இந்தியா தேடும் குற்றவாளிகள் 2 பேர் அமெரிக்காவில் கைது: நாடு கடத்த ஏற்பாடு
இந்தியா தேடும் குற்றவாளிகள் 2 பேர் அமெரிக்காவில் கைது: நாடு கடத்த ஏற்பாடு
ADDED : நவ 09, 2025 11:10 AM

வாஷிங்டன்: பல்வேறு குற்றங்களுக்காக இந்தியா தேடி வரும் பயங்கர குற்றவாளிகள் இருவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹரியானா மாநிலம் நாராயண்கரை சேர்ந்தவர் வெங்கடேஷ் கார்க். அவர் மீது இந்தியாவில் 10க்கும் மேற்பட்ட கொடும் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் இளைஞர்களை வேலைக்கு அமர்த்தி குற்றச்செயல்களை செய்து வந்தது தெரியவந்தது.
குருகிராமில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் கொலையில் ஈடுபட்ட அவர் அமெரிக்காவின் ஜார்ஜியாவுக்கு தப்பிச் சென்றார். இதேபோல, அமெரிக்காவில் வசித்த பானு ராணா என்பவரும் இந்தியாவில் பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்படுபவர். அமெரிக்காவில் இருந்தபடி குற்றச்செயல்களை தொடர்ந்து வந்தார். இவர், இந்தியா, அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகளில் குற்றச்செயல்களில் ஈடுபடும் பிஷ்னோய் கும்பலை சேர்ந்தவர்.
அவர்களின் அமெரிக்க இருப்பிடத்தை கண்டறிந்த இந்திய போலீசார் மற்றும் உளவுத்துறையினர், இன்டர்போல் உதவியுடன் அமெரிக்க போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் அமெரிக்க போலீசார், அவர்களை கைது செய்துள்ளனர். அவர்கள் இருவரையும் இந்தியாவுக்கு நாடு கடத்தி கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

