ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., மிரட்டலால் அலறும் 'கான்ட்ராக்டர்!'
ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., மிரட்டலால் அலறும் 'கான்ட்ராக்டர்!'
PUBLISHED ON : ஜூலை 13, 2026 12:17 AM

பில்டர் காபியை பருகியபடியே, “பண பலன்கள் தராம இழுத்தடிக்கறா ஓய்...” என, விவாதத்தை ஆரம்பித்தார் குப்பண்ணா.
“எந்த துறையில பா...” என கேட்டார் அன்வர்பாய்.
“தமிழக மின் வாரியத்தில் வேலை பார்க்கற ஊழியர்கள் சிலர், மின் விபத்துகள் மற்றும் உடல்நலக் குறைவால இறந்து போயிருக்கா... இவாளது குடும்பத்தினருக்கு பண பலன்களும், வாரிசுகளுக்கு வேலையும் தரணும் ஓய்...
“ஆனா, இவற்றை வழங்காம இழுத்தடிக்கறா... பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், அந்தந்த மாவட்ட மின்வாரிய அலுவலக அதிகாரிகளிடம் போய் கேட்டா, 'உங்களது ஆவணங்களை எல்லாம் சென்னை தலைமை அலுவலகத்துக்கு அனுப்பிட்டோம்... அங்கிருந்து தான் பதில் வரணும்'னு சொல்றா... சென்னையில எல்லாத்துக்கும், 'லேட்' பண்றதால, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பரிதவிச்சுண்டு இருக்கா ஓய்...” என்றார் குப்பண்ணா.
“பாலியல் தொல்லையால பாதிக்கப்பட்டிருக்காங்க...” என்றார் அந்தோணிசாமி.
“யாரை சொல்றீர் ஓய்...” என கேட்டார் குப்பண்ணா.
“சென்னை, அண்ணாநகர் போலீஸ் துணை கமிஷனர் அலுவலக நிர்வாகத்துல ஒரு அதிகாரி இருக்காரு... இவர், தன் எல்லைக்குள்ள வர்ற ஸ்டேஷன்கள்ல பணிபுரியும் பெண் போலீசாரை, 'மீட்டிங்'னு சொல்லி, அலுவலகத்துக்கு கூப்பிட்டு வச்சு மணிக்கணக்குல அரட்டை அடிக்கிறாருங்க...
“அப்ப, 'டபுள் மீனிங்'ல பேசி பெண் போலீசாரை சங்கடப்படுத்துறாரு... பக்கத்துல இருக்கிற அரசு குடியிருப்பில் தனியா வசிக்கும் அதிகாரி, தினமும் ஒரு பெண் போலீசை, வீட்டுல இருந்து சாப்பாடு எடுத்துட்டு வரும்படி சொல்றாருங்க...
“ஏற்கனவே இந்த அதிகாரி, விருதுநகர்ல இருந்தப்ப பெண் போலீசாரிடம் அத்துமீறி நடந்த புகார்ல சிக்கி தான், சென்னைக்கு துாக்கியடிக்கப்பட்டாரு... சென்னையில் பூக்கடை, அமைந்தகரை, கோயம்பேடுன்னு இவர் வேலை பார்த்த இடங்கள்ல எல்லாம் பெண் புகார்ல சிக்கியிருக்காரு... அண்ணாநகர்லயும் அதே வேலையை தொடர்றதால, பாதிக்கப்பட்ட பெண் போலீசார் பலரும், உயர் அதிகாரிகளிடம் எழுத்துபூர்வமாகவே புகார் குடுத்திருக்காங்க...” என்றார் அந்தோணிசாமி.
“ஜெயபிரகாஷ், இதையும் கேட்டுட்டு கிளம்பும்...” என்ற பெரியசாமி அண்ணாச்சியே, “போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனு குடுத்திருக்காரு வே...” என்றபடியே தொடர்ந்தார்...
“கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த த.வெ.க., - எம்.எல்.ஏ., ஒருத்தர், சென்னையைச் சேர்ந்த, 'கான்ட்ராக்டர்' ஒருத்தரிடம் தொழில் ரீதியா பெரிய தொகையை கடனா வாங்கியிருந்தாரு... இதுக்கு, 7 கோடி ரூபாய்க்கு, 'செக்' குடுத்திருக்காரு வே...
“ஆனா, அது வங்கியில் பணமில்லாம திரும்பிட்டு... இதனால, எம்.எல்.ஏ., மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், கான்ட்ராக்டர் செக் மோசடி வழக்கு போட்டிருக்காரு வே...
“இந்த வழக்கால தன் பதவிக்கு ஆபத்து வந்துடுமோன்னு பயப்படுற எம்.எல்.ஏ., 'வழக்கை வாபஸ் வாங்கு'ன்னு கான்ட்ராக்டருக்கு அடியாட்கள் மூலமா மிரட்டல் விடுத்திருக்காரு... இதனால, தனக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு முதல்வர் மற்றும் சபாநாயகருக்கு, கான்ட்ராக்டர் மனு அனுப்பியிருக்காரு வே...” என முடித்தார் பெரியசாமி அண்ணாச்சி.
“வாரும், சண்முகன்... மொடக்குறிச்சியில் இருந்து எப்ப வந்தீர்...” என நண்பரிடம் குப்பண்ணா நலம் விசாரிக்க, மற்றவர்கள் கிளம்பினர்.
