/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
பைக் திருட்டு வழக்குகளை பதிய மறுக்கும் போலீசார்!
/
பைக் திருட்டு வழக்குகளை பதிய மறுக்கும் போலீசார்!
PUBLISHED ON : மே 04, 2024 12:00 AM

''லோக்சபா தேர்தல்ல கிடைச்ச எதிர்ப்பை பார்த்து, முழிச்சுக்கிட்டாருங்க...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார், அந்தோணிசாமி.
''யாருப்பா அது...'' என கேட்டார் அன்வர்பாய்.
''லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்கு போன ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பலரிடம், தொகுதி மக்கள், 'சட்டசபை தேர்தலுக்கு பார்த்தது... அப்புறம் உங்களை பார்க்கவே முடியலை'ன்னு குத்தலா கேட்டாங்கல்ல... இதனால, அவங்களுடன் போன லோக்சபா தொகுதி வேட்பாளர்களுக்கு தர்மசங்கடமா போயிடுச்சுங்க...
''இதை எல்லாம் பார்த்து, சென்னையை ஒட்டியிருக்கிற திருப்போரூர் தொகுதியின் வி.சி., கட்சி எம்.எல்.ஏ., பாலாஜி உஷாராகிட்டாருங்க... இனிமே, கிராமம் கிராமமா போய் மக்களை சந்திக்க முடிவு பண்ணியிருக்காருங்க... அவரது தொகுதியில இருக்கிற 86 ஊராட்சிகளுக்கும் தொடர்ந்து போக போறாராம்...
''ஒவ்வொரு பஞ்சாயத்துலயும் இரவு மக்களுடன் தங்கி, அவங்க குறைகளை கேட்டு, அதிகாரிகளிடம் பேசி நிவர்த்தி பண்ண முடிவு பண்ணியிருக்காருங்க... அடுத்து, சட்டசபை தேர்தலுக்கு ஓட்டு கேட்டு போறப்ப, 'உங்களை பார்க்கவே முடியலை'ன்னு யாரும் நாக்கு மேல பல்லை போட்டு பேசிடக் கூடாதுன்னு இந்த முடிவுக்கு வந்திருக்காருங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''பெரிய தொகை குடுத்துட்டு வந்திருக்கறதால, கூடுதல் கமிஷன் கேக்கறார் ஓய்...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் குப்பண்ணா.
''யாருவே அது...'' எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''கோவை மாநகராட்சியில, பொறியியல் பிரிவில் பணிபுரியும் உயரதிகாரி, சமீபத்துல தான் சென்னையில இருந்து மாறுதல்ல வந்தார்... இவருக்கு சேலம் பக்கம் தான் சொந்த ஊர்... இந்த பதவி பல மாதங்களாகவே காலியா தான் இருந்துது ஓய்...
''அதற்கு அடுத்த நிலையில இருந்தவர் தான், கூடுதல் பொறுப்பா கவனிச்சுண்டு இருந்தார்... துறையின் உயர் அதிகாரிகள் ஆய்வுக்கு வந்தப்ப, காலியிடங்களை பத்தி முறையிட்டிருக்கா ஓய்...
''அவாளும் சென்னை போய், இந்த பதவிக்கு அதிகாரி நியமிக்கறது சம்பந்தமா, 'டிஸ்கஷன்' நடத்தியிருக்கா... இது, சென்னையில இருந்த அதிகாரிக்கு தெரியவரவே, பெரிய தொகையை, 'மால்' வெட்டிட்டு, இந்த பதவியை வாங்கிட்டு வந்துண்டார்...
''அதே நேரம், இப்படி பெரிய தொகையை குடுத்துட்டு வந்திருக்கறதால, இங்க நடக்கற பணிகள் லயும் கூடுதல் பர்சன்டேஜ் வேணும்னு கறாரா கேட்டு வாங்கறார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''அதாவது பரவாயில்ல... வழக்கு போடவே இங்க லஞ்சம் கேக்காங்கல்லா...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துாருக்கு தினமும் பல ஆயிரம் பக்தர்கள் வர்றாவ... பக்கத்து ஊர்கள்ல இருந்து பைக்குல வர்ற பக்தர்கள், தங்களது வாகனங்களை கடற்கரை பக்கத்துல நிறுத்திட்டு சாமி கும்பிட போறாவ வே...
''இந்த வாகனங்களை ஒரு கும்பல் திருடிட்டு போயிடுது... இது சம்பந்தமா, அங்க இருக்கிற போலீஸ் ஸ்டேஷன்ல புகார் குடுக்க போனா, அவங்க உடனே வழக்கு பதிவு பண்றது இல்ல வே...
''வழக்கு போடணும்னா, திருடு போன வாகனத்தின் மதிப்பில், 50 சதவீதம் வரை லஞ்சமா கேட்காவ... இதனால, பக்தர்கள் எல்லாம் நொந்து போய் திரும்பிடுதாவ வே...'' என முடித்தார் அண்ணாச்சி.
அரட்டை முடிய, பெஞ்ச் கலைந்தது.