/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
கல்வி அதிகாரிகளை எச்சரித்த இணை இயக்குனர்!
/
கல்வி அதிகாரிகளை எச்சரித்த இணை இயக்குனர்!
PUBLISHED ON : ஜூலை 20, 2024 12:00 AM

''வேலையை ஒழுங்கா செஞ்சதுக்கு பரிசு குடுத்துட்டாங்க...'' என்றபடியே, அரட்டையை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.
''யாருக்கு பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''ரேஷன் கடைகள்ல, சரியான எடையில் பொருட்களை வழங்குறது இல்லை... இன்னும் சில இடங்கள்ல, கடைகளை சரியான நேரத்துக்கு திறக்கிறதும் இல்லைங்க...
''இது சம்பந்தமா நிறைய புகார்கள் வந்துச்சு... இதனால, கூட்டுறவு மற்றும் உணவு துறை செயலரா இருந்த கோபால், ரேஷன் கடைகளில், அதிகாரிகளின் ஆய்வு பணிகளை முடுக்கி விட்டாருங்க... கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகள் செயல்பாடு தொடர்பா, கோபாலும் தொடர் ஆய்வு கூட்டங்களை நடத்தினாருங்க...
''இன்னொரு பக்கம், ரேஷன் கடைகள்ல பொருட்கள் இருப்பு குறைவா இருந்தா, ஊழியர்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகையை, உணவு வழங்கல் துறை கமிஷனரா இருந்த ஹர்சஹாய் மீனா அதிரடியா உயர்த்தினாருங்க... இதனால, ரேஷன் கடை ஊழியர்களும், கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரிகளும் அதிருப்தி ஆனாங்க...
''இதை, துறையின் மேலிடத்துக்கும் எடுத்துட்டு போனாங்க... இதனால, சமீபத்துல நடந்த 65 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாறுதல் பட்டியல்ல, கோபாலையும், ஹர்சஹாய் மீனாவையும் சேர்த்துட்டாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''போலீஸ்ல குடுத்த புகாரை வாபஸ் வாங்கிட்டாரு வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''-பெரம்பலுார் மாவட்டம், மேட்டுப்பாளையம் பஞ்சாயத்து தலைவரா, தி.மு.க.,வை சேர்ந்த பெண்மணி இருக்காங்க... இவங்க, பஞ்., செயலர், துணை தலைவர் உதவியுடன், அரசுக்கு 5.65 லட்சம் ரூபாய் நிதியிழப்பு பண்ணிட்டதா புகார்கள் எழுந்துச்சு வே...
''விசாரிச்சப்ப, தெருவிளக்கு உதிரி பாகங்கள், பிளீச்சிங் பவுடர் மற்றும் பதிவேடுகள் வாங்கியது, பைப் லைன் பழுது பார்த்ததுன்னு கணக்கு காட்டியிருக்காங்க... 5 ரூபாய் பொருளை 10 ரூபாய்க்கு வாங்கி, அரசுக்கு நிதியிழப்பு ஏற்படுத்தியது உண்மைதான்னு தெரிஞ்சிட்டு வே...
''இது சம்பந்தமா, பி.டி.ஓ., சார்புல பஞ்சாயத்து தலைவி மீது வி.களத்துார் போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுத்து எப்.ஐ.ஆர்., போடவும் வலியுறுத்தினாங்க... அப்புறமா, ஆளுங்கட்சி மாவட்ட புள்ளிகள் தலையிட்டு, புகாரை வாபஸ் வாங்க வச்சுட்டாவ வே...'' என்றார் அண்ணாச்சி.
''மொட்டை பெட்டிஷனால கதிகலங்கி போயிட்டா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''யாருப்பா அது...'' என கேட்டார், அன்வர்பாய்.
''மதுரையில், கல்வித்துறை அலுவலகங்கள்ல அதிகமா லஞ்சம் கேக்கறதா, சில அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்டு, புரியாத ஆங்கிலத்துல எழுதப்பட்ட புகார்கள், மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தொடர்ந்து போனது ஓய்...
''இது சம்பந்தமா, கல்வித் துறையின் சென்னை மேலிடத்துக்கும் தகவல் போயிருக்கு... அங்க இருந்து இணை இயக்குனர் ஒருத்தர், மதுரைக்கு வந்து விசாரணை நடத்தியிருக்கார் ஓய்...
''அப்ப, கல்வித் துறையில் பணியாற்றும் ஒருவர் தான் பல பெயர்கள்ல இப்படி புகார்களை அனுப்பியதும், அவர் ஒழுங்கு நடவடிக்கையில் சிக்கியதால, அதுக்கு பழிவாங்கும் நோக்கத்தில் இப்படி புகார்களை அனுப்பியதும் தெரிஞ்சது...
'எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க'ன்னு மதுரை கல்வி அதிகாரிகளை இணை இயக்குனர் எச்சரிக்கை பண்ணிட்டு போயிருக்கார் ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
கச்சேரி முடிய, நண்பர்கள் கிளம்பினர்.