வாக்காளர் பட்டியல் திருத்தம் நியாயமாக நடந்தால் நல்லதே!
வாக்காளர் பட்டியல் திருத்தம் நியாயமாக நடந்தால் நல்லதே!
PUBLISHED ON : நவ 03, 2025 12:00 AM

பீஹார் மாநிலத்தில், வரும் 6 மற்றும் 11ம் தேதிகளில், இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அதற்கு முன்னதாக, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இதற்கு, அம்மாநில எதிர்க்கட்சிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்தன.
இருப்பினும், 'போலி வாக்காளர்களை நீக்க மேற்கொண்ட இந்த நடவடிக்கை சரியானதே' என்று அழுத்தம் திருத்தமாகக் கூறிய தேர்தல் ஆணையம், அதை வெற்றிகரமாக நடத்தி முடித்தது.
இந்நிலையில், பீஹாரை அடுத்து இரண்டாவது கட்டமாக, தமிழகம், மேற்கு வங்கம், கேரளா உட்பட 12 மாநிலங்களில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற உள்ளது. அதற்கான வழிமுறை களை தேர்தல் ஆணையம் சமீபத்தில் வெளியிட்டது.
வெளிமாநிலங்களில் இருந்து இடம் பெயர்ந்த போலி வாக்காளர்கள், தகுதியற்ற வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்கி, பரிசுத்தமான வாக்காளர் பட்டியல் உருவாக்கவே இந்த நடவடிக்கை என, தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
வழக்கமாக, வாக்காளர் பட்டியல் புதுப்பிப்பு பணியானது ஆண்டுதோறும் நடைபெறும். ஆனாலும், இந்த சிறப்பு தீவிர திருத்தமானது, வாக்காளர் பட்டியல் துல்லியமாக இருக்கவும், போலி வாக்காளர்கள், இறந்த வாக்காளர்கள் அல்லது தகுதியற்றவர்கள் இடம் பெறுதல் போன்ற பிழைகள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக நடத்தப்படுவதாகவும், தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால், அடுத்த ஆண்டு ஏப்ரலில் சில மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், குறுகியகால அவகாசத்தில் இந்த இரண்டாம் கட்ட திருத்தப் பணி அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவசரகதியில் அமல்படுத்தப்படும் இந்த நடவடிக்கையால், வாக்காளர்களுக்கு பல இன்னல்கள் ஏற்படும் என்றும், தமிழகம் உட்பட, பல மாநில எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
அதேநேரத்தில், பீஹாரில் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்ற போது, அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடர்ந்த போதும், நீதிமன்றம் அதிலுள்ள சில குறைபாடுகளை நீக்கும்படி கூறியதே அன்றி, சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எந்த வகையிலும் தடை விதிக்கவில்லை.
அத்துடன், ஆதார் அட்டையை துணை ஆவணங்களில் ஒன்றாக வாக்காளர்கள் காட்டலாம். ஆனாலும், அந்த ஆவணம் குடியுரிமையை நிரூபிக்காது; அடையாளத்தை மட்டுமே நிரூபிக்கிறது என, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்தது, மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது.
பீஹார் மாநிலத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் போது, 47 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், அதற்கான சரியான காரணத்தை தேர்தல் ஆணையம் தெரிவிக்கவில்லை என்பது, எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு.
அத்துடன், சிறப்பு திருத்தத்தில் அண்டை நாட்டிலிருந்து சட்டவிரோதமாக ஊடுருவிய எத்தனை பேர் நீக்கப்பட்டனர் என்ற விபரத்தையும் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. அதனால் தான், இந்த திருத்தத்தை தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் எதிர்க்கின்றன.
இதனால், ஏராளமானோர், குறிப்பாக, ஏழைகள் மற்றும் சமூகத்தில் உள்ள நலிந்த பிரிவினர் நீக்கப்படலாம். அவர்களால் தேர்தல் ஆணையம் கேட்கும் ஆவணங்களை சமர்ப்பிக்க முடியாமல் போகலாம் என்றும் அரசியல் கட்சிகள் புகார் தெரிவிக்கின்றன.
எனவே, இந்த சிறப்பு திருத்தம் விஷயத்தில் மக்கள் மத்தியில் எழுந்துள்ள சந்தேகங்களை போக்கவும், அரசியல் கட்சிகளின் நம்பிக்கையின்மையை போக்கவும், தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
சிறப்பு திருத்தத்தால் உண்மையான வாக்காளர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்பதுடன், போலி வாக்காளர்களும், இறந்தவர்களும், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களின் பெயர்களும் நீக்கப்பட்டு, பரிசுத்தமான வாக்காளர் பட்டியல் உருவாக்கப்பட்டு, அதன் வாயிலாக தேர்தல் நடைபெற்றால், அது நாட்டுக்கு நல்லதே!

