அ.தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளரின் வெற்றிக்கு வேட்டு?
அ.தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளரின் வெற்றிக்கு வேட்டு?
PUBLISHED ON : ஏப் 12, 2026 02:10 AM

''அ திகாரியின் ஆளுங்கட்சி விசுவாசத்தை கேளுங்க...'' என்ற படியே, பெஞ்சில் அமர்ந்தார் அந்தோணிசாமி.
''எந்த ஊருல பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தின் தலைமை பதவியில், முன்னாள் முதல்வர் பெயர் கொண்ட தி.மு.க., பிரமுகர் ஒருத்தர் இருக்கார்... இவரது அலுவலகத்தை, தேர்தல் நடத்தை விதிகள் காரணமா பூட்டி, 'சீல்' வச்சிருக்காங்க...
''நிர்வாகத்துலயும் தி.மு.க., பிரமுகர் தலையிடக் கூடாது... ஆனாலும், ஒன்றிய அதிகாரி ஒருத்தர், தி.மு.க., பிரமுகருக்கு ரொம்பவே விசுவாசமா இருக்காருங்க...
''தன் பார்வைக்கு வர்ற எல்லா பைல்களையும், உதவியாளர் மூலமா, தி.மு.க., பிரமுகர் வீட்டுக்கு அனுப்பி, அவர் ஒப்புதல் தர்ற பைல்கள்ல மட்டுமே அதிகாரி கையெழுத்து போடுறாருங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''முத்துகணபதியும், கருணாநிதியும் சீக்கிரம் வந்துடுவாங்க...'' என, மொபைல் போனில் பேசிவிட்டு, 'ஆப்' செய்தபடியே வந்த அன்வர்பாய், ''சாவியை தராம அலைக்கழிக்கிறாங்க பா...'' என்றார்.
''என்ன சாவியை ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.
''தேர்தல் நடத்தை விதிகள் காரணமா, மாவட்ட மற்றும் தாலுகாக்கள்ல இருக்கிற அரசு விருந்தினர் விடுதிகள்ல, அரசியல்வாதிகள், மக்கள் பிரதிநிதிகள் யாரும் தங்க முடியாது... அரசு விடுதிகள் எல்லாம், தேர்தல் பொது பார்வையாளர் கட்டுப்பாட்டுக்கு போயிடும் பா...
''சில விடுதிகள்ல தேர்தல் பார்வையாளர்கள், கண்காணிப்பு அதிகாரிகள் தங்கியிருக்காங்க... அது தவிர, மற்ற விடுதிகள் எல்லாம் பூட்டிதான் கிடக்குது பா...
''இந்த விடுதிகள்ல விலை உயர்ந்த, 'டிவி' மற்றும், 'ஏசி'க்கள், 'வாஷிங் மெஷின், பர்னிச்சர்' எல்லாம் இருக்குது... குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை இந்த பொருட்களை முறையா பராமரிக்கணும் பா...
''இதுக்காக, பொதுப்பணித் துறை ஊழியர்கள், அந்த விடுதிகளின் சாவிகளை கேட்டா, தேர்தல் பணி அதிகாரிகள் தர மாட்டேங்கிறாங்க... 'தேர்தல் நடத்தை விதிகள், ஓட்டு எண்ணிக்கைக்கு பிறகு தான் முடிவுக்கு வரும்... அதுவரைக்கும் அந்த பொருட்களை பராமரிக்காம இருந்தா, கூடுதல் செலவு வைக்கும்'னு ஊழியர்கள் புலம்புறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''பொய் கணக்கு எழுதி, பணத்தை சுருட்டுதாங்க வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''பெரம்பலுார் மாவட்டம், குன்னம் தொகுதியில், இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் சரண்யா, கூட்டணி கட்சியான, அ.தி.மு.க.,வின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுதாங்க... இவங்களுக்கு தேர்தல் பணி செய்ய, கட்சி நிறுவனர் பாரிவேந்தருக்கு சொந்தமான சென்னை பல்கலையில் இருந்து, ஒரு பேராசிரியர் தலைமையில குழு வந்திருக்கு வே...
''இந்த குழு, பெரம்பலுார்ல முகாமிட்டிருக்கு... பிரசாரம், பூத் கமிட்டி செலவுகளை எல்லாம் இவங்க தான் கவனிக்காவ வே... இவங்களுக்கு தேர்தல் அனுபவம் சுத்தமா இல்ல... சொந்த கட்சி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை எப்படி ஒருங்கிணைத்து தேர்தல் வேலை செய்யணும்னு தெரியல வே...
''அத்தியாவசிய செலவுகளை செய்யாதவங்க, தேவையில்லாம வெட்டி செலவுகளை பண்ணுதாவ... அதோட, எல்லா செலவுகளையும் கூடுதலா எழுதி, காசு பார்க்கிறதுல தான் குறியா இருக்காவ... 'இவங்களால, சரண்யா வெற்றிக்கு வேட்டு வந்துடுமோ'ன்னு அந்த கட்சியினர் புலம்புதாவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.
