PUBLISHED ON : அக் 10, 2026 12:00 AM

பி ல்டர் காபியை பருகியபடியே, ‘‘தி.மு.க.,வுக்கு பதிலடி குடுத்துட்டார் ஓய்...’’ என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் குப்பண்ணா.
‘‘யாருங்க அது...’’ எனக் கேட்டார் அந்தோணிசாமி.
‘‘தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலகக்கோரி, காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் எல்லாம் சமீபத்துல டில்லியில் போராட்டம் நடத்தினாளோல்லியோ... ராகுல், பிரியங்கான்னு பலரும் இதுல கலந்துண்டா ஓய்...
‘‘தமிழகத்தில் இருந்து ராஜ்யசபா காங்., – எம்.பி.,யான பிரவீன் சக்கரவர்த்தி இதுல கலந்துக்காம, பக்கத்துல இருந்த, ‘கிளப்’புக்கு சாப்பிட போயிட்டதா, சமூக வலைதளங்கள்ல, தி.மு.க.,வினர் பதிவிட்டு கிண்டல் பண்ணியிருந்தா... ஆனா, அந்த போராட்டத்துல கலந்துண்டு, பதாகையுடன் அவர் நடந்து போற படத்தை, சமூக வலைதளத்துல பதிவிட்டு, தி.மு.க.,வினருக்கு பிரவீன் பதிலடி குடுத்திருக்கார் ஓய்...’’ என்றார் குப்பண்ணா.
‘‘தொழில் துறை நிலத்தை ஆக்கிரமிக்கிறாங்க பா...’’ என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
‘‘சென்னை மாநகராட்சியின் மணலி மண்டலம், 19வது வார்டில் பாலசுப்பிரமணியம் நகர் இருக்கு... இந்த நகர்ல பாதி இடம், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகமான, ‘டிட்கோ’வுக்கு சொந்தமானது பா...
‘‘இந்த வார்டு புழல் ஏரியின் உபரி நீர் கால்வாய் ஓடும் பகுதிங்கிறதால, சாதாரண மழைக்காலத்துலயே இங்க இருக்கும் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துடும்... இந்த நகர்ல இருக்கிற டிட்கோவுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலங்களை, ‘பிளாட்’ போட்டு சிலர் வித்துட்டு இருக்காங்க பா...
‘‘இது சம்பந்தமா, மணலி மண்டல கூட்டத்திலும் கவுன்சிலர்கள் புகார் சொல்லியிருக்காங்க... ஆனாலும், டிட்கோ நிலம் ஆக்கிரமிப்பு தொடருது... ‘இப்படி எல்லா இடங்களையும் ஆக்கிரமிச்சு குடியிருப்புகளை உருவாக்கிட்டா, மழைக்காலத்துல மீட்புப் பணிக்கு நாங்க தான் திண்டாட வேண்டியிருக்கும்’னு மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் புலம்புறாங்க பா...’’ என்றார் அன்வர்பாய்.
‘‘ஆடியோவால கலக்கத்துல இருக்காவ வே...’’ என, கடைசி தகவலுக்கு மாறினார் பெரியசாமி அண்ணாச்சி.
‘‘யாரை சொல்றீங்க பா...’’ என கேட்டார் அன்வர்பாய்.
‘‘சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., சார்பில், ஏகப்பட்ட நிர்வாகப் பணிகளும் நடக்கு...
‘‘அதுல, கோயம்பேடு மார்க்கெட், கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டை நிர்வகிக்க, டி.ஆர்.ஓ., அந்தஸ்துல அதிகாரிகள் இருக்காவ வே... இவங்களுக்கு கீழே பல அதிகாரிகளும், ஊழியர்களும் இருக்காவ...
‘‘ஒரு டி.ஆர்.ஓ.,வும், சுருக்கெழுத்தரும் சமீபத்துல மொபைல் போன்ல பேசிய ஆடியோ, சி.எம்.டி.ஏ., அலுவலக, ‘வாட்ஸாப்’ குழுவுல பரவுச்சு வே...
‘‘அதுல, பல்வேறு பிரிவுகள்ல அதிகாரிகள் செய்ற முறைகேடுகள் பத்தி, ரெண்டு பேரும் பேசியிருந்தாவ... உடனே, அதுல பேசியவங்க மேலயும், ஆடியோவை வெளியிட்ட ஊழியர்கள் மேலயும் நடவடிக்கை எடுக்க, உயர் அதிகாரிகள் முடிவு செஞ்சாவ வே...
‘‘ஆனா, ‘எங்க மேல நடவடிக்கை எடுத்தா, இதுபோல மேலும் பல ஆடியோக்களை வெளியிடுவோம்’னு சம்பந்தப்பட்டவங்க மிரட்டியதால, அதிகாரிகள் பின்வாங்கிட்டாவ... இப்பவும், எந்த நேரத்துல என்ன ஆடியோ வெளியாகுமோன்னு அதிகாரிகள் தரப்பு அச்சத்துல இருக்கு வே...’’ என முடித்தார் பெரியசாமி அண்ணாச்சி.
விவாதம் முடிவுக்கு வர, பெரியவர்கள் கிளம்பினர்.
