/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
பெண் ஏட்டை பார்த்து பயப்படும் அதிகாரிகள் !
/
பெண் ஏட்டை பார்த்து பயப்படும் அதிகாரிகள் !
PUBLISHED ON : ஏப் 22, 2024 12:00 AM

''போட்டி போட்டு பணம் குடுத்தாங்க பா...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அன்வர்பாய்.
''தேர்தல் சமாசாரமா ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''ஆமா... சேலம் லோக்சபா தொகுதி, பனமரத்துப்பட்டி ஒன்றியத்துல இருக்கிற கிராமங்கள்ல, தி.மு.க., வினர், 15ம் தேதியே ஓட்டுக்கு, 500 ரூபாய் வீதம் குடுத்தாங்க... அ.தி.மு.க., தரப்புல, ஓட்டுக்கு, 250 ரூபாய் தரும்படி நிர்வாகிகளிடம் ஒரு தொகையை குடுத்தாங்க பா...
''ஆனா, 'ஆளுங்கட்சிக்கு இணையா நாமும் குடுக்கணும்'னு நிர்வாகிகள் கேட்டிருக்காங்க... அதனால, தலைமையில இருந்து பணம் வரும்னு, 17ம் தேதி வரை காத்திருந்தாங்க பா...
''ஆனா, பணம் வராததால, பனமரத்துப்பட்டி, மல்லுார், அம்மாபாளையம் உள்ளிட்ட இடங்கள்ல, வசதி படைத்த அ.தி.மு.க., நிர்வாகிகள், தங்கள் கைப்பணம், 50 ரூபாய் வீதம் போட்டு, வாக்காளர்களுக்கு, 300 ரூபாயா குடுத்தாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''வீட்டுக்காரர்னு சொல்லி, ஓசியிலயே வாங்கிட்டு போயிடுதாரு வே...'' என, அடுத்த மேட்டரை ஆரம்பித்த பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''திருச்சியில, பிரபலமான அம்மன் கோவில் ஏரியாவுல ஒரு பெண் போலீஸ் அதிகாரி இருக்காங்க... எல்லா வழிகள்லயும் மாமூல் வாங்கி செழிப்பா இருக்காங்க வே...
''இவரது கணவர்னு சொல்லிட்டு வர்ற வாலிபர் ஒருத்தர், அந்த ஏரியா கடைகளுக்கு போய் பொருட்கள் வாங்குதாரு... ஆனா, எதுக்கும் பணம் தர்றது இல்ல வே...
''கேட்டா, 'பெண் போலீஸ் அதிகாரியின் கணவர்'னு சொல்லிட்டு போயிடுதாரு... ஆனா, 'பெண் அதிகாரிக்கும், வாலிபருக்கும் வயது வித்தியாசம் அதிகமா இருக்கே... எங்கயோ உதைக்குதே'ன்னு கடைக்காரங்க குழம்புதாவ வே...
''இது பத்தி, அந்த ஏரியா போலீசாரிடம் நைசா கேட்டிருக்காவ...
அவங்களோ, 'அதிகாரியின் குடும்பம் வெளியூர்ல இருக்கு... நீங்க சொல்றவரை பத்தி எல்லாம் அந்த அதிகாரியிடம் தான் கேட்டுக்கணும்'னு சொல்லி நழுவிட்டாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''பெண் ஏட்டுவின் அட்டகாசம் தாங்க முடியலைங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''இது எந்த ஊருல பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''சென்னை, தாம்பரம் தாண்டி செங்கல்பட்டு போற வழியில ஒரு போலீஸ் ஸ்டேஷன்ல, பெண் ஏட்டு ஒருத்தங்க இருக்காங்க... பல வருஷமா இதே ஸ்டேஷன்ல தான் இருக்காங்க...
''இவங்க, தன்னுடன் பணிபுரியும் சக போலீசார் மற்றும் புகார் அளிக்க வர்ற மக்களை தரக்குறைவாகவும், ஒருமையிலும் தான் பேசுறாங்க... ஒரு ஆண் ஏட்டு, ஒரு பெண் போலீசை குழுவா நியமிச்சு, மாமூல் வசூல் பண்றாங்க...
''அதுவும் இல்லாம, வெளியில தன்னை எஸ்.ஐ.,ன்னே சொல்லிக்கிறாங்க... ஏதாவது வேலையா போலீசாரை அனுப்புறப்ப, தன் பெயரை சொல்லி, எஸ்.ஐ., அனுப்பியதா சொல்லுங்கன்னு சொல்றாங்க...
''சமீபத்துல, பக்கத்து ஊர் ஆண் எஸ்.ஐ., ஒருத்தருக்கும், பெண் ஏட்டுக்கும் வேலை சம்பந்தமா கடும் வாக்குவாதம் நடந்திருக்குது... பெண் ஏட்டுவோ, எஸ்.ஐ., தன்னிடம் தவறா நடக்க முயன்றதா உயர் அதிகாரிகளிடம் புகார் குடுத்துட்டாங்க...
''இதனால, இவங்களிடம் வம்பு வச்சுக்க வேண்டாம்னு ஸ்டேஷன் அதிகாரிகளே ஒதுங்கி போயிடுறாங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
ஒலித்த போனை எடுத்த அன்வர்பாய், ''அட, கூடுவாஞ்சேரியில வீட்டுமனை எல்லாம் எனக்கு வேண்டாம் பா...'' என்ற படியே எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

