PUBLISHED ON : ஏப் 26, 2024 12:00 AM

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை:
ஒரு
கட்சி அ.தி.மு.க.,வை தங்கள் எதிர்க்கட்சியாக வைத்துக் கொள்ளவும், இன்னொரு
கட்சி தங்களுக்கான எடுப்பு கட்சியாக அமர்த்தி கொள்ளவும் திட்டமிடுகின்றன.
அ.தி.மு.க., தொண்டர்களோ, தி.மு.க.,வை வீழ்த்தும், எவருக்கும் மண்டியிடாத,
'தில்' உள்ள திராவிட கட்சியாக மட்டுமே இருக்கணும் என நினைக்கின்றனர். ஆக,
எதிர்க்கட்சியா, எடுப்பு கட்சியா, எதையும் எதிர்கொள்ள துணிந்த 'தில்'
கட்சியா என்பது தான் கேள்வி.
இவரது தலைவர் பன்னீர்செல்வத்தை, பா.ஜ., இதுல எந்த வகையில வச்சிருக்குன்னு சொல்வாரா?
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை: தொன்மையான மொழி தமிழை உலகெங்கும் பரப்பவும், உலக பொதுமறையாம் திருக்குறள் கலாசார மையங்களை, உலக அளவில் துவக்க இருப்பதாக, பா.ஜ., தேர்தல் அறிக்கையில் சொல்லி இருப்பது, நம் காதுகளில் தேன் வந்து பாய்வது போல் இருக்கிறது. அதற்கு முன்னோட்டமாக, தமிழை மத்திய அலுவல் மொழியாகவும், திருக்குறளை தேசிய நுாலாகவும் அறிவிக்க பா.ஜ., அரசு முன் வருமா?
இதையெல்லாம் பா.ஜ., ஆதரவோடு பழனிசாமி ஆட்சி நடத்துனப்ப கேட்டிருக்கலாமே!
தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் ஹசீனா சையத் அறிக்கை: தேர்தல் ஆதாயம் பெற, பெண்களின் திருமாங்கல்யத்தை பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். விவசாயம் தான் தங்களுடைய வாழ்வாதாரம் என, நினைத்து வயல்களில் உழைத்து, தான் விளைவித்த பயிர்களுக்கு உரிய ஆதாய விலை கிடைக்காமல், கடன் சுமையால் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் மனைவிகளின் திருமாங்கல்யத்தை பற்றி பிரதமர் மோடி கவலைப்பட வேண்டும். அவர் வெறுப்பு அரசியலை கைவிட வேண்டும்.
மோடி பேச்சு வெறுப்பு அரசியல்னா, 'சனாதனத்தை டெங்கு, மலேரியா கொசு மாதிரி ஒழிக்கணும்'னு உதயநிதி பேசியதுக்கு பெயர் என்ன?
தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: ஓட்டுக்காக, அது தரும் பதவிக்காக, சிறுபான்மை மதத்தை சேர்ந்தவர்கள் ஓட்டுகளை பெறுவதற்காக, சனாதன தர்மத்தை அழிப்பேன் என்று கொக்கரித்தவர்கள், தீபாவளிக்கு வாழ்த்து சொல்வதை வெறுப்பவர்கள், ஹிந்து மத வெறுப்பை நெஞ்சிலே சுமந்து, அரசியல் ஆதாயத்திற்காக வெட்கமின்றி போலி மதச்சார்பின்மை பேசும் மதவாத, ஹிந்து விரோத ஸ்டாலின், மோடியை விமர்சிப்பதா?
மோடியை விமர்சிப்பது தான், குறிப்பிட்ட சமுதாய மக்களுக்கு ஆத்ம திருப்தி தரும்னு நினைக்கிறாங்க போலும்!

