தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ 6 ஆண்டுகளாக அசைக்க முடியாத 'கட்டிங்' அதிகாரி!

 6 ஆண்டுகளாக அசைக்க முடியாத 'கட்டிங்' அதிகாரி!

 6 ஆண்டுகளாக அசைக்க முடியாத 'கட்டிங்' அதிகாரி!


PUBLISHED ON : ஜூலை 03, 2026 12:08 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 03, 2026 12:08 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஏலக்காய் டீயை பருகியபடியே, “துாய ஆட்சி நடக்குதுன்னு நிரூபிச்சிருக்காரு பா...” என, பெஞ்ச் விவாதத்தை ஆரம்பித்தார் அன்வர்பாய்.

“யாருங்க அது...” என கேட்டார் அந்தோணிசாமி.

“தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரா இருக்கிறவர் ஆனந்த்... இவரது துறையில், இணை இயக்குநர் அந்தஸ்துல இருக்கும் 48 அதிகாரிகளுக்கு, போன வாரம் இடமாறுதல் போட்டிருக்காங்க பா...

“எந்த சிபாரிசுக்கும், லஞ்சத்துக்கும் இடமில்லாம இந்த இடமாறுதல்களை செஞ்சிருக்காங்க... கடந்த தி.மு.க., ஆட்சியில், இந்த மாதிரி இடமாறுதல்களை காதும் காதும் வச்ச மாதிரி நடத்தி, 'கட்டிங்' வாங்கிடுவாங்க பா...

“இந்த முறை எல்லாமே வெளிப்படையா நடந்திருக்குது... இதனால, இடமாறுதல் வாங்கிய அதிகாரிகள் எல்லாம் அமைச்சரையும், முதல்வர் விஜயையும் வாழ்த்திட்டு இருக்காங்க பா...” என்றார் அன்வர்பாய்.

“தி.மு.க., பக்கம் போகும் முடிவுக்கு வந்துட்டார் ஓய்...” என்றார் குப்பண்ணா.

“யாருவே அது...” என கேட்டார் பெரியசாமி அண்ணாச்சி.

“அ.தி.மு.க.,வில் இருந்து நிறைய பேர், த.வெ.க.,வுக்கு படையெடுத்துட்டு இருக்கால்லியோ... சிலர் தி.மு.க., பக்கமும் போறா ஓய்...

“சென்னையை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், சமீபத்துல தி.மு.க.,வுல சேர்ந்துட்டார்... அவருடன் நெருக்கமா இருந்த இன்னொரு முன்னாள் அமைச்சரும், தி.மு.க.,வில் சங்கமிக்க முடிவு பண்ணிட்டாராம்... இப்ப, மாவட்ட செயலராகவும் இருக்கற இவர், சமீபத்தில் தன் ஆதரவாளர்களை கூப்பிட்டு ஆலோசனை நடத்தியிருக்கார் ஓய்...

“அதுல சிலர் தி.மு.க.,வில் சேர எதிர்ப்பு தெரிவிச்சாலும், பெரும்பாலானவா, 'ஓகே' சொல்லிட்டா... அதனால, பெரிய ஆதரவாளர்கள் பட்டாளத்தோட சீக்கிரமே தி.மு.க.,வில் சேர இருக்கார் ஓய்...” என்றார் குப்பண்ணா.

“மூர்த்தி, இதையும் கேட்டுட்டு கிளம்பும்...” என்ற பெரியசாமி அண்ணாச்சியே, “ஆறு வருஷமா வசூல் ராஜாங்கம் நடத்திட்டு இருக்காரு வே...” என்றார்.

“யாரை சொல்றீங்க...” என கேட்டார் அந்தோணிசாமி.

“விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியில் நகரமைப்பு ஆய்வாளரா ஒரு அதிகாரி இருந்தாரு... மூணு வருஷத்துக்கு முந்தி இவருக்கு, 'அசிஸ்டென்ட் சிட்டி பிளானர்' எனும் மாநகர உதவி திட்டமிடுநர் பதவி உயர்வு குடுத்தாவ வே...

“பொதுவா இப்படி பதவி உயர்வு குடுத்தா, வேற ஊருக்கு தான் மாத்துவாவ... ஆனா, இந்த அதிகாரி பதவி உயர்வு வாங்கி, ஆறாவது வருஷமா சிவகாசியிலயே வேலை பார்க்காரு வே...

“நகர்ல ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சம் காட்டுதாரு... புதிய கட்டடங்கள் கட்டுறதுக்கான அனுமதி வழங்க கணிசமான தொகையை, 'கட்டிங்'கா வாங்கி குவிக்காரு... பெரிய பெரிய பில்டர்கள், ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களை உடனுக்குடன் பார்க்கிறவர், சாதாரண மக்கள் வந்தா பார்க்க மாட்டேங்காரு வே...

“உங்களை பத்தி புகார் செய்வோம்னு யாராவது சொன்னா, 'தாராளமா பண்ணுங்க... எனக்கு நகராட்சி நிர்வாக இயக்குநர் அலுவலகத்துல நல்ல செல்வாக்கு இருக்கு... என்னை யாரும் எதுவும் பண்ண முடியாது'ன்னு எடுத்தெறிஞ்சு பேசுதாரு வே...” என முடித்தார் பெரியசாமி அண்ணாச்சி.

“கார்த்திகேயன், கிளம்பலாமா பா...” என நண்பரிடம் அன்வர்பாய் கேட்க, மற்றவர்களும் நடையை கட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us