/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
செய்யூர் அரசு கலைக் கல்லுாரிக்கு 270 இடங்கள் ஒதுக்கீடு
/
செய்யூர் அரசு கலைக் கல்லுாரிக்கு 270 இடங்கள் ஒதுக்கீடு
செய்யூர் அரசு கலைக் கல்லுாரிக்கு 270 இடங்கள் ஒதுக்கீடு
செய்யூர் அரசு கலைக் கல்லுாரிக்கு 270 இடங்கள் ஒதுக்கீடு
PUBLISHED ON : மே 08, 2025 12:00 AM
செய்யூர்:செய்யூரில் புதிதாக துவக்கப்பட உள்ள அரசு மற்றும் கலைக் கல்லுாரிக்கு, ஐந்து பாடப் பிரிவுகளின் கீழ், 270 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டத்தில், 127 கிராமங்கள் உள்ளன. இதில் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்திலேயே கல்வி மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய பகுதியாக, செய்யூர் வட்டம் உள்ளது.
மதுராந்தகம் கல்வி மாவட்டத்தில் இருந்து ஆண்டுக்கு, 5,000க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் தேர்ச்சியடைந்து, கல்லுாரிகளுக்குச் செல்கின்றனர்.
பல ஆண்டுகளாக செய்யூர் பகுதியில் அரசு கலைக் கல்லுாரி இல்லாததால், மாணவ - மாணவியர் அரசு மற்றும் தனியார் கல்லுாரிக்காக சென்னை, புதுச்சேரி, செங்கல்பட்டு, திண்டிவனம் போன்ற நகரங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை இருந்தது.
மாணவ - மாணவியரின் நலன் கருதி, செய்யூர் பகுதியில் கலைக்கல்லுாரி அமைக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த மார்ச் 15ம் தேதி நடந்த சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் 'செய்யூர், மானாமதுரை, ஆலந்துார் உள்ளிட்ட, தமிழகத்தில் 10 இடங்களில் புதிய கலைக் கல்லுாரிகள் அமைக்கப்படும்' என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ப்ளஸ் 2 முடிவுகள் இன்று வெளியாக உள்ள நிலையில், செய்யூரில் புதிதாக துவக்கப்பட உள்ள அரசு கலைக் கல்லுாரிக்கு, அடுத்த கல்வி ஆண்டிற்காக ஆங்கில வழி கற்றலில் மூன்று, தமிழ் வழி கற்றலில் இரண்டு என, மொத்தம் ஐந்து பாடப் பிரிவுகளின் கீழ், 270 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.