PUBLISHED ON : ஜூலை 02, 2026 07:20 AM

பருவநிலை மாற்றம், வாழிடச் சீரழிவு போன்ற வற்றால் பல தாவர இனங்கள் அழிந்து வருகின்றன. அறிவியலால் அடையாளம் காணப்படும் முன், பல தாவரங்கள் அழியும் ஆபத்து இருக்கிறது. எனவே, தாவரவியலாளர்கள் அவற்றை பதிவு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை, மதிப்பீடு செய்யப்பட்ட தாவரங் களில் 40 சதவீதம் அழிவின் விளிம்பில் உள்ளதாகவும், 3.3 லட்சம் தாவரங்கள் இன்னும் மதிப்பீடு செய்யப் படாமல் உள்ளதாகவும், இங்கிலாந்திலுள்ள கியூ ராயல் தாவரவியல் பூங்காவின் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
இந்த சவாலை எதிர்கொள்ள, டிஜிட்டல் மயமாக்கல் உதவும் என்கின்றனர், கியூ ராயல் தாவரவியல் பூங்காவின் தாவரவியலாளர்கள். உலகளவில், 14.5 கோடி ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. சார்லஸ் டார்வின் சேகரித்த ஆவணங்கள் உட்பட 74 லட்சம் ஆவணங்களை, இந்த அமைப்பு இணையத்தில் பதிவேற்றியுள்ளது.
நுண்ணிய தாவர வகைகளை அடையாளம் காணவும், பருவ நிலை மாற்றத்தின் தாக்கங்களை அறியவும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பேருதவியாக இருக்கிறது. சில நேரங்களில் நிபுணர்களை விட துல்லியமாக ஏ.ஐ., செயல்படுவதாக கியூ ஆய்வாளர்கள் ஆச்சரியம் தெரிவிக்கின்றனர்.
பல்லுயிர் வளம் மிக்க மடகாஸ்கரில், பல நுாற்றாண்டுகள் பழமை யான 37,000 ஆவணங்கள் டிஜிட்டல்மயமாக்கப் பட்டன. இதன் வாயிலாக, பல்லுயிர் பெருக்கம் குறித்த புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. அதேபோல, 180 ஆண்டுகள் பழமையான பூஞ்சை மாதிரிகளிலிருந்து, மரபணுக்களை மீட்டு எடுத்து, எதிர்கால மருத்துவ ஆய்வுகளுக்கு பயன்படுத்தவும் ஏ.ஐ., வழி வகுத்திருக்கிறது.
