/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தி.மு.க., வேட்பாளர் யார்?
/
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தி.மு.க., வேட்பாளர் யார்?
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தி.மு.க., வேட்பாளர் யார்?
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தி.மு.க., வேட்பாளர் யார்?
PUBLISHED ON : ஏப் 25, 2024 12:00 AM

''தேர்தல் முடிந்தும் நடந்த பட்டுவாடா கதையை கேளுங்கோ ஓய்...'' என, பெஞ்சில் முதல் ஆளாக பேச்சை துவங்கிய குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''கோவை லோக்சபா தொகுதியில, இந்த முறை தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கெடுபிடி மற்றும் பா.ஜ,வினர் தீவிர கண்காணிப்பால, தி.மு.க., - அ.தி.மு.க.,வினர், ஓட்டுக்கு பணம் பட்டுவாடா பண்ண ரொம்பவே சிரமப்பட்டிருக்கா ஓய்...
''இதனால, சில ஊர்கள்ல, 'எங்களுக்கு ஓட்டு போட்டுடுங்கோ... தேர்தல் முடிந்ததும் கண்டிப்பா பணம் தரோம்'னு வாக்குறுதி தந்திருக்கா... அதே மாதிரி, தேர்தல் முடிஞ்ச அன்னைக்கு சாயந்தரம் ரெண்டு கட்சியினரும் பண பட்டுவாடா பண்ணியிருக்கா ஓய்...
''அதாவது, வாக்காளர்கள் விரல் மையை பார்த்துட்டு, ஓட்டுக்கு தலா 500 வரை குடுத்திருக்கா... 'சொன்ன சொல்லை காப்பாத்திட்டாளே'ன்னு, வாக்காளர்கள் எல்லாம் உற்சாகமாகிட்டா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''தேர்தல் நடத்தை விதிகள் அமல்ல இருந்தப்ப, அதிகாரி ஆய்வு செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்குதுங்க...'' என, அடுத்த மேட்டருக்குள் நுழைந்தார் அந்தோணிசாமி.
''எந்த துறையில பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''எந்த ஒரு அரசு திட்டங்கள் குறித்தும் ஆய்வு செய்யக் கூடாதுன்னு தேர்தல் விதிகள் சொல்லுது... ஆனா, வனத்துறை செயலர் சுப்ரியா சாஹு, தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னாடி, கோவை மதுக்கரை பகுதியில் ரயில் தண்டவாளம் அருகே, அமைக்கப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் குறித்து ஆய்வு நடத்தியிருக்காங்க...
''அதுக்கான கட்டுப்பாட்டு அறையிலும் ஆய்வு நடத்தியிருக்காங்க... அங்கிருந்த ஊழியர்களுடன் பேசியதை, 'எக்ஸ்' வலைதளத்திலும் பதிவிட்டிருக்காங்க... அப்படியே, ஊட்டிக்கும் போயிருக்காங்க...
''இதனால, 'தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னாடி அதிகாரி நடத்திய ஆய்வு, விதிமீறல் இல்லையா... அந்த அளவுக்கு அவசர முக்கியத்துவம் என்ன'ன்னு துறை அதிகாரிகள் முணுமுணுக்கிறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''இடைத்தேர்தல்ல வாய்ப்பு தருவாங்கன்னு நம்புதாங்க வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''விழுப்புரம் மாவட்ட தி.மு.க., பொருளாளரா இருக்கிறவர் ஜனகராஜ்... 2001, 2006ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல்ல ஜெயிச்சு, விழுப்புரம் நகராட்சி சேர்மனா இருந்தாரு வே...
''ஆனா, 2011 தேர்தல்ல அவருக்கு வாய்ப்பு தரல... ஆனாலும், 'என் அரசியல் வளர்ச்சிக்கு காரணமான கட்சி தலைவர் கருணாநிதி, ஸ்டாலின் மற்றும் அமைச்சர் பொன்முடிக்கு என்றும் விசுவாசமா இருப்பேன்'னு சொல்லிட்டாரு வே...
''கட்சியில மாவட்ட இளைஞரணி அமைப்பாளர், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர் பதவிகளை வகித்தவர், இப்ப மாவட்ட பொருளாளரா இருக்காரு... லோக்சபா தேர்தல்லயும் கட்சிக்காக தீவிரமா வேலை பார்த்திருக்காரு...
''கிட்டத்தட்ட 28 வருஷமா கட்சிக்காக கடுமையா உழைக்கிற இவருக்கு, நடக்க இருக்கிற விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்ல தலைமை வாய்ப்பு தரும் அல்லது மாவட்டச் செயலர் பதவியாவது வழங்கும்னு அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கையோட சொல்லுதாங்க வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
அரட்டை முடிவுக்கு வர, பெஞ்ச் காலியானது.

