மீண்டும் தலைதுாக்கும் அ.தி.மு.க., ஆதரவு நிறுவனம்!
மீண்டும் தலைதுாக்கும் அ.தி.மு.க., ஆதரவு நிறுவனம்!
PUBLISHED ON : செப் 09, 2026 12:00 AM

நாளிதழை மடித்தபடியே, “தியாகிகள் ஸ்துாபியை பந்தாடுறாங்க பா...” என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
“எந்த ஊருல வே...” என கேட்டார் பெரியசாமி அண்ணாச்சி.
“சுதந்திர போராட்ட காலத்துல, 1942ல், 'வெள்ளையனே வெளியேறு' என்ற போராட்டத்தை நடத்தினாங்களே... இதன் நினைவா, மதுரை தமுக்கம் மைதானம் பக்கத்துல, தியாகிகள் ஸ்துாபி அமைச்சிருந்தாங்க பா...
“அந்த பகுதியில மேம்பாலம் கட்டியதால, ஸ்துாபியை அப்புறப்படுத்திட்டாங்க... 'அதை, காந்தி மியூசியத்தில் வைக்கணும்'னு தியாகிகள் சங்கமும், 'கலெக்டர் அலுவலகம் பக்கமிருக்கும் ரவுண்டானாவில் வைக்கலாம்'னு சிலரும் சொன்னதால, மாவட்ட நிர்வாகம் எந்த முடிவும் எடுக்காம இருந்துச்சு பா...
“இந்த சூழல்ல, மதுரை வடக்கு தொகுதி த.வெ.க., - எம்.எல்.ஏ., கல்லாணை, கலெக்டர் அலுவலகம் பக்கம் ரவுண்டானாவில் ஸ்துாபியை வச்சு, திறந்தும் வச்சுட்டாரு... மாவட்ட பொறுப்பு அமைச்சரான நிர்மல்குமார், கலெக்டர்னு யாருக்குமே இது தெரியாது... இதனால, கல்லாணை மீது எல்லாரும் அதிருப்தியில இருக்காங்க பா...” என்றார் அன்வர்பாய்.
“துணிச்சலா பணம் வாங்குறாங்க...” என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
“திருச்சியில் ஏற்கனவே இருந்த பெண் கல்வி அதிகாரிக்கு, விதிகளை மீறி மறுபடியும் அதே இடத்துல பணி ஒதுக்கியிருக்காங்க... ஏற்கனவே, ஆசிரியர்களிடம் பணம் வசூல் செஞ்சதா, இவங்க மீது புகார்கள் இருக்குதுங்க...
“இப்ப, இது சம்பந்தமா விசாரணை நடக்கு... அதேநேரம், மாவட்ட கல்வித் துறை உயர் அதிகாரிகள் ஆதரவு பெண் அதிகாரிக்கு இருக்கிறதால, புகார் குடுத்த ஆசிரியர்கள் இப்ப விசாரணையில உண்மையை சொல்ல தயங்குறாங்க...
“பெண் அதிகாரியிடம் மாற்றுப்பணி, நிரவல் பணின்னு எந்த கோரிக்கையுடன் ஆசிரியர்கள் வந்தாலும், பணம் வாங்காம எந்த காரியத்தையும் முடிச்சு தர மாட்டாங்க... அரசு அலுவலகங்கள்ல நேரடியாக லஞ்சம் வாங்க பலரும் பயப்படுற சூழல்லயும், இவங்க எதை பத்தியும் கவலைப்படாம, பணத்தை வாங்கி கைப்பையில் போட்டுக்கிறாங்க...” என்றார் அந்தோணிசாமி.
ஒலித்த மொபைல் போனை எடுத்த குப்பண்ணா, “ரெஜி பெஞ்சமின் மேடம்... சாயந்தரம் பேசறேன்...” என கூறி வைத்தபடியே, “மறுபடியும் தலை துாக்கறா ஓய்...” என்றார்.
“யாரை சொல்றீங்க பா...” என கேட்டார் அன்வர்பாய்.
“அ.தி.மு.க., ஆட்சியில், கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் எல்லாரையும், 'மாஜி' அமைச்சரின் ஆசி பெற்ற மூன்றெழுத்து ஒப்பந்த நிறுவனத்தினர், தங்களது கட்டுப்பாட்டில் வச்சிருந்தா... பல கோடி ரூபாய் பெரிய பணிகளை இவாளே எடுத்துண்டு, சின்ன சின்ன வேலைகளை மற்ற ஒப்பந்ததாரர்களுக்கு பிரிச்சு குடுப்பா ஓய்...
“தி.மு.க., ஆட்சியில் அஞ்சு வருஷமும் சத்தமில்லாம இருந்த இந்த நிறுவனத்தினர், த.வெ.க., ஆட்சியில தலைதுாக்க ஆரம்பிச்சிருக்கா... மாநகராட்சி ஒப்பந்ததாரர்களை மறுபடியும் தங்களது கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வர பார்க்கறா ஓய்...
“அதுவும் இல்லாம, அதிகாரிகளை மிரட்டி வழிக்கு கொண்டு வர்றதுக்காக, தி.மு.க., ஆட்சியில் செய்த வேலைகளில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டுகளை பரப்பறா... மாநகராட்சி உயர் அதிகாரியும் அவங்க கட்டுப்பாட்டுல சிக்கிட்டதா, அங்கிருக்கும் ஊழியர்கள் எல்லாம் பேசிக்கறா ஓய்...” என முடித்தார் குப்பண்ணா.
“வேலுமணி, ரவி தேஜா இப்படி உட்காருங்க... அந்த கே.சி.பி., மேட்டர் என்னாச்சுங்க...” என நண்பர் களிடம் அந்தோணிசாமி கதை பேச, மற்றவர்கள் கிளம்பினர்.
