தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ போலி பத்திரப்பதிவில் புகுந்து விளையாடும் அதிகாரி!

 போலி பத்திரப்பதிவில் புகுந்து விளையாடும் அதிகாரி!

 போலி பத்திரப்பதிவில் புகுந்து விளையாடும் அதிகாரி!


PUBLISHED ON : பிப் 09, 2026 02:28 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 09, 2026 02:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''ந ட்டாத்துல விட்டுட்டாரு பா...'' என்ற படியே, ஏலக்காய் டீயை உறிஞ்சினார் அன்வர்பாய்.

''என்ன விஷயமுங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.

''திருப்பூர், கோவை மாவட்டங்கள்ல, சின்னதும், பெருசுமா நுாற்றுக்கணக்கான கறிக்கோழி நிறுவனங்கள் செயல்படுது... இந்த நிறுவனங்கள், கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளுக்கு கோழிக்குஞ்சுகள், தீவனம், மருந்து எல்லாம் குடுத்து, வளர்ப்பு கூலியா கிலோவுக்கு, 6.50 ரூபாய் தந்துட்டு இருந்துச்சு பா...

''இந்த சூழல்ல, 'விவசாயம் காப்போம்' என்ற பெயர்ல களம் இறங்கிய விவசாய சங்க தலைவர் ஒருத்தர், 'வளர்ப்பு கூலியை கிலோவுக்கு, 20 ரூபாயா தரணும்'னு கறிக்கோழி விவசாயிகள் போராட்டத்தை துாண்டி விட்டாரு... இவரை நம்பி, அவங்களும் காத்திருப்பு போராட்டம், உண்ணா விரதம்னு எல்லா போராட்டங்களையும் நடத்தினாங்க பா...

''கறிக்கோழி நிறுவனங்கள் சார்பில், விவசாயிகளை கூப்பிட்டு, 'நீங்க கோழிகளை வளர்க்க மறுத்தா, நாங்க வேற ஆட்களிடம் குடுத்துடுவோம்... அப்புறம் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்காது'ன்னு சொல்லிட்டாங்க... அதோட, தங்களை மிரட்டிய விவசாய சங்க தலைவர் மீது போலீஸ்ல புகார் கொடுத்து, அவரை, 'உள்ளே' தள்ளிட்டாங்க பா...

''இதனால, கோழி வளர்ப்பு விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு, மறுபடியும் தொழிலுக்கு திரும்பிட்டாங்க... இவங்களை துாண்டி விட்டவர், கம்பி எண்ணிட்டு இருக்காரு பா...'' என்றார், அன்வர்பாய்.

ஒலி த்த மொபைல் போனை எடுத்த பெரியசாமி அண்ணாச்சி, ''முருகசாமி சொல்லும்... எல்லாம் ஈசன் செயல்...'' என பேசி வைத்தபடியே, ''மணப்பாறையில் களமிறங்க போறாரு வே...'' என்றார்.

''யாரை சொல்றீர் ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.

''அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் , கு.ப.கிருஷ்ணன், 2021ல், திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு தோத்து போயிட்டாருல்லா... சமீபத்தில், த.வெ.க.,வில் சேர்ந்துட்ட இவர், தன் உறவினர்கள் அதிகம் இருக்கும் மணப்பாறை தொகுதியில் போட்டியிட முடிவு பண்ணியிருக்காரு வே...

''இங்க போட்டி யிட்டா வெற்றி வாய்ப்பு எப்படியிருக்கும்னு, உறவினர்களிடம் கருத்து கேட்டுட்டு இருக்காரு... இதனால, மணப்பாறையில் போட்டியிடலாம்னு இருந்த, த.வெ.க., நிர்வாகிகள் கடுப்புல இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.

''போலி பத்திரப்பதிவில் புகுந்து விளையாடறார் ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...

''துாத்துக்குடி பத்திரப்பதிவு அலுவலகத்துல, ரெண்டு வருஷமா இருக்கிற இளம் அதிகாரி , போலி பத்திரங்கள், பிரச்னைக்குரிய பத்திரங்களை பதிவு பண்றதுல ஆர்வமா இருக்கார்... அதுக்கு கணிசமான தொகையை வசூல் பண்ணிடறார் ஓய்...

''சென்னையில் வசிக்கும் டாக்டர் தம்பதிக்கு இந்த ஊர்ல இடம் இருந்துது... அவங்க இறந்துட்டதா, போலி இறப்பு சான்றிதழ் வாங்கி, வாரிசு அடிப்படையில், ரெண்டு பெண்கள், அந்த நிலத்தை, இளம் அதிகாரி துணையுடன், தங்களது பேருக்கு பதிவு பண்ணிட்டாங்க ஓய்...

''இது, டாக்டர் தம்பதிக்கு தெரியவர, போலீஸ்ல புகார் குடுத்திருக்கா... இதே மாதிரி, 1 ஏக்கர் 13 சென்ட் நிலத்தில், கோர்ட் உத்தரவுப்படி, 1 ஏக்கருக்கு முறையா பத்திரப்பதிவு செஞ்ச அதிகாரி, மீதம் 13 சென்ட் நிலத்தை போலி பத்திரப்பதிவு பண்ணி, பணம் வசூல் பண்ணிட்டார்...

''இதெல்லாம், துறையின் மேலிடம் வரைக்கும் புகாரா போயிட்டாலும், 'எல்லாரையும் நான் கவனிச்சிட்டதால, என்னை எதுவும் பண்ண முடியாது'ன்னு அந்த அதிகாரி சொல்றார் ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.

''சரி, நாகராஜன் நாளைக்கு பார்க்கலாம் பா...'' என, நண்பரிடம் அன்வர்பாய் விடைபெற, மற்றவர்களும் எழுந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us