/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
எஸ்.ஐ.ஆர்., பணி டிச., 4க்குள் முடியுமா?
/
எஸ்.ஐ.ஆர்., பணி டிச., 4க்குள் முடியுமா?
PUBLISHED ON : நவ 28, 2025 03:43 AM
54 சதவீதம் படிவம் மட்டுமே பெறப்பட்டுள்ளது
திருவள்ளூர்: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணியில், தற்போது வரை, 54 சதவீதம் வரை நிறைவு பெற்றுள்ளது. மீதம் உள்ள, 46 சதவீதம் படிவத்தினை ஒரு வாரத்திற்குள் திரும்ப பெற, அவகாசம் உள்ள நிலையில், அதற்குள் அப்பணியை, ஓட்டுச் சாவடி நிலைய அலுவலர்கள் நிறைவேற்றுவரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்காக, ஓட்டுச் சாவடி நிலைய அலுவலர் மற்றும் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தொடர்ந்து, கடந்த 4ம் தேதி முதல், மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளிலும் உள்ள வாக்காளர்களின் வீடுகளுக்கு, படிவம் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளிலும், 17,61,262 ஆண்; 18,20,157 பெண்; 807 திருநங்கை என, மொத்தம் 35,82,226 பேர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
அவர்கள் அனைவருக்கும், 3,699 ஓட்டுச் சாவடி நிலைய அலுவலர்கள் வீடு தேடிச் சென்று, விண்ணப்ப படிவத்தினை வழங்கி, அவற்றை திரும்ப பெற்று வருகின்றனர்.
பெரும்பாலான இடங்களில், ஓட்டுச் சாவடி நிலைய அலுவலர்களுக்கு உதவியாக தன்னார்வலர்கள் பணிபுரிந்து, விண்ணப்ப படிவத்தை வழங்கி, அதை பூர்த்தி செய்து திரும்ப பெற்று வருகின்றனர்.
இதுவரை, படிவம் அளிக்கப்பட்ட 35.82 லட்சம் பேரில், 20 லட்சம் பேர் மட்டுமே திருப்பி வழங்கி உள்ளனர். மீதமுள்ள 16 லட்சம் பேரிடமிருந்து இதுவரை படிவம் வாங்கப்படாமல் உள்ளது.
கிராமப்பகுதிகளிலும், நகர் பகுதியில் சில இடங்களிலும், படிவத்தினை முறையாக பூர்த்தி செய்யாமல், வாக்காளர்கள் தங்கள் கைவசமே வைத்துள்ளனர்.
உதாரணமாக, நகர் பகுதியான அம்பத்துாரில் 45, மதுரவாயலில் 41 சதவீதம் பணி மட்டுமே நிறைவு பெற்றுள்ளது. அதே சமயம், கிராமப்பகுதியான திருத்தணியில் 70 சதவீதம் பணி நிறைவடைந்துள்ளது.
மாவட்டம் முழுதும், 54 சதவீதம் மட்டுமே படிவம் அளித்து, பூர்த்தி செய்து திரும்ப பெறப்பட்டு உள்ளது. வரும், டிச., 4ம் தேதிக்குள், வழங்கிய படிவத்தை பூர்த்தி செய்து, அனைத்தையும் திரும்ப பெற்று, தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இறந்தோர், வேறு தொகுதி, மாநிலம் மற்றும் நாடுகளுக்கு குடிபெயர்ந்தோர், இரட்டை பதிவு போன்ற குறைபாடுகளை களைந்து, வரைவு வாக்காளர் பட்டியலை டிச., 9ம் தேதி வெளியிட வேண்டும்.
அதற்குள் மீதமுள்ள, 46 சதவீத படிவத்தினை, இன்னும் 7 நாட்களுக்குள் திரும்ப பெற்று, அதனை கணினியில் பதிவேற்றம் செய்யப்படுமா என, சமூக ஆர்வலர்கள் சந்தேகிக்கின்றனர்.
இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் பிரதாப் கூறியதாவது:
தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடங்கப்பட்டு, டிச., 4 வரை, படிவங்களை திரும்ப பெற்று, கணினி மயமாக்கல் செய்து வருகின்றனர்.
வரைவு வாக்காளர் பட்டியல், டிச., 9ம் தேதி வெளியிடப்பட உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளிலும், 54 சதவீதம் பணி நிறைவடைந்துள்ளது.
வாக்காளர் அனைவரும், டிச., 4 வரை காத்திருக்காமல், இன்னும் ஓரிரு நாட்களுக்குள், படிவத்தை திரும்பி தர வேண்டும். தகுதியுள்ள ஒரு வாக்காளர் கூட பட்டியலில் விடுபடக் கூடாது என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

