/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
சொந்த தொகுதிக்கு ' டாட்டா ' காட்டும் பா.ஜ., தலைவர்!
/
சொந்த தொகுதிக்கு ' டாட்டா ' காட்டும் பா.ஜ., தலைவர்!
சொந்த தொகுதிக்கு ' டாட்டா ' காட்டும் பா.ஜ., தலைவர்!
சொந்த தொகுதிக்கு ' டாட்டா ' காட்டும் பா.ஜ., தலைவர்!
PUBLISHED ON : ஜன 08, 2026 03:29 AM

ஏலக்காய் டீயை பருகியபடியே, ''மதியமே போதை ஏத்திக்கிறாங்க பா...'' என, அரட்டையை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
''யார் ஓய் அது...'' என கேட்டார், குப்பண்ணா.
''செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சப் - டிவிஷனுக்கு உட்பட்ட பகுதியில், எட்டு போலீஸ் ஸ்டேஷன்கள் இருக்கு... இதுல, 200க்கும் மேற்பட்ட போலீசார் பணியில இருக்காங்க பா...
''சீக்கிரமே சட்டசபை தேர்தல் வர்றதால, ஒரே ஸ்டேஷன்ல, மூணு வருஷத்துக்கு மேல இருக்கிற போலீசாரை இடமாற்றம் செய்ய இருக்காங்க... இடமாறுதல் வந்தா, எல்லாரும் வேற வேற இடங்களுக்கு பிரிஞ்சி போயிடுவோம்கிறதால, மதிய உணவுக்கு முன்னாடி, ஸ்டேஷன்லயே போலீசார், 'சரக்கு' அடிக்கிறாங்க பா...
''குறிப்பா, எஸ்.எஸ்.ஐ.,க்கள் மற்றும் ஏட்டுகள், மதியம் ஆனதும் போதை ஏத்திக்கிறாங்க... இவங்களிடம் புகார் அளிக்க வர்றவங்களிடம், போதையில ஏட்டிக்கு போட்டியா கேள்வி கேட்கிறதால, சில நேரம் கடும் வாக்குவாதம் ஏற்படுது பா...'' என்றார், அன்வர்பாய்.
''அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை ஆதரிக்க, ஆறு நிபந்தனைகள் விதிச்சிருக்காங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க., இளைஞரணி செயலர் வினோஜ் தலைமையில், வைகுண்ட சாமி தர்ம பரிபாலன சபை நிர்வாகிகள், சமீபத்துல அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை பார்த்து பேசியிருக்காங்க...
''அப்ப, 'விளவங்கோடு சட்டசபை தொகுதியில், 80 சதவீதம் நாடார் சமுதாயத்தினர் வசிக்கிறதால, அங்க நாடார் வேட்பாளரையே நிறுத்தணும்... அரசு பணி மற்றும் கல்வியில் நாடார் சமுதாயத்திற்கு, 10 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கணும்...
''மழை காலங்கள்ல வேலையில்லாம இருக்கும் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள், மரம் ஏறும் தொழி லாளர்களுக்கு உதவித் தொகை தரணும்... அய்யா வைகுண்டர் பெயர்ல கன்னியாகுமரி மாவட்டத்துல பல்கலைக் கழகம் அமைக்கணும்' என்பது உட்பட ஆறு கோரிக்கைகளை வச்சிருக்காங்க...
''அதோட, 'எங்க சபைக்கு, 400 கிளைகள் இருக்கு... ஒரு கிளையில், 100 முதல் 200 குடும்பத்தினர் உறுப்பினர்களா இருக்காங்க... இந்த கோரிக்கைகளை, நீங்க தேர்தல் வாக்குறுதி களா அறிவிச்சா, எங்க ஓட்டு உங்களுக்கு தான்'னு சொல்லிட்டு போயிருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''திருநெல்வேலிக்கு, 'டாட்டா' காட்ட முடிவு பண்ணிட்டாரு வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.
''யாரை சொல்றீங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், திருநெல்வேலி தொகுதி, பா.ஜ., - எம்.எல்.ஏ.,வா இருக்காருல்லா... இவர், இந்த தொகுதியில் ஒரு முறை ஜெயிச்சா, அடுத்த தேர்தல்ல ஜெயிக்க மாட்டாரு வே...
''ஏன்னா, 2001, 2011, 2021ல் ஜெயிச்சவர், 2006, 2016ல் தோத்து போயிட்டாரு... ஜோதிடத்தில் ரொம்பவே நம்பிக்கை வச்சிருக்கிற இவர், இந்த முறை இங்க நிற்க வேண்டாம்னு முடிவு பண்ணிட்டாரு வே...
''பக்கத்துல இருக்கிற விருதுநகர் மாவட்டம், சாத்துார் தொகுதிக்கு குறி வச்சிருக்காராம்... இந்த தொகுதியில, அவரது தேவர் சமுதாயத்தினர் ஓட்டுகள் அதிகம் இருக்கு...
''இதனாலயே, 'தமிழகம் தலைநிமிர தமிழனின் நடைபயணம்' என்ற தன் பிரசார பயணத்தை, தன் சொந்த மாவட்டமான திருநெல்வேலியில் அவர் நடத்தவே இல்ல வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
பேச்சு முடிய, பெரியவர்கள் நடையை கட்டினர்.

