PUBLISHED ON : ஜூலை 02, 2026 07:18 AM

பாலைவனங்களில் வாழும் கொம்பு பல்லிகளுக்கு குடிக்க நீர் கிடைப்பது மிகவும் அரிது. ஆனால், இவை தாகம் தணிக்க நீரைத் தேடி அலைவதில்லை. அவை, தங்களது மேல் தோல் மூலமே, காற்றிலிருந்து நீரை உறிஞ்சி குடிக்கும் வித்தை தெரிந்தவை.
காற்றில் உள்ள ஈரப்பதம் அல்லது ஈரமான மணலிலிருந்து இந்தப் பல்லியின் தோல், நீரை உறிஞ்சுகிறது. பிறகு புவியீர்ப்பு விசைக்கு எதிராக, அதன் வாய்க்கு நேரடியாக கொண்டு சேர்க்கிறது.
இந்த விந்தை எப்படி நிகழ்கிறது என்பதை விஞ்ஞானிகள் தற்போது கண்டறிந்துள்ளனர். பல்லியின் தோலில் ஒன்றோடொன்று இணைந்த செதில்களுக்கு இடையே நுண்ணிய, சமச்சீரற்ற கால்வாய்கள் அமைந்துள்ளன. இந்த நுட்பமான அமைப்பு, எவ்வித சிரமமும் இன்றி, 'நுண்புழை ஏற்றம்' என்ற இயற்பியல் தத்துவத்தின் அடிப்படையில், நீர்த்துளிகளை தானாகவே பல்லியின் வாயை நோக்கி கடத்துகிறது.
இந்த உயிரியல் அமைப்பை பின்பற்றி, பொறியாளர்கள் தற்போது புதிய செயற்கை பொருள் ஒன்றை உருவாக்கியுள்ளனர். பல்லியின் செதில்களை போன்ற அமைப்பை கொண்ட இந்த புதிய பொருள், காற்றில் உள்ள பனிமூட்டம் மற்றும் ஈரப்பதத்திலிருந்து தானாகவே நீரை சேகரிக்கும் திறன் கொண்டது. இதை செயல்படுத்துவதற்கு எவ்வித மின்சக்தியும் தேவையில்லை என்பது இதன் கூடுதல் சிறப்பம்சம்.
இயற்கையின் வடிவமைப்பை அடிப்படையாக கொண்ட இந்த தொழில்நுட்பம் (Biomimetics), எதிர் காலத்தில் வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பகுதி களுக்கும், நீர் வசதி இல்லாத விவசாய நிலங்களுக்கும் பெரும் வரப்பிரசாதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
