/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
கண்ணீர் விட்டு கதறிய 'மாஜி' எம்.பி.,
/
கண்ணீர் விட்டு கதறிய 'மாஜி' எம்.பி.,
PUBLISHED ON : மார் 31, 2024 12:00 AM

''இப்பவாவது, 'கன்பார்ம்' பண்ணுவாளா,மாட்டாளான்னு கண்ணீர் விட்டுண்டு இருக்கா ஓய்...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் குப்பண்ணா.
''யாருப்பா அவங்க...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''மாநிலம் பூரா இருக்கற பேரூராட்சிகளில், கடந்த 10 வருஷமா தற்காலிக அடிப்படையில், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்கள் வேலை பார்த்துண்டு இருக்கா... அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் நிர்ணயிக்கும் சம்பளத்தை வாங்கிண்டு இருக்கா ஓய்...
''கடந்த 15 வருஷமா, எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், 'எங்களை பணி நிரந்தரம் பண்ணுங்கோ'ன்னு முறையிடறதை வழக்காவே வச்சிண்டு இருக்கா... போன அ.தி.மு.க., ஆட்சியில, இவாளை பணி நிரந்தரம் செய்ய, 'லம்ப்பா' ஒரு அமவுன்ட் கறந்தும் ஒரு வேலையும் நடக்கல ஓய்...
''இப்ப, பேரூராட்சிகளில், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டருக்கான நிரந்தர பணியிடத்தை உருவாக்கப் போறா... 'அந்த இடத்துல எங்களையே நியமிச்சிடுங்கோ'ன்னு தற்காலிக ஆப்பரேட்டர்கள் கேக்கறா ஓய்...
''இது போதாதா.... 'மேலிடத்தை கவனிக்கணும்'னு சொல்லி, சிலர் வசூலை ஆரம்பிச்சுட்டா... தற்காலிக ஆப்பரேட்டர்கள் பலருக்கு வயசு 40 - 45க்கு மேல ஆகிட்டதால, 'முதல்வர் தலையிட்டு எங்களுக்கு நிரந்தர பணி தர நடவடிக்கை எடுக்கணும்'னு எதிர்பார்க்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''இதே மாதிரி நானும் ஒரு மேட்டர் வச்சிருக்கேன்...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''மாநில அளவில், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், காலி பணியிடங்களை சமீபத்துல நிரப்பினாங்க... ஒவ்வொரு பதவிக்கும் விதவிதமா விலை வச்சு வசூல் நடந்திருக்குதுங்க...
''நீலகிரி மாவட்டத்தில் மட்டும், 83 எழுத்தர் பணிக்கு நியமனம் போட்டிருக்காங்க... ஆளுங்கட்சிக்காரங்க முதல் அதிகாரிகள் வரை ஒவ்வொரு போஸ்ட்டிங்குக்கும் 8 லட்சம் ரூபாய் வரை வாங்கிட்டதா, பணம் கொடுக்க முடியாத சில இளைஞர்கள் புகார் சொல்றாங்க...
''இதில், 30 பணியிடங்களுக்கு வெளி மாவட்ட ஆட்களை நியமிச்சிருக்காங்க... இது சம்பந்தமா, மத்திய விஜிலென்ஸ், சி.பி.ஐ., வரை புகார் போயிருக்குதுங்க... சீக்கிரமே மாநிலம் முழுக்க விசாரணை நடக்கும்னு சொல்றாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''முன்னாள் எம்.பி.,யின் கதறலை கேளுங்க வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''சென்னைக்கு பக்கத்துல இருக்குற லோக்சபா தொகுதியின் அ.தி.மு.க., வேட்பாளர் அறிமுக கூட்டம், பிரபல முருகன் கோவில் ஊருல சமீபத்துல நடந்துச்சு வே...
''இதுல, அ.தி.மு.க., 'மாஜி' எம்.பி., ஒருத்தர் பேசினாரு... அப்ப, 'நம்ம கட்சி நிர்வாகிகள் சிலர் துரோகிகளா இருக்காவ... 2021 சட்டசபை தேர்தல்ல, நான் போட்டியிட்டப்ப, என் மேல இருக்குற வெறுப்புல, சில ஒன்றிய, நகர செயலர்கள், தி.மு.க., வேட்பாளருக்கு மறைமுகமா வேலை செஞ்சாவ...
''சில ஓட்டு சாவடிகளில், 'பூத் ஏஜன்ட்' கூட போடாம, பணத்தை மட்டும் வாங்கி, அநியாயமா என்னை தோற்கடிச்சுட்டாவ...
''இந்த சதி கூட்டத்துக்கு, 'மாஜி' எம்.எல்.ஏ.,வும் துணையா இருந்தாரு... இப்பவாவது காழ்ப்புணர்ச்சிகளை மறந்து, 'நம்ம வேட்பாளருக்காக ஓட்டு கேளுங்க'னு கண்ணீர் விட்டு கதறிட்டாரு வே...'' என்ற அண்ணாச்சி, ''சரி நான் கிளம்புதேன்... அரக்கோணம் வரை போய் அரி சாரை பார்க்கணும்...'' என்றபடியே எழ, பெஞ்ச் கலைந்தது.

