/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ரூ.3 கோடிக்கு பங்களா கட்டும் பி.ஏ.,
/
ரூ.3 கோடிக்கு பங்களா கட்டும் பி.ஏ.,
PUBLISHED ON : ஜன 20, 2024 12:00 AM

''பொங்கல் பரிசு தராம ஏமாத்திட்டாங்க பா...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
''யாருக்கு வே...'' எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''தர்மபுரி மாவட்டத்துல, தி.மு.க., ஒன்றிய, நகர மற்றும் கிளை செயலர்களுக்கு தலைமையில இருந்து, தீபாவளிக்கு, 'சிறப்பு கவனிப்பு' செஞ்சாங்க... இப்ப, பொங்கல் பரிசா, நகர செயலர்களுக்கு 50,000, ஒன்றிய செயலர்களுக்கு தலா, 1.50 லட்சம் ரூபாய் குடுத்திருக்காங்க பா...
''அதுவும் இல்லாம, நகர, ஒன்றியத்தில் துணை பொறுப்புகள்ல இருக்கிறவங்க மற்றும் பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கும் தகுதிக்கேற்ப ரொக்கப் பரிசு குடுத்தாங்க... ஆனா, 23 சார்பு அணிகளின் மாவட்ட நிர்வாகிகளுக்கு எதுவும் தரலை பா...
''தீபாவளிக்கும் இவங்களை கவனிக்கலை... சரி, பொங்கலுக்காவது தருவாங்கன்னு எதிர்பார்த்து இருந்தவங்களை ஏமாத்திட்டாங்க பா...
''ஏற்கனவே, 'அனைத்து ஒப்பந்த பணிகளையும் ஒன்றிய, நகர செயலர்களுக்கே குடுத்துடுறாங்க... அவங்களுக்கு இணையா கட்சி பணியாற்றும் எங்களை மட்டும் கண்டுக்காதது என்ன நியாயம்'னு சார்பு அணியினர் புலம்புறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''சுனிலை கழற்றி விட்டதுக்கு ரெண்டு காரணங்கள் இருக்கு ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''லோக்சபா தேர்தலுக்கு காங்கிரசுக்கு ஆலோசனை வழங்க, கர்நாடகாவை சேர்ந்த சுனில் கனுகோலுவை நியமிச்சிருந்தா... இவரை, சமீபத்துல அந்த பதவியில இருந்து துாக்கிட்டா ஓய்...
''அதாவது, காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்வு விவகாரத்துல, ராகுல், பிரியங்கா, கார்கேன்னு மூணு கோஷ்டிகளை சுனில் உருவாக்கிட்டாராம்...
''இதே சுனில் தான், அ.தி.மு.க., வுக்கு தேர்தல் வியூக வகுப்பாளரா இருந்தப்ப, பழனிசாமி, பன்னீர்செல்வம்னு ரெண்டு அணியா பிரிச்சு செயல்பட வச்சார்... அப்ப, அவர் போட்ட விதை தான், இன்னைக்கும் அவா பிரிஞ்சு நிற்க காரணமா இருக்கு ஓய்...
''அதே பிரித்தாளும் சூழ்ச்சியை காங்கிரஸ்லயும் காட்டியிருக்கார்... அதுவும் இல்லாம, 'சில மாநிலங்கள்ல பா.ஜ., ஜெயிக்கறதுக்கு வசதியா, காங்கிரசுக்கு, 'டம்மி' வேட்பாளர் பட்டியலை பரிந்துரை பண்ணிட்டார்'னும் சுனில் மேல புகார் வந்திருக்கு... இதனால, சுதாரிச்ச மேலிடம், சுனிலுக்கு, 'கல்தா' குடுத்துடுத்து ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''கிட்டத்தட்ட, 3 கோடி ரூபாய்ல வீடு கட்டுறாருங்க...'' என, கடைசி தகவலுக்கு மாறினார் அந்தோணிசாமி.
''அட, 3 கோடி ரூபாய்ல கட்டுனா அது வீடில்லை... பங்களா ஓய்...'' என, சிரித்தார் குப்பண்ணா.
''அதுவும் சரி தான்... 'பால்' மனம் கொண்ட அமைச்சர் ஒருத்தர் அடிக்கடி சர்ச்சையில சிக்கியதால, அவரை வீட்டுக்கு அனுப்பிட்டு, இன்னொருத்தரிடம் அந்த துறையை குடுத்தாங்களே... பழைய அமைச்சரிடம் பி.ஏ.,வா இருந்தவரே, புதியவரிடமும் அதே பதவியில ஒட்டிக்கிட்டாருங்க...
''கிட்டத்தட்ட மூணு வருஷமா துறையில ஊறிட்டதால, எப்படி எப்படி, 'கட்டிங்' வசூலிக்கிறது என்பது இவருக்கு ரொம்பவே அத்துப்படி... இப்ப, இந்த பி.ஏ., தன் சொந்த ஊரான, நெல்லை, வண்ணாரப்பேட்டையில, 3 கோடி ரூபாய்க்கு பங்களா கட்டிட்டு இருக்காருங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
''என் அப்பனே, செந்திலாண்டவா...'' என்றபடியே அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.