/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
கடன்பட்டு நெஞ்சம் கலங்கும் அமைச்சர்!
/
கடன்பட்டு நெஞ்சம் கலங்கும் அமைச்சர்!
PUBLISHED ON : ஏப் 01, 2024 12:00 AM

''ரியல் எஸ்டேட் முதலைகள் எல்லாம் விரக்தியில இருக்காங்க பா...'' என்றபடியே, ஏலக்காய் டீயை உறிஞ்சினார் அன்வர்பாய்.
''எந்த ஊருலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பகுதியில், 12 கிராம ஊராட்சிகள், ஒரு பேரூராட்சி இருக்கு... இங்க, 500க்கும் மேற்பட்ட கட்டடங்கள் கட்டுறதுக்கு, மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டிருக்காங்க பா...
''இந்த கட்டடங்கள் பெரும்பாலும், 60 முதல் 70 டிகிரி சாய்வான பகுதியில் அமைய இருக்கிறதால, அனுமதி தராம பைல்களை பெண்டிங்குல வச்சிருந்தாங்க...
''இந்த சூழல்ல, சமீபத்துல ஊட்டியில் ரெண்டு இடங்கள்ல கட்டுமான பணியின்போது நிலச்சரிவு ஏற்பட்டு சிலர் இறந்து போயிட்டதால, கலெக்டர் தலைமையில் புதிய ஆய்வு குழு அமைச்சிருக்காங்க பா...
''இந்த குழு ஆய்வு செய்த பிறகே, புது கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்கப்படும்னு சொல்லிட்டாங்க... இதனால, 'கட்டிங் போச்சே'ன்னு உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகளும், 'தொழில் பாதிக்கப்படுதே'ன்னு ரியல் எஸ்டேட் பண்றவங்களும், 'அப்செட்'ல இருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''லோக்சபா தேர்தல்ல, 40 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமிச்சு பிரசார பணிகளை மேற்கொள்ள இருக்காங்க...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''தமிழக காங்கிரசின் தொழிற்சங்கமான ஐ.என்.டி.யு.சி., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், சமீபத்துல சென்னையில நடந்துச்சுங்க... இதுல, புதுச்சேரி உட்பட 40 தொகுதிகள்லயும், தி.மு.க., கூட்டணிக்கு தேர்தல் பிரசார பணிகளை மேற்கொள்ள ஆறு பேர் குழுவை நியமிச்சிருக்காவ வே...
''இந்த சங்கத்துல கட்டுமான தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள்னு மொத்தம் 7 லட்சம் உறுப்பினர்கள் இருக்காவ...
''இந்த குடும்பங்களின் ஓட்டுகளை எல்லாம் தி.மு.க., கூட்டணிக்கு வளைக்க, தொகுதி வாரியா பொறுப்பாளர்களை நியமிச்சு, பிரசாரம் பண்ண களம் இறங்கியிருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''குடுத்த கடனை திருப்பி கேட்டாலே பிரச்னை தான் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''யாரிடம் கடன் கொடுத்து ஏமாந்தீங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''நான் ஏமாறலை... கொங்கு மண்டலத்தை சேர்ந்த ஒரு அமைச்சருக்கு, தான் விரும்பிய இலாகா கிடைக்காத அதிருப்தி ஊரறிஞ்ச, 'செய்தி'யாச்சே... ஆனாலும், தலைமை தந்த இலாகாவுல திறம்பட பணியாற்றிண்டு இருக்கார் ஓய்...
''அவர் சட்டசபை தேர்தல்ல நின்னப்ப, செலவுக்காக கணிசமான தொகையை கடனா வாங்கியிருக்கார்... கடன் தந்தவரும் ரெண்டெழுத்து இனிஷியல் அமைச்சர் தான் ஓய்...
''அவர் இப்ப, கடனை திருப்பி கேக்கறார்... இவர் கொடுக்க முடியாம, இப்ப, அப்பன்னு இழுத்தடிக்கறார் ஓய்...
''இனிஷியல் புள்ளிக்கும் என்ன நெருக்கடின்னு தெரியல... பணத்தை திருப்பி கேட்டுண்டு இருக்கார்... கடன் பிரச்னை தீரணும்னு, வெள்ள மனசுடன் கோவில், சாமின்னு அமைச்சர் சுத்திண்டு இருக்கார் ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.
''கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன்னு கம்பர் சும்மாவா பாடி வச்சாரு...'' என்றபடியே அண்ணாச்சி எழ, மற்றவர்களும் இடத்தை காலி செய்தனர்.

