PUBLISHED ON : ஜூலை 31, 2026 12:01 AM

“வேலியே பயிரை மேயும் கதையை கேளுங்கோ ஓய்...” என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் குப்பண்ணா.
“விளக்கமா சொல்லுங்க பா...” என கேட்டார் அன்வர்பாய்.
“சிவகங்கை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையில், டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., மற்றும் ஆறு போலீசார்னு, ஒன்பது பேர் தான் இருக்கா... பல வருஷங்களா இங்கயே இருக்கறதால, எல்லா துறை அதிகாரிகளுக்கும் நன்னா பழக்கமாகிட்டா ஓய்...
“இதனால, வெளிலேர்ந்து லஞ்சம் வாங்கற அதிகாரிகளிடம், '50 சதவீதத்தை எங்களுக்கு வெட்டுங்கோ'ன்னு, பேரம் பேசி இந்த போலீஸ்காரா வாங்கிடறா... பெயரளவுக்கு மட்டும் ஒரு சிலரை பிடிச்சு வழக்கு போடறா... 'இவாளை ஒட்டுமொத்தமா மாத்தினா தான்,மாவட்டத்துல லஞ்சத்தை ஒழிக்க முடியும்'னு, நேர்மையான அரசு ஊழியர்கள் சொல்றா ஓய்...” என்றார் குப்பண்ணா.
“தி.மு.க., - எம்.பி., தயவில் ஆட்டம் போடுதாரு வே...” என்றார் பெரியசாமி அண்ணாச்சி.
“யார் ஓய் அது...” என கேட்டார் குப்பண்ணா.
“காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றிய பெண் அதிகாரியின், அரசு வாகன டிரைவரை தான் சொல்லுதேன்... இவரது வாகனம் தினசரி பயணம் செய்ற இடங்களை, 'லாக் புக்' எனப்படும் புத்தகத்துல முறையா பதிவு செய்ய மாட்டேங்காரு வே...
“இது பத்தி பெண் அதிகாரி கேட்டா, தன் துறை சார்ந்த சங்க நிர்வாகிகளை விட்டு மிரட்டுதாரு... அதோட, 'நான் காலையில 9:00ல இருந்து, சாயந்தரம் 5:00 மணி வரைக்கும் தான் வேலை பார்ப்பேன்... விடுமுறை தினங்கள், ராத்திரி நேரங்கள்ல ஆய்வு, கிராமங்கள் கண்காணிப்பு பணின்னு, சும்மா சும்மா என்னைத் தொந்தரவு செய்யக்கூடாது'ன்னு, நிபந்தனைகள் எல்லாம் போடுதாரு வே...
“இவருக்கு, மாவட்ட நிர்வாகம் மாற்று பணியிடம் ஒதுக்குச்சு... ஆனா, காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம் ஆதரவுல, மாற்று பணியை ரத்து பண்ணிட்டு, இங்கனயே இருந்து எல்லாரையும் மிரட்டிட்டு இருக்காரு வே...” என்றார் பெரியசாமி அண்ணாச்சி.
“பாலகிருஷ்ணன், இதையும் கேட்டுட்டு கிளம்புங்க...” என்ற அந்தோணிசாமியே, ''அமைச்சர் உத்தரவை கண்டுக்கலைங்க...'' என்றபடியே தொடர்ந்தார்...
''தமிழக சுகாதாரத் துறை அமைச்சரான டாக்டர் அருண்ராஜ், முன்னாள் ஐ.ஆர்.எஸ்., அதிகாரியா இருந்தாலும், ஆரம்ப சுகாதார நிலையத்துல டாக்டராகவும் இருந்திருக்காருங்க... இவர், 'தி.மு.க., ஆட்சி மாதிரியில்லாம, அரசு டாக்டர்களை அதிகாரிகள் கண்ணியமா நடத்தணும்'னு, உத்தரவு போட்டிருக்காருங்க...
''ஆனா, அதை இந்தத் துறையின் மூத்த அதிகாரி கண்டுக்கவே இல்லை... அதாவது, 'கடந்த ஆட்சியில், போராட்டம் நடத்திய அரசு டாக்டர்கள் மற்றும் நர்ஸ்கள் மீது எடுக்கப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைகள் இந்த ஆட்சியிலும் தொடரும்'னு சொல்றாருங்க...
''இது பத்தி அவரிடம் கேட்டா, 'இப்ப, முதல்வரின் முதன்மைச் செயலரா இருக்கிறவர், சுகாதாரத் துறைக்கு செயலரா இருந்தப்ப போட்ட அந்த உத்தரவை நான் மாத்த முடியாது'ன்னு, சாக்கு சொல்றாருங்க...
''அதோட, தன்னை பார்க்க வர்ற டாக்டர்கள் மற்றும் பார்வையாளர்களை மணிக்கணக்குல காத்திருக்க வைக்கிறாரு... அவ்வளவு நேரம் காத்திருந்தாலும், கோவில்ல சாமி தரிசனம் மாதிரி, எல்லாரையும் வரிசையில வரவழைச்சு, அதிகாரி நின்றபடியே எல்லாரிடமும் ஒரு சில வார்த்தைகள் பேசி அனுப்பிடுறாரு... இதனால, அவர் மீது டாக்டர்கள், நர்ஸ்கள் எல்லாம் கடும் அதிருப்தியில இருக்காங்க...'' என முடித்தார் அந்தோணிசாமி.
''தாரேஸ் அகமது இங்க உட்காரும்...'' என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.
