/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
காரில் கடத்தி வரப்பட்ட 200 கிலோ குட்கா பறிமுதல்
/
காரில் கடத்தி வரப்பட்ட 200 கிலோ குட்கா பறிமுதல்
PUBLISHED ON : ஆக 12, 2025 12:00 AM

பூந்தமல்லி, பூந்தமல்லி அருகே, காரில் கடத்தி வரப்பட்ட, 18 மூட்டை குட்காவை, போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர்.
வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், பூந்தமல்லி அருகே கொளப்பனஞ்சேரி பகுதியில், பூந்தமல்லி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சந்திரமவுலி தலைமையிலான போலீசார், நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியே சென்ற, 'டாடா இண்டிகோ' காரை மடக்கி சோதனை செய்தபோது, அதில் 18 மூட்டைகளில், 200 கிலோ எடையிலான குட்கா புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, குட்கா மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், காரை ஓட்டி வந்த அனகாபுத்துார் பகுதியை சேர்ந்த ராஜேஷ், 38, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
கடைக்காரர் கைது ஆழ்வார்பேட்டை, டி.டி.கே., சாலையில் உள்ள பெட்டிக்கடையில், குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக, அபிராமபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு சென்று சோதனையிட்ட போலீசார், பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 49 கிலோ குட்கா பொருட்களை கைப்பற்றி, தேனாம்பேட்டையைச் சேர்ந்த சிகாப், 39, என்பவரை கைது செய்தனர்.
பின், அவர் அளித்த தகவலின்படி, அஜிஸ்பரம்பேரி, 37, என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும், பெங்களூரிலிருந்து சென்னைக்கு ரயிலில் குட்கா புகையிலைப் பொருட்களை கடத்திவந்து, சென்னையில் விற்பனை செய்து வந்தது, போலீசார் விசாரணையில் தெரியவந்தது.