கடைகளில் வசூல் வேட்டை நடத்தும் த.வெ.க., நிர்வாகி!
கடைகளில் வசூல் வேட்டை நடத்தும் த.வெ.க., நிர்வாகி!
PUBLISHED ON : செப் 08, 2026 12:00 AM

பில்டர் காபியை உறிஞ்சியபடியே, “தலைவரை நியமிக்கணும்னு கேக்கறா ஓய்...” என, அரட்டையை ஆரம்பித்தார் குப்பண்ணா.
“எந்த துறைக்கு வே...” என கேட்டார் பெரியசாமி அண்ணாச்சி.
“த.வெ.க., ஆட்சிக்கு வந்து நாலு மாசம் ஆகியும் அரசு, 'கேபிள் டிவி' நிறுவனத்துக்கு இன்னும் தலைவரை நியமிக்கல... இந்த நிறுவனத்தின் முக்கிய, 'சர்வர்' முடங்கி ஒரு மாசமாயிடுத்து... இதனால, 'ரீசார்ஜ்' செய்ய முடியாம, 'ஆப்பரேட்டர்'கள் எல்லாம் தவிக்கறா ஓய்...
“அ.தி.மு.க., ஆட்சியில் தான், அரசு கேபிள் நிறுவனத்தை துவங்கி, அதுக்கு தலைவரா முன்னாள் அமைச்சர் ஒருத்தரை ஜெயலலிதா நியமிச்சாங்க... இப்ப அவர், த.வெ.க.,வுல இருக்கார்... அரசு கேபிள் டிவி தலைவர் பதவியை கைப்பற்ற திட்டமிட்டே, ஆளுங்கட்சியில் அவர் சேர்ந்திருக்கறதா சொல்றா ஓய்...
“அவர் தலைவரா இருந்தப்ப, குறிப்பிட்ட தனியார் நிறுவனத்துக்கு ஆதரவா செயல்பட்டு, அரசு கேபிள் நிறுவனத்தை முடக்க முயற்சி பண்ணியிருக்கார்... இதனால, 'அவரிடம் தலைவர் பதவியை குடுத்துட்டா, அரசு கேபிள் நிறுவனத்தை இழுத்து மூடிடுவார்... அதனால, நிர்வாக திறமையுள்ள ஒருத்தரை தலைவரா போட்டு, கேபிள் நிறுவனத்தை காப்பாத்தணும்'னு, ஆப்பரேட்டர்கள் எல்லாம் சொல்றா ஓய்...” என்றார் குப்பண்ணா.
-“ராதாகிருஷ்ணன், தள்ளி உட்காருங்க...” என்ற அந்தோணிசாமியே, “இதயத்தை வித்துட்டாங்களான்னு சந்தேகம் வருதுங்க....” என்றார்.
“எந்த ஊருல பா...” என கேட்டார் அன்வர்பாய்.
“சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது வாலிபர் ஒருத்தர் சமீபத்துல விபத்துல சிக்கி, மதுரை தனியார் மருத்துவமனையில், மூளைச்சாவு நிலைக்கு போயிட்டார்... அவரது இதயம், சிறுநீரகங்கள், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகளை, குடும்பத்தினர் தானமா குடுத்தாங்க...
“தானமா கிடைச்ச இதயத்தை, பெரம்பலுார் மாவட்டம், சிறுவாச்சூர்ல இருக்கிற, தி.மு.க., பிரமுகரின் மருத்துவமனையில சிகிச்சையில் இருந்த, புதுச்சேரியைச் சேர்ந்த 43 வயசு நோயாளிக்கு பொருத்தியிருக்காங்க...
“இந்த மருத்துவமனையில ஏற்கனவே, 'கிட்னி' திருட்டு நடந்ததா, கடந்த தி.மு.க., ஆட்சியில் புகார் எழுந்துச்சு... தமிழகத்துல இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக, 78 பேர் முன்பதிவு செய்து, ஒரு வருஷமா காத்துட்டு இருக்காங்க...
“ஆனா, போன மாசம் 12ம் தேதி பதிவு செஞ்ச புதுச்சேரி நோயாளிக்கு இதயம் பொருத்தியிருக்கிறதால, தானமா கிடைச்ச இதயத்தை பல லட்சம் ரூபாய்க்கு வித்துட்டாங்களோ என்ற சந்தேகம் எழுந்திருக்குதுங்க...” என்றார் அந்தோணிசாமி.
“கதிரவன், இதையும் கேட்டுட்டு கிளம்பும்...” என்ற பெரியசாமி அண்ணாச்சியே, “மாமூல் வாங்க ஆரம்பிச்சிட்டாவ வே...” என்ற படியே தொடர்ந்தார்...
“சென்னை மயிலாப்பூர் மேற்கு பகுதி, த.வெ.க., பிரமுகர், வசூல் வேலையை ஆரம்பிச்சிட்டாரு... இவரது ஆதரவாளர்கள் பெரிய கடைகள் துவங்கி, சாலையோர கடைகள்னு எதையும் விட்டு வைக்காம, வசூல் வேட்டை நடத்துதாவ வே...
“கட்சி கூட்டம் நடத்தணும்... பேனர், போஸ்டர் அடிக்கணும்னு சொல்லியே பணம் கேட்காவ... பணம் தர மறுத்தா, 'மாநகராட்சி அதிகாரிகளை வச்சு நடவடிக்கை எடுப்போம்'னு மிரட்டுதாவ... இதனால வியாபாரிகள் எல்லாம், 'இது தான் துாய ஆட்சியா'ன்னு புலம்பிட்டு இருக்காவ வே...” என முடித்தார் பெரியசாமி அண்ணாச்சி.
“பிரசாந்த், நாளைக்கு பார்க்கலாம் பா...” என்றபடியே அன்வர்பாய் எழ, மற்றவர்களும் கிளம்பினர்.
