/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
வருவாய் துறையினரிடமே லஞ்சம் கேட்கும் சர்வேயர்கள்!
/
வருவாய் துறையினரிடமே லஞ்சம் கேட்கும் சர்வேயர்கள்!
வருவாய் துறையினரிடமே லஞ்சம் கேட்கும் சர்வேயர்கள்!
வருவாய் துறையினரிடமே லஞ்சம் கேட்கும் சர்வேயர்கள்!
PUBLISHED ON : ஏப் 05, 2024 12:00 AM

''சீனியர் மாவட்டச் செயலரை மதிக்கவே மாட்டேங்காரு வே...'' என, பட்டர் பிஸ்கட்டை கடித்தபடியே மேட்டரை ஆரம்பித்தார், பெரியசாமி அண்ணாச்சி.
''யாருங்க அது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''திருச்சியில போட்டியிடுற துரை வைகோவை தான் சொல்லுதேன்... இவரை சுத்தி, செந்திலதிபன், பால சசிகுமார், தமிழ் மாணிக்கம்னு ஒரு ஆதரவாளர் வட்டத்தை வச்சிருக்காரு வே...
''இவங்களை தாண்டி, துரையை யாரும் நெருங்கவே முடியல... சீனியர் நிர்வாகிகள் எல்லாரையும் அலட்சியமா தான் பேசுதாரு வே...
''ம.தி.மு.க., மாநகர் மாவட்ட செயலரா இருக்கிற வெல்லமண்டி சோமுவை, மாற்று கட்சியினர் கூட மரியாதை தான் பேசுவாவ... ரொம்பவும் அமைதியான, இனிமையான மனிதரான இவரிடமே துரை எரிஞ்சு எரிஞ்சு விழுதாரு வே...
''பத்திரிகையாளர் சந்திப்புகள்ல கூட ஜூனியர்களை தன் பக்கத்துல உட்கார வைக்கிற துரை, சோமுவை பின்னாடி நிற்க வச்சிடுதாரு... இதனால, சோமுவின் ஆதரவாளர்கள் துரை மேல கடுப்புல இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''எதிரணி வேட்பாளருக்கு வேலை செய்ய போயிட்டாரு பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
''தென் சென்னை மாவட்ட த.மா.கா., செயலரா, பட்டுக்கோட்டை பூபதின்னு ஒருத்தர் இருக்காரு... இவர், முத்தரையர் சமுதாய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும் இருக்காரு பா...
''கூட்டணி தர்மத்தின்படி, இவர் தென் சென்னை பா.ஜ., வேட்பாளர் தமிழிசைக்கு தான் தேர்தல் பணி பார்க்கணும்... ஆனா, தன் சொந்த மாவட்டமான தஞ்சாவூர் லோக்சபா தொகுதியில், அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும், தே.மு.தி.க., வேட்பாளர் சிவநேசனுக்கு தேர்தல் பணி செய்ய போயிட்டாரு...
''இதனால, அவர் மேல நடவடிக்கை எடுக்கணும்னு தஞ்சை மாவட்ட த.மா.கா., நிர்வாகிகள் வாசனுக்கு கோரிக்கை வச்சிருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''வருவாய் துறையினரிடமே வசூல் கேக்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''யாருங்க அது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''திருவள்ளூர் மாவட்டத்துல, பிரபல முருகன் கோவில் ஊர் தாலுகா ஆபீஸ்ல, விவசாய நிலம், வீட்டுமனைகளை அளந்து பட்டா தரணும்னு, 'ஆன்லைன்' மூலமா மக்கள் விண்ணப்பிக்கறா... இந்த விண்ணப்பங்கள் மீது சர்வேயர்கள், 60 நாட்களுக்குள் நடவடிக்கை எடுத்து, நிலத்தை அளந்து பட்டா தரணும் ஓய்...
''ஆனா, எல்லா ஆவணங்களும் சரியா இருந்தாலும், கணிசமான தொகையை லஞ்சமா வெட்டுனா தான், நிலத்தை அளந்து குடுக்கறா... குறைந்தபட்சம், 5,000த்துல இருந்து 25,000 ரூபாய் வரைக்கும் வசூல் பண்றா ஓய்...
''வி.ஏ.ஓ., ஒருத்தர், தன் சொந்த நிலத்தை அளந்து குடுக்க விண்ணப்பிச்சு, ஆறு மாசமாகியும் வேலை நடக்கல... இது பத்தி சர்வே துறையின் பெண் அதிகாரியிடம் கேட்டப்ப, 'என்னங்க பண்றது... எனக்கும் வருத்தமா தான் இருக்கு... ஆனா, எனக்கு அடுத்தகட்டத்துல இருக்கற சர்வேயர்கள் என்னை மதிக்கறது இல்லை... 'பணம் தந்தா தான் அளக்க முடியும்'னு கறாரா சொல்றா... என்னால, அவாளை மீறி எதுவும் பண்ண முடியல'ன்னு கைவிரிச்சுட்டாங்க ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
ஒலித்த மொபைல் போனை எடுத்த அண்ணாச்சி, ''பாரதி, போன காரியம் முடிஞ்சிட்டா...'' என பேசியபடியே நடக்க, மற்றவர்களும் கிளம்பினர்.

