/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
மறைவுக்கு பிறகும் சம்பாதித்து தந்த விஜயகாந்த்!
/
மறைவுக்கு பிறகும் சம்பாதித்து தந்த விஜயகாந்த்!
PUBLISHED ON : ஆக 26, 2024 12:00 AM

''போலீசாரை மிரட்டி, காரியத்தை சாதிச்சுட்டாவ வே...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''யாருங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''திருச்சி அ.தி.மு.க., சார்பில், சமீபத்துல மாநில அரசை கண்டிச்சு, அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினாவ... இதுல பேசிய பகுதி செயலர் சுரேஷ்குப்தா, தி.மு.க., துணை பொதுச் செயலர் கனிமொழியை அவதுாறா பேசி, கைதானாருல்லா வே...
''அவரை கைது பண்ணி, நாலஞ்சு மணி நேரம் போலீஸ் வேன்லயே, நகரை சுத்தி சுத்தி வந்திருக்காவ... மாநகர மாவட்ட செயலரான சீனிவாசன், அ.தி.மு.க., வக்கீல் அணி நிர்வாகிகள், போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டதுக்கு மழுப்பலா பதில் குடுத்திருக்காவ வே...
''பகுதி செயலரை கண்ணுல காட்டலன்னா, சாலை மறியல், சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவோம்னு சீனிவாசன் மிரட்டியிருக்காரு... அப்புறமா தான், சுரேஷ் குப்தாவை கோர்ட்ல போலீசார் ஆஜர்படுத்தியிருக்காவ... அங்கயும் வாதாடி, சுரேஷ் குப்தாவுக்கு ஜாமின் வாங்கிட்டாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''என்கவுன்டர் பீதியில இருக்காரு பா...'' என்றார், அன்வர்பாய்.
''எந்த ரவுடியை சொல்றீங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''மதுரையை சேர்ந்த ரவுடி, 'வெள்ளை' காளி, இப்ப வேலுார் ஜெயில்ல இருக்காரு... மதுரையில் இவரது உறவினர் ராஜபாண்டிக்கும், தி.மு.க., பிரமுகர், வி.கே.குருசாமிக்கும் ஏழாம் பொருத்தம்னு ஊருக்கே தெரியுமே பா...
''இரு தரப்பிலும் இதுவரைக்கும், 10க்கும் மேற்பட்ட கொலைகள் விழுந்திருக்கு... சில மாதங்களுக்கு முன்னாடி, பெங்களூர்ல குருசாமியை கொல்ல நடந்த முயற்சியில, வெள்ளைகாளியை கைது செஞ்சாங்க பா...
''வேலுார் சிறையில் இருக்கிற காளியை, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலா மதுரை கோர்ட்ல ஆஜர்படுத்துறாங்க... சமீபத்துல, மதுரை கோர்ட்ல நேர்ல ஆஜர்படுத்த, இவரை போலீசார் கூப்பிட்டிருக்காங்க பா...
''ஆனா, வழியில என்கவுன்டர் பண்ணிடு வாங்கன்னு பயந்து, வீடியோவுல ஆஜர்படுத்துங்கன்னு காளி கதறியிருக்காரு... போலீசார் கட்டாயப்படுத்தி, மதுரைக்கு கூட்டிட்டு போகவே, 'என் கணவரை சுட்டு கொல்லத்தான் போலீசார் கூட்டிட்டு போறாங்க'ன்னு அவரது மனைவி, வீடியோவை பரப்பியதால, காளி தலை தப்பிடுச்சு பா...'' என்றார், அன்வர்பாய்.
''விஜயகாந்துக்கு பெரிய தொகை குடுத்திருக்கா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''விஜய்யின் கோட் படத்தில், விஜயகாந்தை ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் நடிக்க வச்சிருக்கா... 'விஜயகாந்த் உருவத்தை பயன்படுத்த, என்கிட்ட அனுமதி கேட்கணும்'னு அவரது மனைவி பிரேமலதா ஏற்கனவே கறாரா சொல்லியிருந்தாங்க ஓய்...
''கோட் படம் செப்., 5ல் ரிலீசாக போறது... பிரேமலதாவால பிரச்னை வராம இருக்கணும்னு நினைச்ச விஜய், தயாரிப்பாளர் அர்ச்சனா, இயக்குனர் வெங்கட்பிரபு எல்லாரும் அவரது ஆத்துக்கு போய், விஜயகாந்த் படத்துக்கு அஞ்சலி செலுத்திட்டு, ஒரு கவரையும் குடுத்திருக்காங்க...
''அதுல, பெரிய தொகைக்கான, 'செக்' இருந்திருக்கு... அதை விஜயகாந்த் நினைவிடம் கட்டும் பணிக்கு பயன்படுத்திக்கறதா பிரேமலதா சொல்லி இருக்காங்க ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
''மறைவுக்கு பிறகும் விஜயகாந்த் சம்பாதிச்சு குடுத்திருக்கார்னு சொல்லுங்க...'' என்றபடியே அந்தோணிசாமி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

