/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
அடம் பிடித்து ' அன்பளிப்பு ' வாங்கி சென்ற அதிகாரி!
/
அடம் பிடித்து ' அன்பளிப்பு ' வாங்கி சென்ற அதிகாரி!
அடம் பிடித்து ' அன்பளிப்பு ' வாங்கி சென்ற அதிகாரி!
அடம் பிடித்து ' அன்பளிப்பு ' வாங்கி சென்ற அதிகாரி!
PUBLISHED ON : ஆக 17, 2024 12:00 AM

''அமைச்சர் பதவியை எதிர்பார்த்துட்டு இருக்காங்க...'' என்றபடியே, இஞ்சி டீயை உறிஞ்சினார் அந்தோணிசாமி.
''யாருப்பா அது...'' என கேட்டார், அன்வர்பாய்.
''கரூரை சேர்ந்த செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை பறிகொடுத்து, ஜெயிலுக்கும் போய் ஒரு வருஷம் தாண்டிடுச்சு... இந்த மாவட்டத்துக்கு அமைச்சர் பிரதிநிதித்துவம் இல்லைங்க...
''உதயநிதி, துணை முதல்வரா பதவிஏற்கும்போது, அமைச்சரவையிலும் மாற்றம் வரும்னு தகவல்கள் உலா வருதுல்ல... இதுல, 'கரூர் மாவட்டத்துக்கு அமைச்சர் பதவி தரப்படும்'னு சொல்றாங்க...
''அந்த வகையில, எம்.எல்.ஏ.,க்களான குளித்தலை மாணிக்கமும், அரவக்குறிச்சி இளங்கோவும் கனவோட காத்திருக்காங்க... இதுல,மாணிக்கம் ரெண்டாவது முறையா எம்.எல்.ஏ., ஆகியிருக்காருங்க...
''இளங்கோ, முதல் முறையா எம்.எல்.ஏ., ஆகியிருந்தாலும், அவரது அப்பா ராமசாமி, 1989லயே அரவக்குறிச்சியில தி.மு.க., - எம்.எல்.ஏ.,வா இருந்திருக்காருங்க... அதுவும் இல்லாம கொங்கு வேளாள கவுண்டர் சமூகமா இருக்கிறதால, தனக்கு தான் கூடுதல் வாய்ப்புன்னு நம்பிட்டு இருக்காருங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''இதுக்கு 7 கோடி ரூபாயான்னு வாயை பிளக்கறா ஓய்...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் குப்பண்ணா.
''என்ன விஷயம் பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''காஞ்சிபுரத்தில், 100 ஆண்டுகள் பழமையான ராஜாஜி மார்க்கெட் இருந்துது... கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 7 கோடி ரூபாய் மதிப்புல இந்த மார்க்கெட்டை புதுசா கட்டியிருக்கா ஓய்...
''புதிய மார்க்கெட்டை, சமீபத்துல முதல்வர் ஸ்டாலின், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியா திறந்து வச்சார்... திறப்பு விழாவுக்கு வந்த மக்கள், மார்க்கெட்டை சுத்தி பார்த்தா ஓய்...
''கான்கிரீட் தளம் கூட போடாம, தகர ஷீட் கூரை தான் போட்டிருக்கா... ஒவ்வொரு கடைக்கும் ஷட்டர் போட்டு தனியறையா கட்டாம, திறந்தவெளி கடைகளா தான் கட்டியிருக்கா ஓய்...
''இதனால, 'பெரிய அளவுல கட்டுமான பணிகளை செய்யாம,7 கோடி ரூபாய் இதுக்கு செலவாகியிருக்குமா... யார், யாருக்கு எவ்வளவு கமிஷன் போனதோ'ன்னு புலம்பிண்டே போனா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''அடம் பிடிச்சு அன்பளிப்பை வாங்கிட்டு போயிட்டாரு வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''துாத்துக்குடியில் ஒரு போலீஸ் ஸ்டேஷன்ல இருந்த ஒரு அதிகாரியை, சமீபத்துல கோவில்பட்டிக்கு இடமாறுதல் செஞ்சாவ... வழக்கமா, ஆகஸ்ட் முதல் வாரத்துல, துாத்துக்குடி பனிமய மாதா சர்ச் திருவிழா நடக்குமுல்லா...
''விழாவை முன்னிட்டு,பொருட்காட்சி போடுவாவ வே... விழா நல்லபடியா முடிஞ்சதும் பொருட்காட்சி ஏற்பாட்டாளர்கள், சிறப்பா பாதுகாப்பு கொடுத்தவருக்கு 50,000 ரூபாயை அன்பளிப்பா குடுக்கிறது வழக்கம்...
''இந்த முறை விழா முடியுறதுக்குள்ள பொருட்காட்சி ஏற்பாட்டாளர்களிடம், 'நீங்க எப்ப வேணும்னாலும் பொருட்காட்சியை நடத்தி முடியுங்க... எனக்குரியதை குடுத்திடுங்க'ன்னு கேட்டு வாங்கிட்டு தான், அதிகாரி கோவில்பட்டிக்கு கிளம்பியிருக்காரு வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
''அன்பளிப்பா கொடுக்கறதை தப்பு சொல்லாதேயும்... அடிச்சு பிடுங்கி வாங்கினா தான் தப்பு ஓய்...'' என்றார் குப்பண்ணா.
அரட்டை கச்சேரி முடிவுக்கு வர, பெரியவர்கள் கிளம்பினர்.