/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
மூன்று ஆண்டுகளாக ' ஏசி ' அறையில் ' ஓசி ' யில் தங்கும் அதிகாரி!
/
மூன்று ஆண்டுகளாக ' ஏசி ' அறையில் ' ஓசி ' யில் தங்கும் அதிகாரி!
மூன்று ஆண்டுகளாக ' ஏசி ' அறையில் ' ஓசி ' யில் தங்கும் அதிகாரி!
மூன்று ஆண்டுகளாக ' ஏசி ' அறையில் ' ஓசி ' யில் தங்கும் அதிகாரி!
PUBLISHED ON : மே 28, 2025 12:00 AM

''பறிமுதல் பணத்தை பாக்கெட்டுல போட்டுக்கிறாரு பா...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அன்வர்பாய்.
''யாருங்க அது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''கோவை மாநகர மதுவிலக்கு போலீசார், 'டாஸ்மாக்' கடைகளுக்கு அடிக்கடி போய் சோதனை போடுறாங்க... சட்டவிரோதமா மது விற்பனை நடந்தா, மது பாட்டில்களை பறிமுதல் பண்ணி, விற்பனை செய்றவங்களை கைது பண்றாங்க பா...
''இது, நல்ல விஷயம் தான்னு தோணும்... ஆனா, இதையே சாக்கா வச்சு, ஒரு அதிகாரி, 'கல்லா' கட்டுறாரு... சமீபத்துல, ஆவாரம்பாளையம் பகுதியில இருந்த டாஸ்மாக் கடைக்கு சோதனைக்கு போன அதிகாரி, சட்டவிரோதமா விற்பனை பண்ணிய மது பாட்டில்கள் மற்றும் 2 லட்சம் ரூபாயை பறிமுதல் செஞ்சாரு பா...
''ஆனா, வழக்கு பதியுறப்ப, பறிமுதல் பணத்தை வெறும் 650 ரூபாய்னு காட்டியிருக்காரு... இந்த மாதிரி, லட்சக்கணக்குல பணத்தை பறிமுதல் செஞ்சாலும், சில ஆயிரங்களை மட்டும் கணக்குல காட்டிட்டு, மிச்ச பணத்தை, 'ஆட்டை'யை போட்டுடுறாரு பா...'' என்றார், அன்வர்பாய்.
''உதயகுமார், தள்ளி உட்காரும்...'' என்ற குப்பண்ணாவே, ''ராத்திரி வரை இருந்து வேலை பார்க்கறாங்க ஓய்...'' என்றார்.
''யாருவே அந்த கடமை வீரர்கள்...'' எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''திருப்பூர் மாவட்டம், தாராபுரம், காங்கேயம், உடுமலை பகுதி கல்குவாரிகள்ல பாறைகள் மற்றும் மண்ணை சட்டவிரோதமா பலரும் வெட்டி கடத்தறா... ஆனா, இதை எல்லாம் கனிமவளத் துறையினர் கண்டுக்க மாட்டேங்கறா ஓய்...
''கனிமவளத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில், கலெக்டர் உத்தரவையும் மீறி, தற்காலிகமா இரு பெண்களை வேலைக்கு நியமிச்சிருக்கா... இவா ரெண்டு பேரும் ஆபீஸ் டைம் முடிஞ்சும், ராத்திரி 8:00 மணி வரைக்கும் இருக்காங்க...
''ஆபீஸ் பைல்கள்ல இருக்கற முக்கியமான ஆவணங்களை நகல் எடுத்து, கல் குவாரி, மண் கடத்துற கும்பல்களுக்கு குடுக்கறாங்க ஓய்... அதுவும் இல்லாம, 'கட்டிங்' வசூல் பண்ற பணிகளையும் கவனிக்கறாங்க... இங்க டிரைவரா இருக்கறவரே மாசம் லட்சக்கணக்குல சம்பாதிக்கறார்னா, அதிகாரிகள் கதையை கேக்கணுமா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''கிட்டத்தட்ட மூணு வருஷமா, 'ஓசி'யில தங்கியிருக்காரு வே...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''திருநெல்வேலி மாநகராட்சியில, நகர் ஊரமைப்பு அலுவலக உயர் அதிகாரியா இருக்கிறவர், வெளி மாவட்டத்தை சேர்ந்தவரு... மூணு வருஷத்துக்கும் மேலாக இங்க பணியில இருக்காரு வே...
''அனுமதியற்ற சட்டவிரோத கட்டடங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காம இருக்காரு... அவரது துறை சார்ந்து, தகவல் உரிமை சட்டத்தில் எந்த கேள்வி கேட்டாலும், 'வழக்கு இருக்கு... விசாரணை நடக்கு'ன்னு தான் பதில் தருவாரு வே...
''புது பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல, ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் சிலர் நடத்துற ஹோட்டல்ல, 'ஏசி' அறையில தான் அதிகாரி தங்கியிருக்காரு... இதுக்கு தினசரி வாடகையா 2,000 ரூபாய் கட்டணும் வே...
''ஆனா, அதிகாரிக்கு, 'பிரீ'யாவே குடுத்திருக்காவ... இவரால எந்த அளவுக்கு லாபம் கிடைச்சா, மாசம் 60,000 ரூபாய் வாடகை வாங்காம தங்க விடுவாங்கன்னு கணக்கு போட்டு பார்த்துக்கிடுங்க வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
எதிரில் வந்தவரை நிறுத்திய குப்பண்ணா, ''வாங்க தம்பி, ஸ்ரீரங்கம் போயிருந்தேளே... ரங்கநாதர் தரிசனம் எல்லாம் எப்படி...'' என பேச துவங்க, மற்றவர்கள் கிளம்பினர்.