/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
அனல் மின் ஊழியர்களை அலற விடும் அதிகாரி!
/
அனல் மின் ஊழியர்களை அலற விடும் அதிகாரி!
PUBLISHED ON : ஏப் 14, 2025 12:00 AM

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்ட நண்பர்கள் மத்தியில், ''அதிகாரிகள் அறைகளுக்கு, 'ஏசி' மாட்டியிருக்காங்க பா...'' என்றபடியே அமர்ந்தார், அன்வர்பாய்.
''எந்த துறையில வே...'' எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், கமிஷனர், பி.டி.ஓ., அறைகளுக்கு சமீபத்துல புது, 'ஏசி'க்கள் வாங்கி மாட்டியிருக்காங்க... அதோட, சேர்மன் அறைக்கும், 'ஏசி' பொருத்திட்டாங்க பா...
''இங்க, அ.தி.மு.க.,வைச் சேர்ந்தவர் தான் சேர்மனா இருந்தார்... அவரது பதவிக்காலம், கடந்த, ஜன., 5ல் முடிஞ்சு வீட்டுக்கு போயிட்டாரு... அந்த அறையை பூட்டியே தான் வச்சிருக்காங்க பா...
''பூட்டியிருக்கிற அறைக்கு எதுக்கு, 'ஏசி'ன்னு ஊழியர்கள் கேட்டிருக்காங்க... அதிகாரிகளோ, 'அடுத்து தேர்தல் நடந்து, புதுசா தலைவர் வர்றப்ப, எங்களுக்கு மட்டும், 'ஏசி' இருந்து, அவருக்கு இல்லாட்டி எங்க கதி என்னாகும்'னு கேட்டு, அவங்க வாயை அடைச்சுட்டாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''சட்ட விரோத ரிசார்ட்களால தொந்தரவா இருக்கு ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''கோவை மாவட்டம், பெரியநாயக்கன் பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சின்ன தடாகம், வீரபாண்டி ஊராட்சி பகுதிகள்ல, ஏகப்பட்ட சட்ட விரோத ரிசார்ட்கள் புற்றீசல்கள் மாதிரி பெருகிட்டே போறது... வார இறுதி நாட்கள்ல இந்த ரிசார்ட்கள்ல மக்கள் கூட்டம், கூட்டமா வந்து தங்கறா ஓய்...
''அவாளுக்கு சமைக்கப்படும் உணவுகள்ல நிறைய வீணாயிடறது... இந்த உணவுகளை, ஆனைகட்டி மற்றும் சுற்றியுள்ள வனப்பகுதிகள்ல ரிசார்ட் ஊழியர்கள் கொட்டறா ஓய்...
''இதை சாப்பிடறதுக்காக, காட்டுப்பன்றிகள் கூட்டம் கூட்டமா வரது... ஆனைகட்டி வழியா கேரளா போகும் இரு சக்கர வாகனங்களை இந்த பன்றிகள் விரட்டறதால, எல்லாரும் பயந்து அடிச்சு ஓடறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''ஊழியர்களை மன உளைச்சல்ல தள்ளிடுதாரு வே...'' என்றார், அண்ணாச்சி.
''எந்த துறை அதிகாரியை சொல்றீங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''துாத்துக்குடி அனல் மின் நிலையத்தில், 1,000க்கும் மேற்பட்டோர் வேலை பாக்காவ... இங்க பாய்லர் பிரிவுல ஒரு அதிகாரி இருக்காரு வே...
''இவர், தனக்கு கீழே வேலை பார்க்கிற அதிகாரிகள், ஊழியர்களை எப்பவும் திட்டிட்டே இருக்காரு... லீவ் எடுத்தா ஊழியர்களை மட்டுமல்லாம, அவங்க குடும்பத்தினரையும் சேர்த்து திட்டுதாரு வே...
''இவரது டார்ச்சர் தாங்க முடியாத அதிகாரிகள் பலர், 'டிரான்ஸ்பர்' வாங்கிட்டு ஓடிட்டாவ... சமீபத்தில் ஒரு அதிகாரி, 'இவரது டார்ச்சர் தாங்காம தற்கொலை பண்ணிக்க போறேன்'னு வீடியோ வெளியிட்டு, காணாம போயிட்டாரு வே...
''அவரது மனைவி போலீஸ்ல புகார் குடுக்க, போலீசார் அந்த அதிகாரியை ஒருவழியா மீட்டிருக்காவ... 'உயர் அதிகாரி டார்ச்சரே தற்கொலை முயற்சிக்கு காரணம்'னு அவர் வாக்குமூலமே குடுத்திருக்காரு வே...
''ஆனாலும், உயர் அதிகாரி மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கல... 'அவரை கட்டுப்படுத்தி, மன உளைச்சல்ல இருக்கிற மற்ற ஊழியர்களையும் காப்பாத்தணும்'னு பலரும் புலம்புதாவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
அரட்டை முடியவும், எதிரில் வந்தவரை நிறுத்திய அந்தோணிசாமி, ''சுரேஷ்குமார், இப்ப, பி.பி., எல்லாம் நார்மல் தானே...'' எனக் கேட்டு பேச துவங்க, மற்றவர்கள் கிளம்பினர்.