/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
தனிக்காட்டு ராஜாவாக செயல்படும் ஊராட்சி அதிகாரி!
/
தனிக்காட்டு ராஜாவாக செயல்படும் ஊராட்சி அதிகாரி!
PUBLISHED ON : டிச 15, 2025 02:56 AM

''எதுக்கு, 300 ரூபாய் கேட்கிறாங்கன்னு தெரியலைங்க...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அந்தோணிசாமி.
''யார்கிட்ட யாருப்பா பணம் கேட்டது...'' என கேட்டார், அன்வர்பாய்.
''தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வுகள், 2026 மார்ச், 2 முதல், 26ம் தேதி வரை நடக்க இருக்கு... தேர்வு முடிவுகளை, மே 8ல் வெளியிட போறாங்க...
''ரிசல்ட் வெளியானதும், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்க, தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளிகள் எல்லாம், 300 ரூபாய் கட்டணும்னு, அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தி இருக்குதுங்க...
''டிஜிட்டல் தொழில்நுட்பம் இல்லாத கடந்த காலங்கள்ல, பள்ளிகளின் அறிவிப்பு பலகையில் தேர்வு முடிவுகளை பேப்பர்ல ஒட்டுவாங்க... இந்த பேப்பர் செலவுக்கு பணம் வசூல் செஞ்சாங்க...
''இப்ப, 'எல்லாரும், தேர்வு முடிவுகளை, 'ஆன்லைன்'ல பார்த்துடுறாங்க... தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, அந்தந்த பள்ளியிலயே பதிவிறக்கம் பண்ணியும் குடுத்துடுறாங்க... அப்புறம் எதுக்கு, 300 ரூபாய் கேட்கிறாங்க'ன்னு தலைமை ஆசிரியர்கள் எல்லாம் புலம்பிட்டு இருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''திடீர் ஆய்வுக்கு போனவருக்கு, அதிர்ச்சி வைத்தியம் குடுத்திருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''யாருவே அது...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''சென்னையில் இருக்கிற அரசு கலை, அறிவியல் கல்லுாரிகள்ல, சமீபத்தில், உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன், திடீர்னு ஆய்வுக்கு போனாரு... கல்லுாரிகள்ல இருக்கும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செஞ்சாரு பா...
''அப்ப, மெரினா கடற்கரை சாலையில் இருக்கும் கல்லுாரிக்கு போன அமைச்சரை, வாசல்லயே காத்திருந்த மாணவ - மாணவியர், பேராசிரியர்கள் ஆரவாரமா வரவேற்றாங்க... 'நாம திடீர்னு ஆய்வுக்கு வந்தது, இவங்களுக்கு எப்படி தெரிஞ்சது'ன்னு அமைச்சரே ஆச்சரியப்பட்டு போயிட்டாரு பா...
''ஆனா, அந்த கல்லுாரி முதல்வர், கல்லுாரி கல்வி இயக்ககத்துல முக்கிய பொறுப்புல இருக்காராம்... அதனால, அமைச்சரது பயண திட்டம் எல்லாம் அவருக்கு முன்கூட்டியே வந்துடுச்சு... அதனால தான், அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு குடுத்து, அசத்தியிருக்காரு பா...'' என்றார், அன்வர்பாய்.
''ராமன் உட்கார இடம் குடுங்கோ...'' என்ற குப்பண்ணாவே, ''நான் வச்சது தான் சட்டம்னு செயல்படறார் ஓய்...'' என்றபடியே தொடர்ந்தார்...
''சென்னையை ஒட்டி, மேடவாக்கம் ஊராட்சி இருக்கோல்லியோ... இதுக்கு தலைவரா இருக்கற ஆளுங்கட்சி பெண்மணி, ஊராட்சி அலுவலகம் பக்கமே வர்றது இல்ல ஓய்...
''இதனால, ஊராட்சி அதிகாரி தான் அங்க ராஜ்ஜியம் பண்றார்... துாய்மை பணியாளர்களை, தன் வீட்டு வேலைகளுக்கு அனுப்பி வச்சுடறார்... தான் வெளியூர் போறப்ப, துாய்மை பணியாளர்களை, தன் வீட்டை காவல் காக்க சொல்றார் ஓய்...
''அவாளை தரக்குறைவா பேசறார்... தன்னை எதிர்த்து கேள்வி கேட்ட, 10 துாய்மை பணியாளர்களை, ஊராட்சி தலைவர்கிட்ட கூட சொல்லாம, வேலையை விட்டே நிறுத்திட்டார் ஓய்...
''இந்த அதிகாரி, இதே ஊராட்சியில் ஏற்கனவே இருந்தப்ப, கழிவுநீர் வாகனம் வாங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டு, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்... யார், யாரையோ பிடிச்சு, மறுபடியும் இதே ஊராட்சிக்கு வந்து, புகுந்து விளையாடறார் ஓய்...'' என முடித்தார் , குப்பண்ணா.
''ரூபன், இப்படி உட்காருங்க...'' என, நண்பருக்கு இடம் தந்தபடியே அந்தோணிசாமி எழ, அனைவரும் கிளம்பினர்.

