவில்ல, 230 ஊழியர்கள் இருக்காவ... இதுல, 55 பேர் உள் துறையிலயும், 175 பேர் வெளி துறையிலயும் இருக்காவ வே...
''உள்துறையில வேலை செய்றவங்களுக்கு மாசம், 8,500 முதல்--- 14,500 ரூபாய் தான் சம்பளம்... ஆனா, வெளி துறையில, 25,000-- முதல்-- 65,000 ரூபாய் வரை வாங்குதாவ வே...
''இந்த கோவில்கட்டுப்பாட்டுல சின்னதும், பெருசுமாபல கோவில்கள் இருக்கு... குறைந்த சம்பளம் வாங்குற உள்துறை ஊழியர்களை, பக்கத்து கோவில்கள்ல வேலைக்கு அனுப்பாம, 50 கி.மீ., தள்ளியிருக்கிற கோவிலுக்கு அனுப்புதாவ வே...
''அதிக சம்பளம் வாங்குற ஊழியர்களுக்கு, அவங்க இருப்பிடம் அல்லது கோவில் தலைமை அலுவலகத்துல அதிகாரிகள் வேலை ஒதுக்குதாவ... எந்த ஊழியருக்கும் பயணப்படி கிடையாதுங்கிறதால...
''உள் துறை ஊழியர்கள் வாங்குற கம்மி சம்பளத்துல பாதியை, பஸ் கட்டணம் அல்லது பைக் பெட்ரோலுக்கு செலவழிச்சு சிரமப்படுதாவ... 'இதுக்கு அதிகாரிகள் முற்றுப்புள்ளி வைக்கணும்'னு புலம்புதாவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி. பெஞ்சில் மேலும் சிலர் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.