/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
பத்திரப்பதிவுக்கு பேரம் பேசும் பி.ஏ.,க்கள்!
/
பத்திரப்பதிவுக்கு பேரம் பேசும் பி.ஏ.,க்கள்!
PUBLISHED ON : ஜன 23, 2024 12:00 AM

இஞ்சி டீயை உறிஞ்சியபடியே, ''கருணாநிதி பெயர்ல நடந்த விழாவை, தி.மு.க.,வினரே புறக்கணிச்சுட்டாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''எந்த ஊருல வே...'' எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''திருவள்ளூர் மாவட்டம், ஆவடி தொகுதி, பட்டாபிராமில் உள்ள தனியார் கல்லுாரியில, சமீபத்துல, 'சட்டமன்ற நாயகர் கலைஞர்' என்ற கருத்தரங்கம் நடத்த ஏற்பாடு செஞ்சாங்க... இதுல, சபாநாயகர் அப்பாவு, கைத்தறித் துறை அமைச்சர் காந்தி, சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் பங்கேற்க இருப்பதா அறிவிச்சிருந்தாங்க...
''ஆனா, பீட்டர் அல்போன்ஸ், திருவள்ளூர் கலெக்டர் பிரபு சங்கர் தவிர, வேற யாருமே நிகழ்ச்சிக்கு வரலைங்க... பேனர்ல ஆவடி எம்.எல்.ஏ.,வான முன்னாள் அமைச்சர் நாசர் பெயரை போடாததால, அவரது ஆதரவாளர்கள் யாரும் வரலைங்க...
''பூந்தமல்லி தி.மு.க., - எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமியும் பங்கேற்கலைங்க... தங்களது முன்னாள் தலைவர் பெயர்ல நடந்த கருத்தரங்கையே தி.மு.க.,வினர் புறக்கணிச்சது, தொண்டர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்குதுங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''காலண்டர் கிடைக்காம பக்தர்கள் அல்லாடறா ஓய்...'' என, அடுத்த மேட்டருக்கு மாறிய குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''மதுரை மீனாட்சி அம்மன் கோவில்ல, வருஷம் தோறும், கோவிலின் முக்கிய திருவிழாக்கள், விசேஷ பூஜைகள் பற்றிய விபரங்கள் அடங்கிய காலண்டரை வெளியிடுவா... இந்த வருஷத்துக்குரிய காலண்டர்களை கொஞ்சம் கொஞ்சமா அச்சடிச்சு, கோவிலுக்கு அனுப்பறா ஓய்...
''இந்த காலண்டரை வாங்கறதுக்காகவே, வெளியூர்கள்ல இருந்து வர்ற பக்தர்கள் பலர், பற்றாக்குறையால ஏமாற்றத்துடன் திரும்பி போறா... 'திருப்பதி தேவஸ்தானம் மாதிரி, ஆன்லைன்ல புக்கிங் செய்றவாளுக்கு அவாவா ஆத்துக்கே காலண்டரை அனுப்பி வைக்கற சிஸ்டத்தை, தமிழக அறநிலையத் துறையும் அறிமுகப்படுத்தலாமே'ன்னு பக்தர்கள் ஆதங்கப்படறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''கட்டிங் வெட்டுனா தான் பத்திரத்தை பதிவு பண்ணுதாவ வே...'' என, கடைசி தகவலுக்கு கட்டியம் கூறினார் அண்ணாச்சி.
''விளக்கமா சொல்லுங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''தமிழகம் முழுக்க ரியல் எஸ்டேட் வர்த்தகர்கள், ஏக்கர் கணக்குல நிலம் வாங்கி, வீட்டு மனைகளா பிரிச்சு விற்பனை பண்ணுதாங்கல்லா... புதுசா அமைக்கிற மனை பிரிவுகளுக்கு பத்திரப்பதிவுக்கு போனா, உடனே பத்திரம் போட மாட்டேங்காவ வே...
''புரமோட்டர்களிடம்,'துறை மேலிடத்தின்பி.ஏ.,க்களிடம் வாட்ஸாப் கால்ல பேசுங்க'ன்னு சொல்லி, ரெண்டு நம்பர்களை குடுக்காவ... அதுல பேசினா, அவங்க, ஒரு சென்டுக்கு, 2,000 ரூபாய் வீதம் கணக்கு போட்டு, 'கட்டிங்' குடுங்கன்னு பேரம் பேசுதாவ வே...
''எந்த ஊர்ல மனைப்பிரிவு போட்டிருந்தாலும் பரவாயில்ல... பி.ஏ.,க்கள் சொல்ற ஆட்களிடம் தொகையை கணக்கிட்டு குடுத்துட்டா, மறுநாளே பத்திரம் பதிவு பண்ணி குடுத்துடுதாவ...
''ஏற்கனவே, மனைப்பிரிவுக்கு அப்ரூவல் வாங்கவே பல லட்சங்கள் செலவு செய்ற புரமோட்டர்கள், பத்திரப்பதிவு துறையிலயும் நடக்கிற இந்த வசூல் வேட்டையால, ரொம்பவே பாதிக்கப்பட்டிருக்காவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
பெஞ்சில் மேலும் சிலர் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.

