/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
3 'மாஜி' மாவட்ட செயலர்களுக்கு மீண்டும் பதவி!
/
3 'மாஜி' மாவட்ட செயலர்களுக்கு மீண்டும் பதவி!
PUBLISHED ON : மார் 19, 2024 12:00 AM

படித்து கொண்டிருந்த நாளிதழை மடித்தபடியே, ''அட்டை மாதிரி ஒட்டிண்டு இருக்கா ஓய்...'' என பேச்சை ஆரம்பித்தார் குப்பண்ணா.
''எங்க, யாருன்னு சொல்லுங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''வடசென்னையில செம்பியம், திரு.வி.க.நகர் போலீஸ் ஸ்டேஷன்கள்ல இருக்கற அதிகாரிகள், ஆறு வருஷமா அதே இடத்துல பணியில இருக்கா ஓய்... தேர்தல் நேரத்துல, மூணு வருஷம் ஒரே இடத்துல இருக்கற அதிகாரிகளை மாத்தணும்கறது விதி...
''ஆனா, அதுல கூட இவா சிக்க மாட்டேங்கறா... அப்படியே மாறினாலும், திரு.வி.க. நகர்ல இருக்கறவா செம்பியத்துக்கும், செம்பியத்துல இருக்கறவா திரு.வி.க. நகர்னு மட்டும் மாறிக்கறா... 'இந்த ஸ்டேஷன்கள்ல கொட்டற வருமானமும், அதுல உயர் அதிகாரிகளுக்கு போற பங்கும் தான் இதுக்கு காரணம்'னு போலீஸ் வட்டாரத்துலயே புலம்பல்கள் கேக்கறது ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''நம்ம தலையில கை வச்சுடுவாங்களோன்னு பயப்படுதாவ வே...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் பெரியசாமி அண்ணாச்சி.
''யாரு, எதுக்கு பயப்படுறாங்க பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''அ.தி.மு.க., கூட்டணியில பா.ம.க., சேர்ந்திருந்தா, தேர்தல் செலவுக்கு சிரமமில்லாம இருந்திருக்கும்னு பா.ம.க., நிர்வாகிகள் நினைக்காவ வே... ஏன்னா, தமிழகத்துலயே, கூட்டணி கட்சிகளுக்கு சீட்டும், தேர்தல் செலவுக்கு பணமும் தர்ற கட்சி அ.தி.மு.க., தான்...
''அந்த வகையில, 'அ.தி.மு.க., அணியில இருந்திருந்தா, நம்ம கட்சி வேட்பாளர்கள் செலவுகளை அவங்களே பார்த்திருப்பாவ... இப்ப, பா.ஜ., அணிக்கு போறதால, அவங்க சீட் மட்டும் தான் தருவாவ... நோட்டு எதுவும் தேறாது... அதனால, தலைமை நம்மை செலவழிக்க சொல்லிடுமே'ன்னு பா.ம.க., நிர்வாகிகள் கவலைப்படுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''மறுபடியும், கட்சியில முக்கிய பொறுப்பு வழங்க முடிவு பண்ணியிருக்காங்க...'' என, கடைசி தகவலுக்கு மாறினார் அந்தோணிசாமி.
''எந்த கட்சி விவகாரம் பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''தி.மு.க.,வுல, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலரா இருந்த முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், தென்காசி தெற்கு மாவட்ட செயலரா இருந்த சிவபத்மநாபன், திருநெல்வேலி மத்திய மாவட்ட செயலரா இருந்த அப்துல் வஹாப் எம்.எல்.ஏ., ஆகிய மூணு பேர் மேலயும், பல புகார்கள் வந்ததால, அவங்களது மாவட்ட செயலர் பதவிகளை, சில மாதங்களுக்கு முன்னாடி பறிச்சுட்டாங்க...
''இப்ப, லோக்சபா தேர்தல் வேலைகள் நிறைய இருக்கிறதால, இந்த மாதிரி பதவி பறிக்கப்பட்டவங்க, கட்சியில இருந்து நீக்கப்பட்டவங்க எல்லாம், ஒரு மன்னிப்பு கடிதம் எழுதி தந்தா, அவங்களை மறுபடியும் கட்சியில சேர்த்துக்கிறாங்க...
''மேற்கண்ட மூணு மாவட்ட செயலர்களும், தேர்தல் பணிகள்ல அனுபவம் வாய்ந்தவங்க... அதனால, அவங்களுக்கு மறுபடியும் மாவட்ட செயலர் பதவி அல்லது தேர்தல் பணிக்குழுவுல முக்கிய பதவி குடுத்து, தேர்தல் களத்துல இறக்கி விட தலைமை முடிவு பண்ணியிருக்குதுங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
பெஞ்சில் மேலும் சிலர் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.

