/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
அடையாறு ஆற்றில் கழிவு கொட்டுவதை தடுக்க கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்
/
அடையாறு ஆற்றில் கழிவு கொட்டுவதை தடுக்க கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்
அடையாறு ஆற்றில் கழிவு கொட்டுவதை தடுக்க கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்
அடையாறு ஆற்றில் கழிவு கொட்டுவதை தடுக்க கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்
PUBLISHED ON : ஆக 17, 2024 12:00 AM
தாம்பரம், சுதந்திர தினத்தை முன்னிட்டு, புறநகர் ஊராட்சிகளில், நேற்று முன்தினம், கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த கூட்டங்களில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முடிச்சூர்: இவ்வூராட்சியில் நடந்த கூட்டத்தில், 6 கோடி ரூபாய் செலவில் நடந்து வரும் சாலை, கால்வாய் உள்ளிட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
முடிச்சூர் பகுதியில் தேங்கும் வெள்ளம், நேதாஜி நகர் வழியாக அடையாறு ஆற்றுக்கு செல்லும் வகையில், 4 கோடி ரூபாய் செலவில், 1 கி.மீ., துாரத்திற்கு 9 அடி அகலம், 8 அடி உயரத்தில் மூடுகால்வாய் அமைக்க, கடந்தாண்டு திட்டம் தயாரிக்கப்பட்டது.
அப்பணி இதுவரை துவங்கப்படவில்லை. இப்பணியை துவக்கவும், லட்சுமி நகர் பகுதி இலவசபட்டாக்களை சிட்டாவில் ஏற்றவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
பொழிச்சலுார்: இவ்வூராட்சி கிராம சபை கூட்டம், பிரேம் நகர் நுாலகத்தில் நடந்தது. இதில், சிறப்பு அழைப்பாளராக பல்லாவரம் எம்.எல்.ஏ., கருணாநிதி பங்கேற்றார்.
அனைவருக்கும் குடிநீர் வழங்குதல், கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் பயனாளிகளை சேர்ப்பது, ஊரக உள்ளாட்சி வீடுகளை பழுது பார்த்தல் உள்ளிட்ட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திருவஞ்சேரி கிராம சபை கூட்டத்தில், ஸ்ரீராம் நகரில் சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.
கவுல் பஜார்: 'இவ்வூராட்சியில் மாடுகள் வளர்ப்பது அதிகரித்து விட்டது. மாடு உரிமையாளர்கள் அவற்றை முறையாக கட்டி பராமரிக்காததால், போக்குவரத்து இடையூறுகள் ஏற்படுகின்றன.
'மாட்டு சாணத்தை, மழைநீர் கால்வாயிலேயே கலக்கின்றனர். இதனால், கால்வாய் அடைப்பு, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது' என, குற்றம்சாட்டப்பட்டது.
'அடையாறு ஆற்றில் செப்டிக் டேங்க் கழிவு கொட்டுவது அதிகரித்துள்ளதாகவும், கண்ணெதிரே நடக்கும் இந்த அட்டூழியத்தை தடுக்க வேண்டும்; ஊராட்சியில் உள்ள இரண்டு சுடுகாடுகளை சுற்றி, சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்'என, பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்க, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அகரம்தென்: இவ்வூராட்சியில், வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது, வரவு, செலவு கணக்கு, கணேஷ் நகர் மெயின் ரோட்டில் சிறுபாலம் அமைத்தல், முத்தமிழ் நகரில் எரிவாயு தகன மேடை அமைத்தல் உள்ளிட்ட, 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

