/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
30 லட்சம் ஓட்டுகளை வளைக்க பழனிசாமி வியூகம்!
/
30 லட்சம் ஓட்டுகளை வளைக்க பழனிசாமி வியூகம்!
PUBLISHED ON : மார் 11, 2025 12:00 AM

''வட மாநில பயணியரை மிரட்டி பணம் பறிக்கறா ஓய்...'' என, முதல் ஆளாக பேச்சை துவங்கிய குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''தொழில் நகரமான திருப்பூருக்கு, வட மாநில தொழிலாளர்கள் நிறைய பேர் ரயில்கள்ல வந்து இறங்கறா... ஸ்டேஷன்ல ரோந்து போற ரயில்வே போலீசார், இவாளிடம் விசாரணை என்ற பெயர்ல, மிரட்டி பணம் பறிக்கறா ஓய்...
''திருப்பூர் ரயில்வே போலீசுக்கு இன்ஸ்பெக்டர் இல்ல... போத்தனுார் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் தான், கூடுதல் பொறுப்பா பார்த்துக்கறார் ஓய்... அவர் வாரத்துல ரெண்டு, மூணு நாள் மட்டுமே வர்றதால, எஸ்.ஐ.,க்கள் தான் நிர்வாகம் பண்றா... இவாளும், போலீசாரின் மாமூல் விவகாரங்களை கண்டுக்கறது இல்ல ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''பயந்து போய் தான் பாயுதாரு வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.
''யாரை சொல்றீங்க பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''விருதுநகர் அ.தி.மு.க.,வுல, முன்னாள் அமைச்சர்கள் பாண்டிய ராஜனுக்கும், ராஜேந்திர பாலாஜிக்கும் நீயா, நானா யுத்தம் நடக்குல்லா... பிரச்னை என்னன்னா, பாண்டியராஜன், விருதுநகர்ல சொந்த வீடு கட்டி குடியேறிட்டாரு வே...
''வர்ற சட்டசபை தேர்தல்ல இங்க போட்டி யிட திட்டமிட்டு, கட்சியினரை சந்திக்கிறது, மூத்த தொண்டர்களுக்கு நிதியுதவி, அவங்க வாரிசுக்கு கல்வி, தொழில் உதவின்னு பண்ணுதாரு... இதனால, 'விருதுநகர்ல அவர் நின்னா ஜெயிச்சிடுவார்'னு கட்சிக்காரங்க பேச துவங்கிட்டாவ வே...
''அதுவும் இல்லாம, 'ராஜேந்திர பாலாஜி, அவரது சொந்த ஊரான சிவகாசியிலயே நின்னாலும் ஜெயிக்க முடியாது'ன்னும் கட்சிக்காரங்க மத்தியில பேச்சு ஓடுது... தான் தோத்து போய் பாண்டியராஜன் ஜெயிச்சுட்டா, தன் அரசியல் எதிர்காலம் அஸ்தமனம் ஆகிடும்னு பயந்து தான், பாண்டியராஜன் மேல ராஜேந்திர பாலாஜி பாயுதாரு வே...'' என்றார், அண்ணாச்சி.
''என்கிட்டயும் ஒரு அ.தி.மு.க., மேட்டர் இருக்குதுங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''வர்ற ஜூன்ல ராஜ்யசபா எம்.பி., தேர்தல் நடக்க இருக்கு துங்க... போட்டியில்லாம சுமுகமா போனா தி.மு.க.,வுக்கு நாலு, அ.தி.மு.க.,வுக்கு ரெண்டு எம்.பி., பதவிகள் கிடைக்கும்...
''இதுல, முக்குலத்தோரில் இதுவரை பெரிய அளவுல எந்த பதவியும் பெறாத அகமுடையார் சமுதாயத்துக்கு ஒரு எம்.பி., பதவி வழங்க பழனிசாமி முடிவு பண்ணி யிருக்காராம்... தென் மாவட்டங்கள்ல, 30 லட்சத்துக்கும் மேற்பட்ட அகமுடையார் சமுதாய ஓட்டுகள் இருக்கிறதால, சட்டசபை தேர்தலுக்கு அது கைகொடுக்கும்னும் பழனிசாமி கணக்கு போடுறாருங்க...
''இதுக்கு ஏற்ப, அகமுடையார் சமூகத்தைச் சேர்ந்த, அந்த கட்சியின் மருத்துவ அணி இணை செயலர் டாக்டர் சரவணனும், ராஜ்யசபா சீட்டுக்கு முயற்சி பண்றாரு... இவர், 2024 லோக்சபா தேர்தல்ல, மதுரையில போட்டியிட்டு, சொந்த கட்சியினரின், 'உள்குத்து' வேலையால மூணாவது இடத்துக்கு போயிட்டாருங்க...
''தலைமையின் கவனத்தை ஈர்க்கும் விதமா, அடிக்கடி சேலத்துக்கு போய், பழனிசாமி பெயர்ல நலத்திட்ட உதவிகளையும் வழங்குதாரு... இதுக்கு மத்தியில, கட்சியின் ஐ.டி., அணி நிர்வாகி ராஜ் சத்யனும் எம்.பி., சீட்டுக்கு முயற்சிக்கிறாரு... 'யாருக்கு ஜாக்பாட் அடிக்கும்'னு கட்சிக்குள்ள பட்டிமன்றம் நடக்குதுங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.