/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
'கப்' அடிக்கும் காட்டாங்கொளத்துார் ஒன்றியம் சீர்கேடு 39 ஊராட்சிகளிலும் குப்பை தேங்கும் அவலம்
/
'கப்' அடிக்கும் காட்டாங்கொளத்துார் ஒன்றியம் சீர்கேடு 39 ஊராட்சிகளிலும் குப்பை தேங்கும் அவலம்
'கப்' அடிக்கும் காட்டாங்கொளத்துார் ஒன்றியம் சீர்கேடு 39 ஊராட்சிகளிலும் குப்பை தேங்கும் அவலம்
'கப்' அடிக்கும் காட்டாங்கொளத்துார் ஒன்றியம் சீர்கேடு 39 ஊராட்சிகளிலும் குப்பை தேங்கும் அவலம்
PUBLISHED ON : பிப் 28, 2025 12:00 AM

காட்டாங்கொளத்துார் :செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தில் உள்ள 39 ஊராட்சிகளிலும், குப்பை அகற்றப்படாமல் தேங்கி நிற்பதால், பகுதிவாசிகள் சுகாதார சீர்கேட்டிற்கு ஆளாகி தவிக்கின்றனர்.
கடந்த 2019ல், காஞ்சிபுரம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு செங்கல்பட்டு மாவட்டம் உருவாக்கப்பட்டது. அதன்படி, அச்சரப்பாக்கம், காட்டாங்கொளத்துார், சித்தாமூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், பரங்கிமலை, மதுராந்தகம் மற்றும் லத்துார் ஆகிய எட்டு ஒன்றியங்கள், செங்கல்பட்டு மாவட்டத்தில் இணைக்கப்பட்டன.
இதில், காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தில் உள்ள 39 ஊராட்சிகளிலும், துாய்மைப் பணி முறையாக நடக்கவில்லை.
இதனால், ஒவ்வொரு ஊராட்சி தெருக்களிலும் மலைபோல் குப்பை குவிந்து, பகுதிவாசிகள் சுகாதார சீர்கேட்டிற்கு ஆளாகி வருகின்றனர். எனவே, காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் குவியும் குப்பையை உடனுக்குடன் அகற்றி, குப்பை கொட்டுவோருக்கு கடும் அபராதம் விதிக்க வேண்டுமென, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
வாரம் இருமுறையாவது, குப்பையை அப்புறப்படுத்த வேண்டும். ஆனால், காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தில், 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே, குப்பை அகற்றும் பணி நடப்பதால், ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சி தெருக்களிலும் குப்பை தேங்கி, கடும் துர்நாற்றம் வீசுகிறது.
குப்பையை சேகரிக்க ஊராட்சிகளில், போதிய எண்ணிக்கையில் குப்பை சேகரிப்பு வாகனங்கள் இல்லை. தவிர, துாய்மை பணியாளர்களும் குறைந்த எண்ணிக்கையில் உள்ளனர். தேங்கி நிற்கும் குப்பையால், கொசுக்கள் அதிகரித்து, பலவித நோய்களுக்கு மக்கள் ஆளாகின்றனர். தவிர, இரவு நேரத்தில் கொசுக்கடியால் துாக்கமிழந்து தவித்து வருகின்றனர்.எந்த ஊராட்சியிலும், கொசு மருந்து அடிப்பதே இல்லை. அமைச்சர், எம்.பி., - எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் என, முக்கிய பிரமுகர்கள் வந்தால் மட்டுமே கொசு மருந்து அடித்தல், குப்பையை அப்புறப்படுத்தி, 'பிளீச்சிங் பவுடர்' துாவுதல் என, துப்புரவு பணிகள் நடக்கின்றன.
கடந்த 2014ல் மத்திய அரசு, துாய்மை இந்தியா திட்டத்தை அறிவித்தது. அப்படியொரு திட்டம் இருப்பதை, மாவட்ட நிர்வாகம் அறியவில்லை. தவிர, மாநகராட்சி, நகராட்சிகளுக்கான முக்கியத்துவம், கிராமப்புற பகுதிகளுக்கு வழங்கப்படவில்லை.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் சேகரிக்கப்படும் குப்பை, அந்தந்த ஊராட்சி பொது இடத்தில் குவிக்கப்பட்டு, அங்கிருந்து மாதம் இருமுறை லாரிகள் வாயிலாக, சிங்கபெருமாள்கோவில் அருகே உள்ள ஆப்பூர் குப்பைக் கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதை, வாரம் இருமுறை என மாற்ற வேண்டும்.
தற்போது, துாய்மை பணியாளர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தினமும், 300 ரூபாய் முதல் 425 ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது. இதை அதிகரிக்க வேண்டும். தவிர, துாய்மை பணியாளர்கள் எண்ணிக்கையை ஊராட்சி மக்கள் தொகை, தெருக்களுக்கு ஏற்ப கூடுதலாக்க வேண்டும்.பெரும்பாலான ஊராட்சிகளில் வரி வருவாய் தவிர, வேறு வருவாய் இல்லை. ஊராட்சி துாய்மை பணிக்கென கூடுதல் நிதியை, அரசு ஒதுக்க வேண்டும்.தெருக்களில் குப்பை வீசுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது. இதற்கு தீர்வாக, குப்பை வீசுவோருக்கு கடும் அபராதம் விதிக்க வேண்டும்.
- டேனியல், வார்டு உறுப்பினர், வண்டலுார் ஊராட்சி.