PUBLISHED ON : ஆக 08, 2025 12:00 AM

'எந்த துறைக்கு வேண்டுமானாலும் அமைச்சராக இருக்கலாம்; மின்சாரத் துறைக்கு மட்டும் இருக்கக் கூடாது...' என, விரக்தியுடன் கூறுகிறார், உத்தர பிரதேச மாநில மின்சாரத் துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான அரவிந்த் குமார் சர்மா.
உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. சமீப காலமாக இங்கு அடிக்கடி மின் வெட்டு நிலவுகிறது; இதனால், மக்கள் கடும் அவதியை சந்தித்து வருகின்றனர்.
ஆங்காங்கே போராட் டங்கள், மறியல்கள் நடக்கின்றன. அரவிந்த் குமார் செல்லும் இடமெல்லாம், மக்கள் சரமாரியாக கேள்விகளை கேட்டு அவரை திணறடிக்கின்றனர்.
சமீபத்தில், சுல்தான்பூரில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அரவிந்த் குமார் சென்றிருந்தார். அப்போது, அந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் திரண்டு, மின் வெட்டு பிரச்னை குறித்து கேள்விகளை எழுப்பினர். அவரால் பதிலளிக்க முடியவில்லை; கை கூப்பியபடியே அங்கிருந்து நழுவிச் சென்றார்.
சமீபத்தில் மொராதாபாத் என்ற நகரில், ஒரு தியேட்டர் திறப்பு விழாவுக்கு அமைச்சர் சென்றிருந்தார். அப்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கடுப்பான அமைச்சர், அந்த பகுதியைச் சேர்ந்த மின் துறை அதிகாரிகள் நான்கு பேரை, 'சஸ்பெண்ட்' செய்தார்.
'நடக்கும் சம்பவங்களை பார்த்தால், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, எம்.எல்.ஏ.,வாகவே இருந்து விடலாம் போல் தோன்றுகிறது. இந்த அவமானம் நமக்கு தேவையா...?' என புலம்புகிறார் அரவிந்த் குமார் சர்மா.