/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
காங்., மூத்த எம்.எல்.ஏ.,வை மதிக்காத அரசு அதிகாரி!
/
காங்., மூத்த எம்.எல்.ஏ.,வை மதிக்காத அரசு அதிகாரி!
காங்., மூத்த எம்.எல்.ஏ.,வை மதிக்காத அரசு அதிகாரி!
காங்., மூத்த எம்.எல்.ஏ.,வை மதிக்காத அரசு அதிகாரி!
PUBLISHED ON : மார் 20, 2025 12:00 AM

ஏலக்காய் டீயை ருசித்தபடியே, ''இஷ்டத்துக்கு வந்துட்டு போறாங்க பா...'' என, அரட்டையை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
''யாரை சொல்றீங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் எந்த கட்டுப்பாடும் இல்லாம இருக்காங்க... பணி நேரத்துலயே, தங்களது சொந்த வேலையா அடிக்கடி வெளியில போயிடுறாங்க பா...
''பிற பள்ளி மாணவர்கள், அத்துமீறி இங்க வந்துட்டு போறதையும் ஆசிரியர்கள் கண்டிக்க மாட்டேங்கிறாங்க... மாசா மாசம், ஆசிரியர்கள் தலா, 200 ரூபாய் வசூல் பண்ணி, பள்ளியிலயே தடபுடல் விருந்து தயார் பண்ணி, மாணவியர் முன்னாடியே மூக்கு முட்ட சாப்பிடுறாங்க பா...
''இந்த பள்ளியில், போன வருஷம் 10ம் வகுப்பு பொது தேர்வுல நிறைய மாணவியர், 'பெயில்' ஆகிட்டாங்க... அப்பவே, கோவை கலெக்டர் கண்டிச்சதும் இல்லாம, 'தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுங்க'ன்னும் எச்சரிக்கை குடுத்தாரு... அப்புறமும் ஆசிரியர்கள் இஷ்டத்துக்கு வர்றதும், போறதுமா தான் இருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''கட்சி பேதமில்லாம வந்து, மாதம்பட்டி ரங்கராஜ் விருந்தை சாப்பிட்டுட்டு போனாங்க வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''காங்., முன்னாள் எம்.எல்.ஏ., டாக்டர் காயத்ரி தேவி, இப்ப பா.ஜ.,வுல இருக்காங்க... இவங்க மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, சமீபத்துல சென்னையில் நடந்துச்சு வே...
''மொத்தம் ரெண்டு நாள் நடந்த திருமண விழாவுல, 9,000 பேருக்கு மாதம்பட்டி ரங்கராஜ் விருந்து தயார் செஞ்சாரு... கட்சி பேதமில்லாம எல்லா தலைவர்களும் கலந்துக்கிட்டாவ வே...
''முதல்வர் ஸ்டாலின் வந்துட்டு போனதும், அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமியும், தமிழக பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜாவும் வந்தாவ... ரெண்டு பேரும் வி.ஐ.பி.,க்கள் அறையில ஒண்ணா உட்கார்ந்து சாப்பிட்டபடியே அரசியலும் பேசியிருக்காவ வே...
''அதே மாதிரி, நாம் தமிழர் கட்சி சீமான், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, த.வெ.க., துணை பொதுச் செயலர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரும் வந்திருந்தாவ... வெளியூர்ல இருந்ததால வர முடியாத முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும், த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசனும், மறுநாள் காயத்ரி தேவி வீட்டுக்கே போய் மணமக்களை வாழ்த்தியிருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''அதிகாரி கூட மதிக்கிறது இல்லைங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''தி.மு.க., கூட்டணியில் இருக்கிற காங்., கட்சியின் மூத்த எம்.எல்.ஏ., முனிரத்னம்... நாலாவது முறையா எம்.எல்.ஏ.,வான இவர், சட்டசபை காங்., துணை தலைவராகவும் இருக்காருங்க...
''இவர், போன வாரம், சென்னையில் நெடுஞ்சாலை துறையின் உயர் அதிகாரியை சந்திக்க போயிருக்காரு... வெளியில இருந்த ஊழியர்கள், அவரை உடனடியா உள்ளே அனுப்பலைங்க... அரை மணி நேரம் காத்திருக்க வச்சு தான், அனுப்பியிருக்காங்க...
''நெடுஞ்சாலை துறை அதிகாரியும், 'எதா இருந்தாலும் ஆபீஸ்ல மனுவா குடுங்க... எனக்கு வேற வேலை இருக்கு'ன்னு சொல்லிட்டு பட்டுன்னு கிளம்பிட்டாரு... 'ஆளுங்கட்சி கூட்டணியில் இருந்தும் இவ்வளவு தான் மரியாதையா'ன்னு எம்.எல்.ஏ., புலம்பிட்டே போனாருங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
''செல்வராஜ் வரார்... சுக்கு காபி குடும் நாயரே...'' என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.