PUBLISHED ON : நவ 04, 2026 12:00 AM

இஞ்சி டீயை உறிஞ்சியபடியே, “இடைத்தேர்தல்ல போட்டியிட ஆர்வமே இல்லீங்க...” என, அரட்டையை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.
“ யாருக்கு வே...” என கேட்டார் பெரியசாமி அண்ணாச்சி.
“தமிழகத்துல, அஞ்சு சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்க இருக்கு... இதுல, திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் சட்டசபை தொகுதியில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடப் போறதா அறிவிச்சிருக்காருங்க...
“இங்க, ஏற்கனவே அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,வா இருந்து ராஜினாமா பண்ணிட்டு, த.வெ.க.,வில் சேர்ந்திருக்கிற இசக்கி சுப்பையா தான், ஆளுங்கட்சி சார்பில் மீண்டும் போட்டியிடுவார்னு சொல்றாங்க... தி.மு.க., சார்பில், இந்த தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ., மற்றும் முன்னாள் சபாநாயகரான ஆவுடையப்பன், தன் மகன் பிரபாகரனுக்கு, ‘சீட்’ கேட்டிருக்காருங்க...
“இதுபோக, முன்னாள் எம்.பி., ஞானதிரவியம், தி.மு.க., விவசாய தொழிலாளர் அணி மாநில துணை செயலர் கணேஷ்குமார் ஆதித்தன் உட்பட பலரும், ‘சீட்’ கேட்டுட்டு இருக்காங்க... ஆனா, அ.தி.மு.க., தரப்புல யாருமே ஆர்வம் காட்டாம கமுக்கமா இருக்காங்க...” என்றார் அந்தோணிசாமி.
“அதிகாரியை ஓரங்கட்டுதாங்க வே...” என்றார் பெரியசாமி அண்ணாச்சி.
“எந்த ஊருல பா...” என கேட்டார் அன்வர்பாய்.
“காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலரா, அதாவது டி.ஆர்.ஓ.,வா இருக்கிறவங்க திவ்யஸ்ரீ... கலெக்டருக்கு அடுத்த நிலையில இந்த பதவி வருது வே...
“கலெக்டர் விடுமுறையில் போனா, அந்த பதவியை டி.ஆர்.ஓ., தான் கவனிப்பாங்க... கலெக்டர் போக முடியாத நிகழ்ச்சிகளுக்கு, டி.ஆர்.ஓ., தான் போவாங்க வே...
“ஆனா, காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா போக முடியாத நிகழ்ச்சிகளுக்கு டி.ஆர்.ஓ.,வை அனுப்பாம, கூடுதல் கலெக்டர் அல்லது சப் – கலெக்டரை அனுப்பிடுதாங்க... இதனால, டி.ஆர்.ஓ.,வை கலெக்டர் புறக்கணிக்கிறதா, வருவாய் துறையினர் மத்தியில புகைச்சல் எழுந்திருக்கு வே...” என்றார் பெரியசாமி அண்ணாச்சி.
“அரசு பணத்தை வெட்டியா செலவழிக்கறா ஓய்...” என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
“தமிழக அரசின் பால்வளத் துறை அமைச்சர் விஜயலட்சுமி, இந்த துறையின் செயலர் மற்றும் கமிஷனர் எல்லாம் மாசம் ரெண்டு, மூணு ஆய்வு கூட்டங்களுக்கு ஏற்பாடு பண்றா... எல்லா கூட்டங்களும் சென்னையில் தான் நடக்கறது ஓய்...
“இதுல, தமிழகம் முழுக்க இருக்கற, 27 ஒன்றியங்களைச் சேர்ந்த ஆவின் பொது மேலாளர்கள், துணை பதிவாளர்கள் எல்லாம் கலந்துக்கணும்னு சொல்றா... சில அதிகாரிகள் மட்டும் தான் ரயில், பஸ்கள்ல போறா ஓய்...
“பெரும்பாலான அதிகாரிகள், ஆவினுக்கு சொந்தமான கார்கள்ல தான் சென்னைக்கு போயிட்டு வரா... இதுக்கு பெட்ரோல் எல்லாம் ஆவின் பணத்துல இருந்து செலவாறது ஓய்...
“பல துறைகள்ல இந்த மாதிரி ஆய்வு கூட்டங்களை, ‘வீடியோ கான்பரன்ஸ்’லயே நடத்திடறா... ஆனா, ஆவின்ல தான் எல்லாரையும், ‘சென்னைக்கு வாங்கோ’ன்னு கூப்பிடறா ஓய்...
“ஆய்வு கூட்டங்கள்லயும், ‘பால் கொள்முதலை அதிகரிக்கணும்... பால் பொருட்கள் விற்பனையில் கவனம் செலுத்தணும்’னு பொதுவான அறிவுரைகளை தான் தரா... ‘இதை வீடியோ கான்பரன்ஸ்லயே சொன்னா, அதிகாரிகளுக்கு நேரம் விரயம், ஆவின் பணம் வெட்டியா செலவாறது தடுக்கப்படுமே’ன்னு ஊழியர்கள் புலம்பறா ஓய்...” என முடித்தார் குப்பண்ணா.
“சென்னையில இருக்கிறவங்களுக்கு, பொழுது போகாம ஆய்வு கூட்டம் நடத்தி அரட்டை அடிக்காவளோ...” என்றபடியே பெரியசாமி அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.
