/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
கடத்தல் மணலை காவலருக்கே விற்ற தனிப்பிரிவு போலீஸ்!
/
கடத்தல் மணலை காவலருக்கே விற்ற தனிப்பிரிவு போலீஸ்!
PUBLISHED ON : செப் 06, 2024 12:00 AM

''மொத்த ஏஜன்ட்களை கண்டுக்கறது இல்ல ஓய்...'' என்றபடியே, பில்டர் காபியை உறிஞ்சினார் குப்பண்ணா.
''எந்த வியாபாரத்துல வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''சேலம் மாவட்டம், இடைப்பாடி மற்றும் சுற்று வட்டாரங்கள்ல, துண்டு சீட்டுல நம்பர் எழுதி குடுத்து, லாட்டரி விற்பனை பண்றா... ஆனா, மாமூல் வரத்தால போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கறது இல்ல ஓய்...
''எஸ்.பி., ஆபீஸ்ல இருந்து உத்தரவு வந்தா, சில்லரை விற்பனையாளர்களை மட்டும் புடிச்சு வழக்கு போட்டு கணக்கு காட்டறா...
''இதனால, மொத்த ஏஜன்ட்கள் எல்லாம், 'நீங்க யார்கிட்ட, 'கம்ப்ளைன்ட்' பண்ணாலும், எங்களை ஒண்ணும் பண்ண முடியாது'ன்னு போலீசுக்கு புகார் சொல்றவாளை மிரட்டறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''கட்சிக்காரங்க புறக்கணிச்சுட்டாங்க...'' என, அடுத்த தகவலுக்கு மாறிய அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''கட்சியினரிடம் இருக்கிற மனஸ்தாபங்கள், குறைகளை கேட்டு நிவர்த்தி பண்ற விதமா, மாவட்ட, நகர, ஒன்றியம் வாரியா, பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடத்த, தி.மு.க., மேலிடம் உத்தரவு போட்டிருக்குதுங்க...
''இதன்படி, மாநிலம் முழுக்க கூட்டங்களை நடத்திட்டு இருக்காங்க... கூட்டம் முடிஞ்சதும் மட்டன், சிக்கன்னு தடபுடலா விருந்தும் போடுறாங்க...
''சமீபத்துல நடந்த, சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டத்தை, ஆயிரம் விளக்கு சட்டசபை தொகுதியை சேர்ந்த பெரும்பாலான நிர்வாகிகள் புறக்கணிச்சுட்டாங்க... அண்ணாநகர், சேப்பாக்கம் தொகுதி நிர்வாகிகள் மட்டும் பங்கேற்றாங்க...
''எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் வராததால, கட்சிக்கு சம்பந்தமே இல்லாதவங்களை அழைச்சிட்டு வந்து கூட்டத்தை நடத்தியிருக்காங்க... அந்த மாவட்ட நிர்வாகி, மாநகராட்சியிலும் முக்கிய பதவியில இருக்கிறதால, தடபுடலான பிரியாணி விருந்து கிடைக்கும்னு எதிர்பார்த்திருக்காங்க... ஆனா, டீ, பிஸ்கட் கூட தராம, கூட்டத்தை முடிச்சிட்டு, நிர்வாகி சத்தமில்லாம போயிட்டாருங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''லட்சங்கள்ல சம்பாதிக்காருல்லா...'' என்றார், அண்ணாச்சி.
''யாருப்பா அது...'' என கேட்டார், அன்வர்பாய்.
''திருச்சி மாவட்டம், சமயபுரம் ஏரியா எஸ்.பி., தனிப்பிரிவுல இருக்கிறவரை தான் சொல்லுதேன்... சமீபத்துல, எசனைக்கோரையில் மணல் கடத்திய லாரியை ஒரு போலீஸ்காரர் பிடிச்சிருக்காரு வே...
''அங்க வந்த தனிப்பிரிவு, 'மணலை கொடுத்துட்டா, லாரியை விட்டுடுறேன்'னு டீலிங் பேசி முடிச்சிட்டாரு... அந்த மணலையும், லாரியை பிடிச்ச போலீஸ்காரர் வீட்டுல பாத்ரூம் கட்ட, அவருக்கே, 50,000 ரூபாய்க்கு வித்துட்டாரு வே...
''வாங்கிய போலீஸ்காரரோ, 'தரமில்லாத மணலா இருக்கு'ன்னு சொல்லி, 30,000 மட்டும் குடுத்திருக்காரு... மீதம், 20,000 கேட்டு அவரை தனிப்பிரிவு விரட்டிட்டு இருக்காரு வே...
''அதே மாதிரி, பைபாஸ் சாலையோர கடைகள்ல, அதிக லைட் வெளிச்சத்துல பெயர் பலகை வச்சவங்க மேல நடவடிக்கை எடுக்காமஇருக்க, தலா, 2 லட்சம் ரூபாய் வசூல் பண்ணிட்டாரு... யாராவதுகேட்டா, 'எஸ்.பி., ஆபீஸ்ல என் சொந்தக்கார பெண்மணி இருக்கும் வரை என்னை அசைக்க முடியாது'ன்னு ஜம்பமா சொல்லுதாரு வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
அரட்டை முடியவும், அனைவரும் கிளம்பினர்.