/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
'சென்னை ஒன்' செயலி 3.70 லட்சம் பேர் பதிவிறக்கம்
/
'சென்னை ஒன்' செயலி 3.70 லட்சம் பேர் பதிவிறக்கம்
PUBLISHED ON : அக் 22, 2025 12:00 AM
சென்னை: போக்குவரத்து குழுமமான 'கும்டா' அறிமுகம் செய்த, 'சென்னை ஒன்' செயலியை, இரண்டே வாரத்தில், 3.70 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
சென்னையில் மெட்ரோ ரயில், மின்சார ரயில், மாநகர பேருந்துகளில் பயணிக்க ஒருங்கிணைந்த முறையில் டிக்கெட் பெறும் திட்டத்தை 'கும்டா' உருவாக்கியது.
இதன்படி, 'சென்னை ஒன்' என்ற பெயரில் புதிய செயலி, செப்., 22ல் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த செயலியில், பொது மக்கள் வீட்டில் இருந்து, எங்கு எந்த போக்குவரத்து சேவையை பயன்படுத்தி செல்ல வேண்டும் என்று திட்டமிடலாம்.
இதன் அடிப்படையில், ஆன்லைன் முறையில் பணம் செலுத்தி, கியூ.ஆர்., குறியீடு மூலம் டிக்கெட் பெற்று, அந்தந்த போக்குவரத்து சேவைகளில், தடையின்றி பயணிக்கலாம்.
இந்நிலையில், 'சென்னை ஒன்' செயலியின் செயல் பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதில், முதல் இரண்டு வாரங்களில் மட்டும், இந்த செயலியை, 3.70 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளதாக, 'கும்டா' அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இந்த செயலியை பயன்படுத்தி முதல் இரண்டு வாரங்களில் மட்டும், 1.53 லட்சம் பேர் டிக்கெட் எடுத்துள்ளனர்.
இதில் பெரும்பாலானோர், மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் பயணியராக உள்ளனர். இதையடுத்து, மாதாந்திர பயண அட்டை பெறுவதற்கும், அதை பயன்படுத்தி பயணிப்பதற்குமான வசதிகள், இதில் சேர்க்கப்பட உள்ளன.
ஒரு குறிப்பிட்ட வழித் தடத்தை தொடர்ந்து பயன்படுத்துவோர், அதை தேர்வு செய்யும் வசதியை ஏற்படுத்த அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.