PUBLISHED ON : நவ 13, 2025 08:21 PM

ஸ்ரீ சத்ய சாய்பாபா நூறாவது பிறந்தநாளை முன்னிட்டு கண்கவர் லேசர் நீர்க்காட்சி
புட்டபர்த்தி — ஆன்மிகத்தின் புனித நிலம்.
பகவான் பாதம் பட்ட அந்த புனித பூமியில் அவர் நடமாடிய சித்ராவதி ஆற்றாங்கரையில் இன்று துவங்கிய வித்தியாசமான லேசர் ஒளிக்காட்சி அனைவரது கவனத்தையும் கவர்ந்தது,வியப்பால் பக்தர்கள் கண்கள் விரிய பார்த்து மெய்சிலிர்த்தனர்.
பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சித்ராவதி ஆற்றங்கரையில் நடைபெற்ற லேசர் மற்றும் நீர் திட்டக் காட்சி அந்த ஆனந்தக் களஞ்சியத்தின் உச்சமாக அமைந்துள்ளது.
நீர் திட்ட காட்சி என்றால் நீரையே ஒரு திரையாக பயன்படுத்தி, லேசர் ஒளி மற்றும் இசை மூலம் காட்சிகளை உருவாக்கும் அற்புத தொழில்நுட்பமாகும்.ஹர்தி காட் பகுதியை அலங்கரித்த இந்த நிகழ்வு, நவீன தொழில்நுட்பத்தையும் ஆன்மீகத்தையும் இணைத்த அற்புத அனுபவமாகும்.
நூறாண்டு வாழ்வின் மகத்துவத்தைக் குறிக்கும் இந்த லேசர் நிகழ்ச்சி,பக்தர்களின் இதயங்களில் ஒளி ஏற்றிய ஆன்மீகக் கொண்டாட்டம் என சொல்லலாம்.நவம்பர் 23 ஆம் தேதி வரை தினமும் இரவு 7:30 மணி முதல் இரவு 9:30 மணிவரை நடைபெறுகிறது.
அமைதி, சேவை, அன்பு என்கின்ற சாய்பாபாவின் மூன்று நெறிகளும்,இந்த ஒளிக்காட்சியின் ஒவ்வொரு துளியிலும் பிரதிபலித்தன.--எல்.முருகராஜ்

